Published : 18 Mar 2020 07:40 AM
Last Updated : 18 Mar 2020 07:40 AM

கரோனா: மூடிமறைப்பதன் விலை!

கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட முதல் ஒரு மாதத்தில் அது குறித்த தகவல்களை மூடிமறைத்ததற்காக சீனா உலகம் முழுவதிலிருந்தும் கண்டனங்களை எதிர்கொண்டது. அதைப் போலவே, முன்னணி அறிவியலாளர் ஆண்டனி ஃபாச்சி முறையான அனுமதி இல்லாமல் கரோனா பற்றிப் பேசக் கூடாது என்று அமெரிக்கா தடைவிதித்ததற்கும் கண்டங்கள் எழுந்திருக்கின்றன. 1984-லிருந்து ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்களுக்கான தேசிய மையத்தின் இயக்குநராக இருந்துவருபவர் டாக்டர் ஃபாச்சி. ‘சார்ஸ்’, ‘எச்1என்1’, ‘மெர்ஸ்’, ‘எபோலா’ போன்ற புதிய வைரஸ்களை எதிர்கொள்ளப் பெரிதும் உதவியவர் அவர். (ஐஎம்ஏ) கொள்ளைநோயின்போது வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்காமல், இந்தக் கொள்ளைநோயை எதிர்கொள்வதில் சீனாவைப் போன்றே மூடிமறைக்கும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று 3,25,000 மருத்துவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மருத்துவச் சங்கம் கூறியிருப்பது கவலை அளிக்கிறது.

கரோனா குறித்து உலகச் சுகாதார நிறுவனம் தினமும் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறது. ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பாதிப்புகள், மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களை அது பகிர்ந்துகொள்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், கேரளத்தின் சுகாதாரத் துறை அமைச்சரும் தினமும் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அது பாராட்டத்தக்கது. ஆனால், அரசானது மக்களிடம் தகவலைப் பகிர்ந்துகொள்வதை இந்திய மருத்துவச் சங்கம் விரும்பவில்லை. மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள் என்றும், தினசரி வெளியிடப்படும் தகவல்கள் அவர்களிடையே பீதியைக் கிளப்புகிறது என்றும் இந்திய மருத்துவச் சங்கம் கூறுகிறது.

நம்பிக்கையைப் பராமரித்தல்

“விழிப்புணர்வு, சுயஎச்சரிக்கை நடவடிக்கைகள், நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்புகொண் டவர்களைக் கண்டறிதல், தாமே தனிமைப்படுத்திக்கொள்ளுதல்” ஆகியவை அவசியம் என்று இந்திய மருத்துவச் சங்கம் கூறுவது முரணாகவே உள்ளது. நோய்ப்பரவல் குறித்த தகவல்களை அரசு மூன்று நாட்களுக்கு அல்லது ஏழு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடுவதைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டும் என்று இந்தச் சங்கத்தின் பொதுச்செயலர் மருத்துவர் ஆர்.வி. அசோகன் ‘தி இந்து’ நாளிதழிடம் கூறினார். நோயாளிகளின் எண்ணிக்கையை அரசு கூறக் கூடாது என்றும் ‘குறைவு’, ‘மிதம்’, ‘அதிகம்’ போன்ற சொற்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். “எண்ணிக்கையை மக்கள் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? இந்தக் கொள்ளைநோய் மேலும் அதிகரித்து, எண்ணிக்கையை மக்கள் நுணுக்கமாக ஆராய நேரிடும்” என்றார்.

பொதுமக்கள் சார்ந்த மருத்துவப் பிரச்சினை ஒன்றை, குறிப்பாக ஒரு கொள்ளைநோயை எதிர்கொள்ளும்போது முழுதான வெளிப்படைத்தன்மை என்பது மிக முக்கியமானது. தகவல்தான் சமூகத்தில் நம்பிக்கையைக் கட்டமைக்கும், மக்களையும் சகஜமாக வைத்திருக்கும். மக்களிடம் தகவல்களை வெளிப்படையாகக் கூறாமல் அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், கூட்டத்தில் கலக்காமல் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்திய மருத்துவச் சங்கம் எப்படி எதிர்பாக்க முடியும்? உலகளாவிய மருத்துவம் மற்றும் உயிரி-விழுமியங்கள் பற்றிய ஆராய்ச்சியாளரான மருத்துவ ஆனந்த் பான் சொல்வதுபோல், “அரசு வெளிப்படையாக இருக்கும்போதுதான் கொள்ளைநோயானது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும், அந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். நம்பிக்கை என்ற காரணியை மறுதலிக்கக் கூடாது.”

உலகளாவிய எதிர்வினைகள்

பெருகிவரும் இந்தக் கொள்ளைநோய்க்குப் பல்வேறு நாடுகளும் உடனடியாக எதிர்வினையாற்றியுள்ளன. எண்ணிக்கை சீராக அதிகரித்த நிலையிலும் தென் கொரியா அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கும் மரணங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளைப் பகிர்ந்துகொண்டது. மார்ச் 5 அன்று பிரிட்டன், தெரிவிக்கப்பட வேண்டிய நோய்களின் பட்டியலில் கரோனாவைச் சேர்த்தது. இதன் விளைவாக, எல்லா மருத்துவர்களும் நோய்த்தொற்றுகள் குறித்த தகவல்களை இங்கிலாந்தின் பொதுச் சுகாதார அமைப்பிடம் தெரிவிப்பதற்குச் சட்டப்படி கடமைப்பட்டவர்களாகிறார்கள்.

இந்திய அரசு இந்த வகையில் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. எனினும், இன்னும் செய்வதற்கு ஏராளம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தாய்வானிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ளலாம். தாய்வானில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு முறை தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் வாயிலாக அந்த மக்களுக்கு கரோனா குறித்த தகவல்களை அரசு தருகிறது. ‘சார்ஸ்-கோவ்-2’ எப்படிப் பரவுகிறது, சோப்பைக் கொண்டு கைகளைக் கழுவுவதன் முக்கியத்துவம் என்ன, எப்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்பதையெல்லாம் குறித்து மக்களுக்குத் தகவல்கள் தரப்படுகின்றன. இதனால், தாய்வானில் நோய்த் தொற்றுகளின் சங்கிலியை எளிதாகக் கண்டறிய உதவுகிறது. சங்கிலித் தொடராக நோயானது தொற்றிக்கொண்டுபோவதை அறுத்தெறிவதில் மக்களும் பங்காற்றினார்கள். எடுத்துக்காட்டாக, குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு அவர்களுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்பதைப் பெற்றோர்கள் சோதித்துப் பார்த்தார்கள்.

சரியான அணுகுமுறை

தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் அறிக்கையை இந்திய மருத்துவச் சங்கம் தருவது இது முதன்முறை அல்ல. காஷ்மீரில் சட்டக்கூறு 370 நீக்கப்பட்டபோது அங்கே ஏற்பட்ட மருத்துவ நெருக்கடியைப் பற்றி மருத்துவ இதழ் ‘லான்செட்’ எடுத்த நிலைப்பாட்டை இந்திய மருத்துவச் சங்கம் எச்சரித்திருந்தது. தற்போதைய காலகட்டத்தில் அந்தச் சங்கத்தின் அறிவுரை ஆபத்தானது. இந்திய மருத்துவச் சங்கமும் அதன் ஊழியர்களும் ஒரு நோய்ப் பரவலின்போது, குறிப்பாகக் கொள்ளைநோயின்போது மேற்கொள்ள வேண்டிய சிறந்த பொது நடவடிக்கைகள் குறித்து அறிந்திருக்கிறார்களா என்றே கேள்வி எழுகிறது.

வெளிப்படைத்தன்மையும் தரவுகளும் மட்டுமல்ல; மூடிமறைப்பதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாததும்கூட பீதியை ஏற்படுத்துகிறது. பொதுமக்களுக்குத் தொடர்ந்து கரோனா குறித்து தகவல்களைத் தருவதும், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறித்துத் தகவல்களைத் தருவதும்தான் அரசு மேற்கொள்ள வேண்டிய சரியான அணுகுமுறையாகும்.

(C) ‘தி இந்து’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x