Published : 13 Mar 2020 09:41 AM
Last Updated : 13 Mar 2020 09:41 AM

பிட் காயின்கள்: முறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்

இந்திய ரிசர்வ் வங்கி, ‘பிட் காயின்கள் எனப்படும் மெய்நிகர் பணத்தைப் பயன்படுத்துவோருக்குச் சேவைகளை அளிக்க வேண்டாம்’ என்று வங்கிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது; அது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. ‘கிரிப்டோ கரன்சி’ என்று அழைக்கப்படும் பிட் காயின்களை உலகின் எந்த நாடும் வெளியிடுவதில்லை. இதைத் தொழில் - வணிகத் துறையினர் தங்களுக்குள்ளான பரிமாற்றத்துக்குப் பயன்படுத்துகின்றனர். இதன் மதிப்பைச் சந்தையே தீர்மானிக்கிறது. இணையதளம் வழியாக உலகம் முழுவதும் இதைப் பயன்படுத்துகின்றனர். இதைப் பயன்படுத்துவோர் இதைச் சட்டபூர்வமானதாகவே கருதுகின்றனர்.

ஒரு பிட் காயினின் மதிப்பு ரூ.10 லட்சம். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். வெளிநாடுகளில் ஆண்டுதோறும் ரூ.1.5 கோடி முதலீடு செய்யலாம் என்ற அரசின் அனுமதியையொட்டி, ஏராளமான இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர். இந்திய ரூபாய் அல்லது அமெரிக்க டாலர் ஆகியவற்றின் செலாவணி மதிப்பு ஏற்ற இறக்கங்களைப் பற்றிய கவலையில்லாமல் பிட் காயினைப் பொதுவாக வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்கின்றனர். இந்தியாவில் மட்டும் 90 லட்சம் பேர் பிட் காயினைப் பயன்படுத்துகின்றனர். பிட் காயினுக்குத் தடை விதிக்கப்பட்டால் ரூ.135 லட்சம் கோடி மதிப்புள்ள செலாவணி நாட்டை விட்டு வெளியேற நேரும் என்று சந்தையை அறிந்தவர்கள் எச்சரிக்கின்றனர். பிட் காயின்கள் பயன்பாட்டுக்கு வந்து சுமார் 10 ஆண்டுகள் ஆனதால் அதன் நன்மை, தீமைகள் அனைவருக்கும் தெரிந்ததே. பிட் காயின் மதிப்பு ஊகபேரம் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதே எதிர்ப்பாளர்களின் கருத்து.

2018-ன் மத்தியில் ஒரு பிட் காயின் 20,000 டாலராகக் கருதப்பட்டது. அதே ஆண்டின் இறுதியில், அதன் மதிப்பு 3,000 டாலராகச் சரிந்தது. நாடுகளின் அதிகாரபூர்வ செலாவணிகள் மட்டுமல்ல; பிட் காயினும் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது என்பது இதிலிருந்து புலனாகிறது. நிலையான செலாவணிகளுக்குப் பதிலாகவும் இதைப் பயன்படுத்த முடியாது. மேலும், பிட் காயினுக்குப் பின்னணியாக எந்த மைய நிறுவனமும் இல்லை. இதைப் பயன்படுத்துவோர் இதன் மீது வைத்துள்ள நம்பிக்கையும், மிகவும் நுட்பமான ‘பிளாக்செயின் லெட்ஜர்’ முறையும்தான் இதற்கு முக்கியத்துவத்தைத் தருகின்றன.

பிட் காயினை வழங்குவது யார், பெற்றுக்கொண்டது யார் என்று தெரியாமல் இருப்பதால், ஊக வியாபாரிகளுக்கு நிறையப் பயன்படுகிறது. சட்ட விரோதச் செயல்களுக்கும் இது பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது. கடன் கொடுக்கவும் கடன் திரட்டவும் சர்வதேச வர்த்தகத்தில் பிட் காயின் பயன்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் இதைத் தடை செய்யாமல் ஒழுங்குபடுத்தவே விரும்புகிறது. 2019-ல் இந்திய அரசு கொண்டுவந்த சட்ட முன்வடிவானது, டிஜிட்டல் ரூபாயைப் புழக்கத்தில் கொண்டுவரும் விருப்பத்தைத் தெரிவித்தது. அதன்படி, பிட் காயினையும் எப்படி முறைப்படுத்துவது என்று முடிவெடுக்க வேண்டும். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருவதால் அதற்கேற்ற நடைமுறைகளை அனுமதிப்பதில் அரசு திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x