Last Updated : 13 Mar, 2020 09:43 AM

 

Published : 13 Mar 2020 09:43 AM
Last Updated : 13 Mar 2020 09:43 AM

ஜோதிராதித்ய சிந்தியா: பெருமாற்றமா, தடுமாற்றமா?

காங்கிரஸின் அடுத்த தலைமுறைத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகியதோடு பாஜகவிலும் இணைந்துவிட்டார். தந்தை மாதவ்ராவ் சிந்தியாவின் 75-வது பிறந்த நாளையொட்டி அவர் இம்முடிவை அறிவித்திருப்பது தலைமுறைப் பயணத்தின் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளம் தலைவரின் பயணம் என்பதைத் தாண்டி காங்கிரஸில் தகித்துக்கொண்டிருக்கும் ஒரு பிரச்சினையையும் சிந்தியாவின் மாற்றம் வெளிக்கொண்டுவந்திருக்கிறது.

குவாலியர் குடும்ப வரலாறு

சிந்தியாவைப் புரிந்துகொள்ள மத்திய பிரதேசத்தின் அரசியலையும் குவாலியர் ராஜ குடும்ப வரலாற்றையும் தெரிந்துகொள்வது அவசியம். பாஜகவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் விஜயராஜே சிந்தியா – அதாவது, இன்றைய ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி. குவாலியர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் சிவாஜிராவ் சிந்தியாவின் மனைவியான அவரை ராஜமாதா என்று அழைப்பது வழக்கம். ஆரம்பத்தில் அவரும் காங்கிரஸில்தான் இருந்தார். காங்கிரஸ் சார்பில் இரு முறை மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், இந்திரா அமைச்சரவையில் அவருக்கு எந்த இடமும் கொடுக்கப்படவில்லை. இருவருக்கும் இடையில் நட்புறவும் சரியாக இல்லை.

காங்கிரஸிலிருந்து 1967-ல் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 36 பேருடன் சேர்ந்து கட்சியிலிருந்து விலகினார் விஜய ராஜே. இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் டி.பி.மிஸ்ரா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இந்திராவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவர் மிஸ்ரா. ஆக, விஜய ராஜே மீது இந்திராவின் கோபம் கூடியது; நெருக்கடிக் காலத்தில் அவரையும் சிறைக்கு அனுப்பிவைத்தார். முதலில் ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் இணைந்த விஜய ராஜே, பின்பு ஜன சங்கத்துக்கும் அங்கிருந்து பாஜகவுக்கும் நகர்ந்தார்.

விஜய ராஜேவின் வாரிசுகள்

விஜய ராஜேவுக்கு ஐந்து குழந்தைகள். மூத்த மகள்களான பத்மாவதி ராஜே, உஷா ராஜே தவிர்த்து, மகன் மாதவ்ராவ் சிந்தியா, இளைய மகள்கள் வசுந்தரா ராஜே, யசோதரா ராஜே மூவருமே அரசியலுக்குள் வந்தனர். அம்மாவின் வழியில் மாதவ்ராவ் சிந்தியாவும் தனது அரசியல் பயணத்தை ஜன சங்கத்திலிருந்துதான் தொடங்கினார். 1971-ல் அவர் மக்களவை உறுப்பினரானார். ஆனால், விரைவிலேயே ஜன சங்கத்திலிருந்து விலகினார். 1977 தேர்தலில் சுயேச்சையாக நின்று மீண்டும் மக்களவை உறுப்பினரானவர் காங்கிரஸில் இணைந்து 1980-ல் அக்கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாதவ்ராவ் சிந்தியா காங்கிரஸ் நோக்கி நகர்ந்ததில் முக்கியப் பங்கு ராஜீவுடனான அவருடைய உறவுக்கு உண்டு; ராஜீவின் மறைவுக்குப் பின்னரும், ராஜீவ் குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் அவர். ராஜீவ், ராவ் ஆட்சிக் காலங்களில் ரயில்வே, மனித வள மேம்பாடு என்று மத்தியில் மிக முக்கியமான துறைகளின் அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். ராஜீவ் குடும்பத்துடன் அவ்வளவு நெருக்கம் இருந்தபோதிலும்கூட, மத்திய பிரதேசத்தின் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்ற மாதவ்ராவ் சிந்தியாவின் ஆசை நிறைவேறவில்லை. ஏனென்றால், அர்ஜுன் சிங் அப்போது மத்திய பிரதேச காங்கிரஸில் கோலோச்சிக்கொண்டிருந்தார். அர்ஜுன் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகியபோதும்கூட மாதவ்ராவ் சிந்தியா அந்தப் பதவி நோக்கி நகரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். மூத்த தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்குமான பூசல் காங்கிரஸின் நெடுநாள் நோய்க்கூறு என்று சொல்லலாம்.

தொடர் அதிருப்தியால் 1996-ல் காங்கிரஸிலிருந்து வெளியேறிய மாதவ்ராவ் சிந்தியா, ‘மத்திய பிரதேஷ் விகாஸ் காங்கிரஸ்’ என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், சோனியாவின் முழுக் கட்டுப்பாட்டுக்கு காங்கிரஸ் வந்த பிறகு தனது கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸுக்கே அவர் திரும்பிவிட்டார். 2001-ல் மாதவ்ராவ் சிந்தியா விமான விபத்தில் காலமானபோது அவரது இடத்துக்கு அவரது மகன் ஜோதிராதித்ய சிந்தியா வந்தார். ஜோதிராதித்ய சிந்தியா அரசியலுக்கு வந்த கதை இதுதான். அத்தைகள் வசுந்தரா ராஜே ராஜஸ்தான் முதல்வராகவும், யசோதரா ராஜே மத்திய பிரதேசத்தின் அமைச்சராகவும் பாஜகவில் கோலோச்சியபோதும் காங்கிரஸிலேயே தன்னைக் கரைத்துக்கொண்டார் ஜோதிராதித்ய சிந்தியா.

ராகுலின் நெருக்க சகா

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளா தாரமும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையும் பயின்றவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஹார்வர்டு நாட்களிலிருந்தே ராகுலும் அவரும் நண்பர்கள். 2002, 2004, 2009 மக்களவைத் தேர்தல்களில் வென்றவர் 2004, 2009 மன்மோகன் சிங் ஆட்சியில் அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 2012-ல் மின்சாரத் துறைக்குத் தனிப் பொறுப்பு வகித்த இளம் வயது இணையமைச்சர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

மத்திய பிரதேசத்தில் மூன்று முறை முதல்வரான சிவராஜ் சௌஹான் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும், 2013 தேர்தலில் 58 இடங்களை மட்டுமே வென்றிருந்த காங்கிரஸ், 2018 தேர்தலில் 114 இடங்களைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றவும் ஜோதிராதித்ய சிந்தியா முக்கியப் பங்காற்றினார். முதல்வர் பதவியை அவர் விரும்பினார் என்பது வெளிப்படை. முதல்வர் பதவிக்கு கமல்நாத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலாகக் கசப்போடுதான் இருந்தார்.

காங்கிரஸுக்குள் மூத்த தலைமுறை – இளைய தலைமுறை மோதலின் அடுத்த கட்டம் இது என்றாலும், முதல்வராவதற்கு ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு காங்கிரஸுக்குள்ளேயும் முழு ஆதரவு இல்லை. குவாலியர் ராஜ குடும்பத்துக்கு மத்திய பிரதேசத்தில் ஒரு மதிப்பு இருக்கிறது; குறிப்பாக குணா, குவாலியர் தொகுதிகளில் அந்தக் குடும்பத்துக்கான செல்வாக்கு அதிகம். ஒன்றிரண்டு மக்களவைத் தேர்தல்களைத் தவிர இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலுமே குணா மற்றும் குவாலியர் தொகுதிகளில் சிந்தியா குடும்பம்தான் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால், மாநிலம் தழுவிய செல்வாக்கு அது என்று அதை விரித்திடவும் முடியாது. இன்னும் சொல்லப்போனால், 2019 மக்களவைத் தேர்தலில் குணா தொகுதியில்தான் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியிட்டு தோற்றார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பெரும் வெற்றி, தன்னுடைய மக்களவைத் தோல்வி, மாநிலத்தில் முதல்வர் கமல்நாத்துடனான மோதல் இப்படிப் பல்வேறு மன உளைச்சல்களோடுதான் ஜோதிராதித்ய சிந்தியா இருந்துவந்தார். காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் வெளியேறியது புதிய தலைமுறைத் தலைவர்களின் உற்சாகத்தை மேலும் குறைப்பதானது. மாநிலங்களவை உறுப்பினர் பதவியாவது வேண்டும் என்று அவர் விரும்பினார். அதுவும் கிடைக்க வாய்ப்பில்லாத சூழலில்தான் பாஜக நோக்கி நகர்ந்திருக்கிறார்.

யாருக்கு லாபம், நஷ்டம்?

பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடந்த காலத்தில் கடுமையாக விமர்சித்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. டெல்லி கலவரம் வரை அவர் விமர்சனங்கள் தொடர்ந்தன. மேலிருந்தபடி கட்சிக்குள் வரும் அவரை மாநில பாஜகவில் பலரும் ரசிக்கவில்லை. ஆனால், கட்சிக்கு நிச்சயம் பெரும் ஆதாயம் இது. தன்னோடு 20-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அவர் கூட்டிக்கொண்டு வந்திருக்கும் நிலையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவரிடம் கொடுத்துவிட்டு, ஒரு மாநிலத்தின் ஆட்சியையே காங்கிரஸிடமிருந்து பறிக்கிறது பாஜக.

காங்கிரஸுக்கு இது பெரும் நஷ்டம். நல்ல செல்வாக்கான எதிர்காலத் தலைவர் ஒருவரையும் ஒரு மாநிலத்தின் ஆட்சியையும் அது இழக்கிறது. ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு லாபமா, நஷ்டமா என்று கேட்டால், ஒரே வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால், தற்காலிகமாக அவர் லாபம் அடைந்திருக்கிறார். ஆனால், தொலைநோக்கில் இழப்புதான். காங்கிரஸிலேயே தொடர்ந்திருந்தால், நிச்சயம் அடுத்த முதல்வர் தேர்வாக அவரே இருந்திருப்பார். இப்போது கட்சி மாறி, மத்திய அமைச்சரவைக்குள் மீண்டும் தன்னை இணைத்துக்கொள்ளப்போகிறார். அங்கிருந்து முதல்வர் பதவி நோக்கி நகர்வது அத்தனை எளிதல்ல.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் முடிவெடுக்க முக்கியமான காரணங்களில் ஒன்று, மூத்த தலைவர்களின் செயல்பாடுகள் மீதான அதிருப்தி. ஆனால், ஓராண்டு நெருங்கும் நிலையிலும், ராகுல் யாரெல்லாம் கட்சியிலிருந்து விலகுவார்கள் என்று நினைத்தாரோ அந்த மூத்த தலைவர்கள் எவரும் விலகவில்லை; ஆனால், நாளைய நம்பிக்கை என்று அவர் எதிர்பார்த்த புதிய தலைமுறை சிதைகிறது. காங்கிரஸைப் பீடித்திருக்கும் உட்கட்சிப் பூசலின் முடைநாற்றம் வெளியே வீசுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x