Published : 16 Mar 2020 09:16 am

Updated : 16 Mar 2020 09:16 am

 

Published : 16 Mar 2020 09:16 AM
Last Updated : 16 Mar 2020 09:16 AM

கரோனா: முன்னுதாரண கேரளம்... செவிலியர் சந்தியா பேட்டி!

nurse-sandhiya-interview

இந்தியாவில் கரோனா தாக்குதலுக்கு உள்ளான மாநிலங்களில், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது கேரளம்தான். வெள்ளப் பேரழிவு, அடுத்து நிபா வைரஸின் தாக்குதல் என்று இரு ஆண்டுகளாகப் பெரும் சங்கடங்களை எதிர்கொண்டுவரும் கேரளம், இந்த ஆண்டில் ஒரே சமயத்தில் இரு தாக்குதல்களை எதிர்கொள்கிறது. ஒருபுறம் கரோனா, இன்னொருபுறம் பறவைக் காய்ச்சல். கரோனாவால் மட்டும் இதுவரை கேரளத்தில் 22 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; 7,677 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள். வெளிநாடுகள் சென்று பணியாற்றுவோர் எண்ணிக்கை கேரளத்தில் அதிகம். விளைவாகவே இங்கு பாதிப்பும் அதிகம். ஆனாலும், கேரள அரசு அசரவில்லை. முன்னெச்சரிக்கை மற்றும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறது.

இத்தாலியிலிருந்து கேரளம் திரும்பிய மூன்று பேரிடமிருந்தே கரோனா வைரஸின் தாக்கம் தொடங்கியது. நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருப்பதே தெரியாமல், அந்த மூவரும் கேரளம் வந்ததும் சகஜமாகத் திருமண வீடு, தேவாலயம், கடைவீதி, உறவினர் வீடுகள் என்று சென்றுவந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்ததும் அரசு செய்த முதல் காரியம், அவர்கள் மூவரும் பயணித்த வழித்தடத்தைக் கையில் எடுத்து 5,000 பேரைக் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவந்ததுதான். ஒருபுறம் கரோனா பாதிப்பு அல்லது சந்தேக அறிகுறிகளோடு தொடர்புகொள்பவர்களை மருத்துவக் குழுவே நேரடியாகச் சென்று கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர, மறுபுறம் மக்களின் பொது நடமாட்டத்தையும் அரசு வெகுவாகக் கட்டுப்படுத்தியிருக்கிறது. கேரளர்களிடம் இயல்பாகவுள்ள விழிப்புணர்வை அரசும் ஊடகங்களும் மேம்படுத்தியிருப்பதை மாநிலத்தில் பயணிக்கும்போது நன்றாகக் கவனிக்க முடிந்தது.


மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் உட்பட மாநிலம் முழுவதிலும் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. சபரிமலை, மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம் என்று பல முக்கியமான வழிபாட்டுத்தலங்கள் யாத்ரீகர்கள் வருகையைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டிருக்கின்றன. திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதோடு, அரசு அலுவலகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவுமுறையும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. கணிசமான நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. பள்ளிக்கூடங்களுக்கும் பகுதி அளவில் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம்விட முக்கியமான அம்சம், கேரளச் சமூகமே பல நிகழ்ச்சிகளை ரத்துசெய்திருப்பதும் வெளிப்போக்குவரத்தைக் குறைத்துக்கொண்டிருப்பதும்தான்.

மக்கள் வெளியே பயணிப்பது எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதைச் சுற்றுலாத் துறைக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பின் வழியாகவே புரிந்துகொள்ளலாம். ஒரு வாரத்தில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேலான வருவாயைக் கேரள சுற்றுலாத் துறை இழந்திருக்கிறது. “ஆயினும், மக்களுடைய உடல் நலன், ஆரோக்கியம் அல்லவா முக்கியம்?” என்று கேட்கிறார்கள் கேரள அரசு அதிகாரிகள்.

கரோனா நோயாளிகளுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன? அவர்கள் எப்படியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்? இதைத் தெரிந்துகொள்ள திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செவிலியர் சந்தியாவிடம் பேசினேன். கரோனாவுக்கு சிகிச்சை அளித்த குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்பதோடு, ‘நீ என்றே சுகுர்தம்’, ‘மழ மேகங்கள பாத்து’ உள்ளிட்ட நாவல்களையும், இன்னும் சில அழுத்தமான சிறுகதைகளையும் மலையாள உலகுக்குக் கொடுத்திருப்பவர் சந்தியா. அவரது சொந்த ஊரான களமச்சேரியில் நடந்த உரையாடல் இது.

கரோனா சிகிச்சைக் குழுவில் இடம்பெற்றது அச்சம் தரவில்லையா?

மருத்துவப் பணியும் சரி; செவிலியப் பணியும் சரி; மக்களுக்குப் பணியாற்றுவதன் மூலம் கடவுளுக்கு நன்றிகூறும் பணிகள் இவை. இதில் அச்சப்பட என்ன இருக்கிறது? நான் ஏற்கெனவே புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில்தான் செவிலியராக இருக்கிறேன். திருச்சூர் மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியாற்ற ஒரு குழு அமைக்கப்பட்டபோது என்னுடைய பெயர் அதில் இல்லை. நானாகத்தான் தலைமைச் செவிலியரிடம் கேட்டு என்னையும் அதில் இணைத்துக்கொண்டேன்.

இதுபோன்ற வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகளில் ஏற்கெனவே ஈடுபட்டது உண்டா?

ஆமாம், இதற்கு முன் நிபா வைரஸ் தாக்குதல் நடந்தபோதும் தடுப்புப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். மருத்துவமனைக்குக் காய்ச்சல் அறிகுறிகளோடு வருபவர்களை நிபா சிறப்புப் பிரிவுக்கு அனுப்பிவைக்கும் பணி அது. பாதுகாப்பான உடைகளெல்லாம் தருவார்கள் என்றாலும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறையும் மாற்ற வேண்டும்; உடலை மறைக்கும் கவுன், கிளவுஸ், ஷூ சூழ மொத்த உடம்பையும் மூடிக்கொள்ள வேண்டும். இப்படி ஏகப்பட்ட வழிமுறைகள் அப்போதே உண்டு. நோயாளிகளைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகையில் மறந்துவிடவோ கொஞ்சம் அசந்துவிடவோ கூடாத விஷயங்கள் இவை. ஏனென்றால், உங்கள் உயிரோடு சேர்த்து அடுத்தவர் உயிரையும் பாதிக்கும் விஷயங்கள் இவையெல்லாம். எல்லாம் முடித்து வீட்டுக்குச் செல்லும்போது அசந்துபோகும். அங்கு சென்ற பிறகும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டும். ஆனாலும், மக்களுக்குத் தொண்டாற்றுவது பெரிய சந்தோஷம் இல்லையா?

கரோனா பணி அனுபவம் எப்படி இருக்கிறது?

நிபாவைக் காட்டிலும் கரோனா தீவிரக் கவனம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. பணியில் இருக்கும்போது முன்புபோலவே கையுறை, முகவுறை, உடல் மூடும் கவுன் எல்லாம் போட்டிருந்தாலும் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை கை கழுவ வேண்டும். கூடவே, அடிக்கடி நாங்கள் உடைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். பணி முடிந்ததும், குளித்துவிட்டுத்தான் சிறப்புப் பிரிவிலிருந்து மருத்துவமனைக்கு உள்ளேயே நடமாட முடியும். வீடு சென்றதும் மீண்டும் குளிக்க வேண்டும். நோயாளிகளுக்கும் கடுமையான முறைகளைப் பின்பற்றுகிறோம். உதாரணமாக, கரோனா நோயாளி முதல் நாள் போட்ட ஆடைகளை மறுநாள் எரித்துவிடுவோம். அந்த அளவுக்கு உச்ச சுத்தத்தை அவர்களையும் பராமரிக்கச் சொல்கிறோம்.

கரோனா நோயாளிகளுக்கு என்ன மாதிரி சிகிச்சை அளிக்கப்படுகிறது?

முதலில் அவர்களைத் தனிமைப்படுத்துகிறோம். நல்ல காற்றோட்டமான அறை; அதனுள்ளேயே கழிப்பறை – குளியலறை எல்லாம் உண்டு. கரோனாவுக்கு என்று தனி மருந்தோ சிகிச்சையோ கண்டறியப்படவில்லை என்பதால், நோயாளி எதிர்கொள்ளும் சிரமத்துக்கு ஏற்ற மருந்துகளை மருத்துவர்கள் அளிப்பார்கள். கூடுதலாக, நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவையும் பரிந்துரைக்கிறார்கள். கேரளக் கலாச்சாரத்தில் மாட்டிறைச்சியும் பன்றியிறைச்சியும் முக்கிய அம்சம் என்பதால் இங்கே அவற்றை உட்கொள்ளச் சொல்கிறார்கள். பொதுப் பிரச்சினை என்னவென்றால், நிறைய கரோனா நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது. சுவாசப் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. ஆகையால், மருத்துவமனை என்ற அளவில், எவ்வளவு பேர் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவிகளை அரசாங்கம் ஏற்பாடுசெய்து தருகிறது. நோயாளிகள் தனிப்பட்ட அளவில் இதை எதிர்கொள்வதற்கு ஏற்ப மூச்சுப்பயிற்சியைப் பரிந்துரைக்கிறார்கள். பொதுவாக, 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேலானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், ஹெச்.ஜ.வி., புற்றுநோயாளிகள் ஆகியோர் கரோனா தாக்குதலுக்கு உள்ளானால் மீண்டுவருவதற்குத் தாமதமாகிறது. நல்ல தேக ஆரோக்கியமும், சத்தான உணவுமுறையும், சுத்தமும் கொண்டவர்கள் ஒரு வாரக் கண்காணிப்பிலேயேகூட மீண்டுவிடுகிறார்கள். அதேநேரம் இயல்பாகவே நோய் எதிர்ப்புத்திறன் குறைவாகவும் ரத்தசோகையுடனும் இருப்பவர்களை கரோனாவிடமிருந்து மீட்பது பெரும் சவாலாக இருக்கிறது.

மூச்சுப்பயிற்சி என்றால் யோகா பயிற்சிக்குச் செல்ல வேண்டுமா?

வசதி இருந்தால் செல்லலாம். இல்லாவிட்டால், நோயாளியே தயாராகலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமேகூட பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அதாவது, ஆழமாக மூச்சை இழுக்க வேண்டும்; ஐந்து நொடிகள் முதல் எட்டு நொடிகள் வரை (உங்களால் முடிந்தமட்டில்) மூச்சை நிறுத்திவைத்து, பின்னர் அந்த மூச்சை மெல்ல வெளியேவிட வேண்டும். இதை நோயாளிகளுக்கு நாங்களே கற்றுத்தருவதோடு, தினமும் பல முறை செய்யவும் சொல்கிறோம். ஒருவேளை நோயின் தீவிரத்தால் நோயாளியால் அதைச் செய்ய முடியவில்லை என்றால் சுவாச உதவிக் கருவி (spirometry divice) துணையோடு நோயாளியை மூச்சுப்பயிற்சி செய்ய வைக்கிறோம். ஆனால், எல்லாவற்றையும்விட முக்கியம் தனிநபர் சுத்தம்.

தனிநபர் சுத்தத்தைப் பராமரிக்க உங்கள் அறிவுரை என்ன?

முதலில், இருமல் – காய்ச்சல் போன்ற கரோனாவின் அறிகுறிகள் தென்படும்போதே நோயாளி முகத்தில் ஒரு முகவுறையை அல்லது கைக்குட்டையைக் கட்டிக்கொள்ள வேண்டும்; வீட்டில் தனிமையைப் பராமரிக்க வேண்டும். தேவையில்லாமல் வீட்டுக்குள்ளேயும்கூட புழங்குவது, பொருட்களைத் தொடுவது, எல்லோருடனும் உறவாடுவது இதையெல்லாம் தவிர்த்திட வேண்டும். உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். மருத்துவமனைக்கு வந்துவிட்டால் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

கரோனா வராமல் தடுத்துக்கொள்ள நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

தேவையில்லாமல் வெளியே சுற்றுவதைத் தவிருங்கள். வெளியே செல்லும் தேவைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். வீட்டுக்குள்ளேயே இருங்கள். சுத்தத்தைப் பராமரியுங்கள். கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுங்கள். முட்டை, இறைச்சி, பால், பழங்கள் போன்ற நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவை உண்ணுங்கள். புகைபிடிப்பவர்கள் அவசியம் அதைக் கைவிட வேண்டும்; ஏனென்றால், கரோனா நுரையீரலைத்தான் குறிவைக்கிறது. வதந்திகளை நம்பாதீர்கள். அஞ்ச வேண்டாம். அதேசமயம், மிகுந்த ஜாக்கிரதையாக இருங்கள்.

மருத்துவத் துறை இதில் எதிர்கொள்ளும் சவால் என்ன?

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க ஒரு நோயாளிக்கு, ஒரு கண்காணிப்பாளர் என்னும் அளவுக்குக் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது; அதாவது 1:1. இந்த அளவுக்கு மருத்துவப் பணியாளர்கள் நம்மிடம் இல்லை. அரசாங்க மருத்துவமனைகளையும் போதிய மருத்துவர்கள், செவிலியர்களையும் வைத்திருக்கும் கேரளம் போன்ற மாநிலங்களாவது கொஞ்சம் தப்பித்துக்கொள்ளலாம். மற்ற மாநிலங்களுக்குப் பெரிய கஷ்டம். என்ன செய்வது, நம்முடைய மக்களுக்கு இதுபோன்ற சமயங்களில்தான் அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம், சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு எல்லாமும் நினைவுக்குவருகிறது; இல்லையா? நாங்கள் உயிரைக் கொடுத்துத்தான் உழைக்கிறோம். விரைவில் மருந்து கண்டறியப்பட்டால் நல்லது!

- என்.சுவாமிநாதன்,

தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in


Nurse sandhiya interviewசெவிலியர் சந்தியா பேட்டி!கரோனாமுன்னுதாரண கேரளம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x