Last Updated : 15 Aug, 2015 09:43 AM

 

Published : 15 Aug 2015 09:43 AM
Last Updated : 15 Aug 2015 09:43 AM

கருத்துச் சுதந்திரத்துக்கு அதிர்ச்சியூட்டும் சவால்

ஊடகங்களின் கருத்துரிமைக்குள் அரசு நுழைவது ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்

யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பான செய்தி ஒளிபரப்பில், ‘கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் விதிகள் 1994’-ஐ மீறிவிட்டதாக ‘என்.டி.டி.வி. 24X7’, ‘ஆஜ் தக்’, ‘ஏ.பி.பி. நியூஸ்’ ஆகிய தொலைக்காட்சிகளுக்கு செய்தி - ஒலிபரப்புத் துறை அமைச்சகம் காரண விளக்கம் கோரி நோட்டீஸ் அளித்திருப்பது இந்திய அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள பேச்சு, கருத்து சுதந்திரத்தை அப்பட்டமாக மீற முயற்சிக்கும் செயலாகும்.

தனியார் செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தின் கீழ் இந்த நோட்டீஸை அளித்திருப்பதானது, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்திலானது, எதேச்சாதிகாரமானது, சட்டத்துக்கு எதிரானது. திட்டங்களை நெறிப்படுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் சாக்கில் மேற்கொள்ளப்படும் இந்தச் செயலுக்கும், செய்திகளைத் தணிக்கை செய்வதற்கும் வித்தியாசமே கிடையாது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய செய்தி ஊடகங்களுக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் உடனடியாகக் கண்டனங்கள் எழுந்திருப்பது மனநிறைவைத் தருகிறது. இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம், ஒளிபரப்பு நிறுவன ஆசிரியர்கள் சங்கம், செய்தி ஒலிபரப்பாளர்கள் சங்கம், பத்திரிகையாளர் சங்கங்கள், இந்திய ஒலிபரப்பாளர்கள் புகார் பேரவையின் தலைவர், பத்திரிகைகளின் தலையங்கங்கள் என்று பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அரசின் இந்த முடிவைக் கண்டித்துள்ளனர்.

வலதுசாரி இந்துத்துவ சித்தாந்தங் களுடனும், அரசியலுடனும், எதேச்சாதி காரமான, எதையும் கட்டுப்படுத்த நினைக்கும் அரசுடனும் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப் பட்டதுதான் இந்தக் காரண விளக்கம் கோரும் நோட்டீஸ்கள். நியாயமற்ற வகையில், வேண்டுமென்றே இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், சமூகமும் அரசியலும் பின்னிப்பிணைந்துள்ள இன்றைய சூழலில் இவை மூன்று முக்கிய விஷயங்களை வெளிக்கொண்டுவந்துள்ளன: 1. இந்திய அரசியல் சட்டத்தின் 19-வது பிரிவு எந்த அளவுக்கு பேச்சு சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் உண்மையிலேயே அளிக்கிறது? 2. இந்திய ஜனநாயகம் எந்த அளவுக்கு விவாத சுதந்திரத்தையும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் சுதந்திரத்தையும் அனுமதிக்கிறது? 3. அச்சுப் பத்திரிகைகளுக்கும், மின்னணு செய்தி ஊடகங்களுக்கும் இடையே ஏன், எந்த அடிப்படையில் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பதில் அரசு பாரபட்சம் பார்க்கிறது?

காரண விளக்கம் கோரும் அந்த 3 நோட்டீஸ்களும் இரு தனித்தனி பிரச்சினைகளின்பாற்பட்டது; 1994-ல் பிறப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை விதிகள்படி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதிப்பது முதலாவது; நடப்பு செய்திகளை ஒளிபரப்ப செய்தி சேனல்களுக்கு செயற்கைக்கோள்களிலிருந்து இணைப் பைத் தருவது அல்லது துண்டிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிகளின்பாற்பட்டது இரண்டாவது.

என்.டி.டி.வி.க்கு அனுப்பப்பட்ட நோட்டீஸைப் படித்துப் பார்த்தேன். மற்ற இரு சேனல்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் குறித்து செய்திகளிலிருந்துதான் தெரிந்துகொண்டேன். இந்த நோட்டீஸ்கள் அனைத்தும், நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடர்பான வழிகாட்டு நெறிகளின் பிரிவு 6-ல் உள்ள 6(1)(d), 6(1)(e), 6(1)(g) ஆகிய உள்பிரிவுகளை உள்ளடக்கியது.

கேபிள் சேவை அளிக்கும் செய்தி சேனல்கள் பின்வரும் விதத்தில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்று அதில் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

6(1)(டி): ஆபாசமான, ஒருவரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கிற, வேண்டுமென்றே தவறான அரைகுறை உண்மைகளையும், தவறாகப் பொருள் கொள்ளும் வகையில் தகவல்களைத் தருகிற எவற்றையும் ஒளிபரப்பக் கூடாது.

6(1)(இ): வன்முறைகளைத் தூண்டிவிடுகிற அல்லது ஊக்குவிக்கிற, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிரான தன்மை கொண்ட, தேச விரோதப் போக்குகளை ஊக்குவிக்கிற வகையில் ஒளிபரப்பக்கூடாது.

6(1)(ஜி): குடியரசுத் தலைவரின், நீதித்துறையின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஒளிபரப்பக்கூடாது.

ஆஜ் தக், ஏ.பி.பி. நியூஸுக்கு நோட்டீஸ் ஏன்?

ஆஜ் தக் மற்றும் ஏ.பி.பி. நியூஸ் தொலைக்காட்சிகளுக்கு அனுப்பிய நோட்டீஸ், சோட்டா ஷகீல் (அல்லது ஷகீல் என்று தன்னைக் கூறிக்கொண்ட ஒருவர்) தொலைபேசி மூலம் அளித்த பேட்டியை ஒளிபரப்பியது தொடர்பானது. அதில் அவர், 1993 மும்பை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தாவூத் இப்ராஹிமுக்குத் தொடர்பில்லை என்றும் யாகூப் மேமனுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை ‘சட்டரீதியிலான படுகொலை’ என்றும், சரண் அடைந்தால் கொல்ல மாட்டோம் என்று யாகூபுக்கு அளித்த வாக்குறுதியை மத்திய அரசு மீறிவிட்டது என்றும் கூறியிருந்தார்.

தீவிரவாதிகள், ஆயுதம் ஏந்திய போராளிகள், போரை ஆதரிப்போர், சமூக விரோதிகள், போதை மருந்துக் கடத்தல் தொழிலில் தாதாவாக இருப்போர், சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் என்று பலதரப்பட்டவர்களையும் பத்திரிகையாளர்கள் பேட்டி கண்டு வெளியிடுவது உலகின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள நடைமுறை. அரசாங்கம் கேட்க விரும்பாத ஒரு தகவலை இந்த தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ கூறியதற்காக அவர்களைப் பேட்டி கண்ட பத்திரிகையாளர்கள் மீது பாய்வது அரசுகளின் வழக்கமல்ல.

மிகவும் தீவிரமான ஆயுதப் போராளிகளைப் பேட்டி கண்டு, அதிகாரிகளால் எந்த தொந்தரவுக்கும் ஆளாகாமல் செய்திகளை அளிப்பது இந்தியப் பத்திரிகையாளர்களுக்கும் வழக்கமானதுதான். தமிழ் ஈழத்துக்காக ஆயுதமேந்தி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் தலைமறைவாக இருந்தபோது அவரை நானே பேட்டி கண்டு வெளியிட்டிருக்கிறேன்.

மேமன் தாயார் உரையாடல்

தன்னுடைய சகோதரர் தூக்கிலிடப்படுவதற்கு முன்னால் தன்னுடைய தாயாருடன் முஷ்டாக் டைகர் மேமன் தொலைபேசியில் உரையாடியதன் முழு விவரத்தை, இந்தியாவின் முன்னணி வர்த்தகச் செய்திப் பத்திரிகை பிரசுரித்தது. தன் தம்பி தூக்கிலிடப்பட்டதற்குப் பழிவாங்குவேன் என்று டைகர் மேமன் கூறியதாக அந்த உரையாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

“இது அநீதியின் உச்சபட்சம்; இது (உயிரிழப்பு) வீணாகிவிடாது; இதற்கு அவர்கள் (அரசு) பதில் சொல்லும்படி செய்வேன்” என்கிறார் பேட்டியளித்தவர். இந்த உரையாடல் எப்படி கசியவிடப்பட்டிருந்தாலும் இது நிச்சயம் மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டியதுதான். வயதான அந்த மூதாட்டியின் அந்தரங்க உரிமையை மீறி, மக்கள் நலனில் அக்கறைகொண்டுதான் அது வெளியிடப்பட்டது. துயரத்தால் மிகவும் ஒடுங்கிய நிலையில் இருந்த அவர், தொலைபேசி மூலம் பேட்டியளிக்கத் தயங்கினார்.

அதிகாரத்தில் உள்ள யாரும் பத்திரிகைகளில் பிரசுரமான அந்தப் பேட்டியைக் கண்டு துடித்துவிடவில்லை; அது வன்செயலைத் தூண்டும் என்றோ, சட்டம் - ஒழுங்கு பராமரிப்புக்கு எதிரானது என்றோ, தேச விரோதச் செயல்களை ஊக்குவிக்கும் என்றோ, குடியரசுத் தலைவர், நீதித்துறையின் நேர்மைக்குக் களங்கம் விளைவிக்கிற வகையில் அந்தப் பேட்டி இருந்தது என்றோ கூறவில்லை. ஏன்? அச்சுப் பத்திரிகைக்கும் மின்னணு (காட்சி) ஊடகத்துக்குமான விதிகள் வெவ்வேறானவை.

அம்பலப்படுத்துகிறது என்.டி.டி.வி. நோட்டீஸ்

சீனிவாசன் ஜெயின் தயாரித்த, ‘யாகூப் மேமன் ஒரு புதிர்’ என்ற அந்த நிகழ்ச்சியைச் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்தேன். ஆகஸ்ட் 1-ம் தேதி அது ஒளிபரப்பப்பட்டபோது பார்க்க முடியவில்லை.

மிகுந்த முன்னேற்பாட்டோடு, நன்கு திட்டமிட்டு, ஆய்வு செய்து, நடுநிலையோடு தயாரித்து ஒளிபரப்பப்பட்ட அந்த நிகழ்ச்சியைக் குறிவைத்திருக்கிறது செய்தி ஒலிபரப்புத் துறை. பாகிஸ்தானில் பத்திரமாக இருந்த யாகூப் மேமன், இந்திய நீதித் துறையை எதிர்கொள்ள வந்ததன் மர்மம் என்ன என்று ஆராய்ந்தது அந்த நிகழ்ச்சி. 1993-ம் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் அவருடைய பங்கு என்ன, அவருக்குக் கிடைத்த சட்ட சேவையின் தரம் என்ன என்பதையும் அந்நிகழ்ச்சி நன்கு வெளிக்கொண்டுவந்தது. அந்த நிகழ்ச்சியில் அந்த சேனலின் சொந்தக் கருத்துகள் மிகவும் குறைவு; அதற்காக அந்த நிகழ்ச்சியில் ஆட்சேபிக்கத் தக்க விஷயங்கள் இல்லை என்று கூறிவிட முடியாது.

அந்த நிகழ்ச்சியில் பேட்டி காணப்பட்டவர்களின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. யாகூப் மேமனின் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், வழக்கில் தாங்கள் தோற்றுவிட்டதை மிகுந்த கண்ணியத்துடன் குறிப்பிடுகிறார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் பத்திரிகையாளர் மாசீ ரெஹ்மான், சிக்கலான பல கேள்விகளை எழுப்புகிறார். வழக்கறிஞர்கள் சியாம் கேஷ்வானி, நிதீன் பிரதான், மது திரேஹான் ஆகியோர் வழக்கு குறித்து சிறு விவரங்களைத் தருகின்றனர். சாந்தனு சென், ஓ.பி. சட்வால் ஆகியோருக்கு விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவும் சி.பி.ஐ.க்கு ஆதரவாகப் பேசவும், கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் போதுமான நேரம் தரப்பட்டிருக்கிறது.

மஜீத் மேமன் பேட்டி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான மஜீத் மேமன் யாகூபின் தூக்கு தண்டனை குறித்து நேரடியாகவே கருத்து தெரிவிக்கிறார். ஆனால் விடியற்காலை 3 மணிக்குக் கூட மனுவைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதற்காக்க உச்ச நீதிமன்றத்தைப் பாராட்டுகிறார்.

“உஸ்மான் ஜான் கான் இந்த வழக்கில் அப்ரூவர்; அரசுத் தரப்பில் அவர்தான் 2-வது சாட்சி. இப்போது உஸ்மான் கானுக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது. இதை இந்தியாவுக்கு வெளியே பிற நாட்டில் குறிப்பாக பிரிட்டன் போன்ற நாடுகளில் சொன்னால், தண்டனையியல் சட்டத்தில் நிபுணர்களாக இருக்கும் பிற நாட்டவர்கள் சிரிப்பார்கள்; இதுவா நீதி என்று கேட்பார்கள்? இந்தச் சம்பவத்தில் யாகூப் மேமன் செய்ததாகக் கூறப்படும் செயல்களைப் போல 10 மடங்கு அதிகமாகச் செய்தவர் உஸ்மான் கான்.

அவருக்கு மன்னிப்பு! யாகூபுக்காக நான் பரிந்து பேசுகிறேன் என்று நினைத்துவிடக் கூடாது; உச்ச நீதிமன்றத்தை நான் விமர்சிப்பதாகவும் கருதிவிடக் கூடாது, அதன் மீது நான் மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறேன், அதற்கு நான் தலைவணங்கக் கடமைப்பட்டிருக்கிறேன். தூக்கு தண்டனையன்று விடியற்காலை 3 மணிக்கு அவர் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்ததற்காக உச்ச நீதிமன்றத்துக்கு வணக்கம் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று மஜீத் மேமன் நிகழ்ச்சியின் இறுதியில் பேட்டியளித்திருக்கிறார்.

இதைத்தான் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தன்னுடைய நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறது. வேண்டு மென்றேயும் அவதூறைப் பரப்பும் வகையிலும் ‘பாதி-உண்மைகள்’ அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டிருப்பதால் தொலைக்காட்சி அலைவரிசை விதிகள் 6(1)(டி)யை மீறியிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறது. ஒளிபரப் பானதில் எவை ‘பாதி-உண்மைகள்’ என்றோ, அவதூறானது என்றோ அது விளக்கவில்லை. இந்த நோட்டீஸிலிருந்து தெரியவருவது என்னவென்றால், தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளிக்கிறவர்கள் அனைவரும் தாங்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் அசைக்க முடியாத, எழுத்துபூர்வமான ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டுதான் பேச வேண்டும் என்பதாகும். இது அபத்தமாகவும் வக்கிரமாகவும் தெரிகிறது.

இரண்டாவது குற்றச்சாட்டு 6(1)(ஜி) பிரிவை மீறிவிட்டதாகக் கூறுகிறது. இந்த குற்றச்சாட்டு முழுக்க நகைச்சுவை என்று கருதும் விதத்தில் அபத்தமாக இருக்கிறது. “என்.டி.டி.வி. ஒளிபரப்பிய நிகழ்ச்சி இந்திய நீதிமுறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் இருந்ததுடன் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நீதி நிர்வாக நடைமுறைக்கு இணையாக இல்லை என்ற வகையில் தரத்தைத் தாழ்த்துவதைப்போல இருக்கிறது. இப்படியெல்லாம் கூறிவிட்டு இறுதியில் தீர்ப்புக்குத் தலைவணங்குவதாக முடிகிறது” என்கிறது நோட்டீஸில் உள்ள வாசகம்.

இப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அதிகாரிகள் இந்தியச் செய்தித்தாள்களைப் படிப்பதே இல்லையா? நீதித்துறை பற்றிய அவற்றின் தலையங் கங்கள், கருத்துகளை அறிந்ததில்லையா? முக்கியமான வழக்குகளில் வலுவான, வலுவற்ற தீர்ப்புகள் குறித்தும் எப்போதாவது நீதி தவறும்போதும், சட்டம் தாமதமாக நீதி வழங்கும்போதும் இந்திய நீதித்துறையின் பலம் என்ன, பலவீனம் என்ன என்று எழுதும்போதும் படித்ததில்லையா? பத்திரிகைகளில் வரும் இத்தகைய கருத்துகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் தலைசிறந்த நீதிமானுமான வி.ஆர். கிருஷ்ணய்யர் என்ன கருத்து தெரிவித்தார் என்பது அவர்களுக்குத் தெரியாதா? யாகூப் மேமன் தூக்கு தண்டனை தொடர்பாக குடியரசுத் தலைவரையும் உச்ச நீதிமன்றத்தையும் கேள்விகேட்டு பத்திரிகைகளில் வந்தவற்றை அவர்கள் படிக்கவில்லையா? அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரான மஜீத் மேமன், அரசியல் சட்டம் தனக்களித்துள்ள உரிமைகளுக்கும் வரம்புக்கும் உள்பட்டு, தான் சொல்ல வேண்டிய கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். ஏதோ ஒரு காரணத்துக்காக ‘மிகவும் கீழ்ப்படிதலாகவே’ இறுதி வாசகத்தை முடித்திருக்கிறார் என்பதே என் கருத்து.

அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவு வழங்கும் கருத்துச் சுதந்திரம் ஒளிபரப்பு ஊடகங்களுக்குக் கிடையாது என்ற தவறான கண்ணோட்டம் நிலவுகிறது. ஒளிபரப்பு உரிமத்தை வழங்கும் அதிகாரம் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு இருப்பதுதான் விஷமங்களுக்கெல்லாம் மூல காரணமாக இருக்கிறது. இது அமைச்சகத்திடம் தரப்படாமல் தனியானதொரு கட்டுப்பாட்டு அமைப்பிடம் அளிக்கப்பட வேண்டும். அரசியல் சட்டம் அளிக்கும் தடையற்ற உரிமைக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

செய்திகளை ஒளிபரப்புவதற்கான வழிகாட்டு நெறிகளை, சுயேச்சையான கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் நிர்ணயிக்க வேண்டும். செய்தி ஒளிபரப்புகளைக் கட்டுப்படுத்தவும், தணிக்கை செய்யவும் செய்தி ஒலிபரப்புத் துறைக்கு அதிகாரம் இருக்கக் கூடாது. ஒளிபரப்பும் உரிமை கோர தங்களுக்கு தடையற்ற உரிமை இருப்பதாக மனுதாரர்கள் அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவை துணைக்கு அழைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் முன்னர் கருத்து தெரிவித்தது, அதனால் அந்த ஊடகத்துக்குக் கருத்துரிமை இல்லை என்று அர்த்தமாகிவிடாது.

என். ராம், மூத்த பத்திரிகையாளர்,
அரசியல் விமர்சகர்,
தலைவர், `தி இந்து’ குழுமம்.
தொடர்புக்கு: feedback@thehindutamil.co.in
தமிழில் சுருக்கமாக: சாரி.
நன்றி: என்.டி.டி.வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x