Published : 17 Mar 2020 07:32 AM
Last Updated : 17 Mar 2020 07:32 AM

அரசுப் பள்ளிகளின் அடித்தளக் கட்டமைப்பை மேம்படுத்துங்கள்!

சூரிய ஒளி மின்னுற்பத்தியை வலியுறுத்தும் சர்வதேசக் கூட்டணியை நிறுவியதும் தலைமை வகிப்பதும் இந்தியாதான். இந்நிலையில், ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு இன்னமும் மின்சார இணைப்புகூட தரப்படவில்லை என்பது மிகப் பெரிய முரண். மத்திய மனிதவள ஆற்றல் துறையுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழு தனது 2020-21 அறிக்கையில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

2017-18 தரவுகளின்படி 56.45% அரசுப் பள்ளிகளில்தான் மின்னிணைப்பு இருக்கிறது. 56.98% பள்ளிகளில்தான் விளையாட்டு மைதானம் இருக்கிறது. 40% பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவரே கிடையாது. சில மாநிலங்களில் மட்டும்தான் எல்லாப் பள்ளிகளுக்கும் மின்னிணைப்பு இருக்கிறது. அரசியல்ரீதியாக முக்கிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 70% பள்ளிகளுக்கு மின்னிணைப்பு இல்லை. மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்துவதற்குத் தனிக் கழிப்பறைகள் கிடையாது. உயர்நிலைப் பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு மாணவிகளுக்குக் கழிப்பறைகளே கிடையாது. மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு ஆய்வுக்கூடங்கள் மூன்றில் ஒரு பங்கு பள்ளிகளில் இல்லை. இதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியிருந்தும்கூட செயல்படுத்தப்படாமல் இருப்பதற்கு மாநில அரசுகளின் அக்கறையின்மைதான் காரணம் என்று எழும் விமர்சனங்களைப் புறந்தள்ளுவதற்கில்லை.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிக்கு வந்ததும் முதல் நூறு நாட்களில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் என்று சிலவற்றை அடையாளம் கண்டது. அதில் கல்விக்கும் முன்னுரிமை இருந்தது. பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மத்திய அரசுப் பள்ளிகளைப் புதிதாகத் திறப்பது ஆகியவற்றுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, பள்ளிகளின் அடித்தளக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டும். எந்தப் பள்ளியிலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்துவிடக் கூடாது. அடுத்த நூறு நாட்களுக்குள் நிறைவேற்றிய வேண்டிய திட்டங்கள் என்று வகுத்து எல்லா அரசுப் பள்ளிகளிலும் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் உற்பத்திப் பிரிவுகளை நிறுவலாம்; கழிப்பறைகள் கட்டித்தரலாம். இதற்காக, பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள், உள்ளாட்சி மன்றங்கள், தன்னார்வத் தொண்டர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். பள்ளிகளோடு சேர்ந்த மைதானங்களுக்கு வாய்ப்பு இல்லாதபட்சத்தில் அருகமைந்திருக்கும் பிற இடங்களைப் பயன்படுத்தலாம்.

மக்கள்தொகையையே நாட்டின் சொத்தாக மாற்றும் லட்சியத்துக்குக் கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதற்குப் பள்ளிக்கூடங்கள் அனைத்து வசதிகளுடன் தன்னிறைவு பெற வேண்டும். இந்தத் தேவைகளுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் விட்டாலோ, நிதி ஒதுக்கியும் திட்டமிட்டுப் பணிகளை முடிக்காமல் விட்டாலோ அரசின் நோக்கங்கள் நிறைவேறாது. பள்ளிக் கல்விக்கும் எழுத்தறிவு இயக்கத்துக்கும் மத்திய அரசு ஒதுக்கிவந்த தொகையில் 27.52% வெட்டப்பட்டிருக்கிறது. இது ரூ.22,725 கோடி ஆகும். கல்வித் துறைக்கான செலவுகள் அதிகரித்துவரும் நிலையில் இத்தகைய குறைப்பு கூடாது. அரசு நடத்தும் பள்ளிகளை மேம்படுத்த மேலும் அதிக நிதி தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகள் மீதான மக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்கு அதன் அடித்தளக் கட்டமைப்பை மேம்படுத்துவது என்பது மிகவும் அடிப்படையானது. இதற்கு முன்னுரிமை தர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x