Published : 05 Mar 2020 08:20 AM
Last Updated : 05 Mar 2020 08:20 AM

பிஎஸ்என்எல்லில் ‘5ஜி’ கிடைக்குமா?

மோ.கணேசன்

2000 -ன் தொடக்க ஆண்டுகளாக இருக்கலாம். ‘பிஎஸ்என்எல் பிரிபெய்டு சிம்’மிற்குத் தமிழ்நாடே தவம் கிடந்த காலம் அது. அப்போது, தொலைத்தொடர்புத் துறையில் பரந்துவிரிந்த வலைப்பின்னலையும் கட்டமைப்பையும் பிஎஸ்என்எல் வைத்திருந்தது. ‘சிம்’ வாங்குவதற்கு சென்னை கிரீம்ஸ் சாலை அலுவலகத்தில் அரை கிமீ நீளத்துக்கு மனித எறும்புகள் வரிசையாக நின்றன. அந்த வரிசையில் நானும் எனது உடலைப் பொருத்திக்கொண்டேன். அப்போது நேரம் காலை 10 மணி இருக்கும். என் முறை வந்தபோது, மணி 11.30 ஆகிவிட்டது. ‘குணா’ படத்தில் கதாநாயகியின் கையிலிருந்து லட்டை வாங்கும் கமல் பயபக்தியோடு கண்ணில் ஒற்றிக்கொள்வதுபோல, அந்த ‘சிம்’மைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு மகிழ்ச்சியாகப் புறப்பட்டேன். அன்று முதல் நானும் ஒரு செல்பேசிப் பயன்பாட்டாளன் ஆகிவிட்டேன். எனக்குப் பின்னால், அனுமன் வால்போல மனிதர்கள் வரிசைகட்டி நின்றிருந்தார்கள்.

‘பிஎஸ்என்எல் பிரிபெய்டு சிம்’ வைத்திருந்த காலம் வரை மாதம் ரூ.350 ‘ரீசார்ஜ்’ செய்துகொண்டிருந்தேன். அப்போதெல்லாம் ‘இன்கமிங், அவுட்கோயிங், எஸ்எம்எஸ்’ பயன்பாடு மட்டுமே. குறுஞ்செய்தி அனுப்பினால் கட்டணம். அப்போதெல்லாம் இணைய வசதி எதுவும் செல்பேசியில் கிடையாது. காலம் சென்றது. தனியார் நிறுவனங்கள் இந்த செல்பேசி சேவைப் போட்டியில் தொபீரென்று குதித்து, தினமும் நூறு எஸ்எம்எஸ் இலவசம், ஒரு நிமிட அழைப்புக்குக் குறைந்த கட்டணம் என்று சலுகைகளை அள்ளிவிடத் தொடங்கின. பிஎஸ்என்எல்லோ கொஞ்சம்கூட அசராமல் பிலிம் காட்டியபடியே நின்றது.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, மற்ற நிறுவனங்கள் ‘எஸ்எம்எஸ் இலவசம், வரும் அழைப்பை ஏற்பது இலவசம்’ என்றன. அப்போது பிஎஸ்என்எல்லில் சென்னை தொலைத்தொடர்பு வட்டம் தனியாகவும், தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் தனியாகவும் இருக்கும். சென்னை நகரை விட்டு வெளியே வந்துவிட்டால், தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்துக்குள் வந்துவிடுவோம். இதற்கு ‘ரோமிங்’ கட்டணம் வேறு. பிஎஸ்என்எல் நிறுவனமும் காலத்துக்கேற்ப மாறியது என்றாலும் எல்லா நடவடிக்கைகளிலும் பின்தங்கியே நடந்தது. விளைவாக, சலுகைகளை அள்ளித்தந்த தனியார் நெட்வொர்க் ஒன்றுக்கு மாறினேன். காலமும் மாறியது. செல்பேசிகளும் நவீனமயமாகின. நானும் சில செல்பேசிகளை மாற்றினேன். தனியார் நிறுவனம் ஒன்றின் ‘4ஜி’ நெட் இணைப்பு சற்று ஆறுதல் தரும்படி இருந்ததால் அந்த இணைப்பிலேயே இருந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பு நன்றாக இருந்த ‘சிம்’மைத் தானாகவே ‘சிம் லாக்’ செய்த அந்த நிறுவனம், புதிதாக வாங்குங்கள் என்று 200 ரூபாயை என்னிடமிருந்து ஆட்டையைப் போட்டது. அங்கு வந்த பலரிடம் விசாரித்தபோது, அவர்களும் தங்களது ‘சிம்’ சேதமடைந்துவிட்டதாகச் சொன்னார்கள். அப்படியெனில், அந்த நிறுவனமே ‘சிம் லாக்’ செய்துவிட்டு, வாடிக்கையாளர்களைத் தங்களது கடைகளை நோக்கி வரும்படி பார்த்துக்கொண்டது. அப்போது எழுந்த கோபத்தில், ‘உன் நெட்வொர்க்கை விட்டு விரைவில் வெளியேறுகிறேன்’ என்று ‘அண்ணாமலை’ ரஜினிபோல அங்கேயே சவால் விட்டேன். மீண்டும் எனது தாய்க் கழகமான பிஎஸ்என்எல்லுக்கே வந்துவிட்டேன். நான் வந்த நேரத்தில்தான் 76,000 பேர் விருப்ப ஓய்வு கொடுத்து விடைபெற்றார்கள். அவசரப்பட்டு ஒன்றே கால் ஆண்டுக்கான சிறப்புச் சலுகை என்று ரூ.2,000 பணத்தைக் கட்டிவிட்டேன். தொடர்பும் இல்லை, இணைய இணைப்பும் இல்லை. வீட்டுக்குள் சென்றால், தொடர்பு கிடைப்பதில்லை. நள்ளிரவிலும்கூட வீட்டிலிருந்து வெளியே வந்து, சில நேரங்களில் நடு ரோட்டுக்கே வந்து ஒற்றைக்கொம்பு டவரில் பேசுகிறேன். ‘4ஜி’ பழையதாகிப்போய் ‘5ஜி’க்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில்தான் பிஎஸ்என்எல் ‘4ஜி’ சேவைகளை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு இதுவரை ‘4ஜி’ தொழில்நுட்பத்தை வழங்காமல் இருப்பதே தனியார் நிறுவனங்கள் வளர வேண்டும் என்பதற்காகத்தான். பிஎஸ்என்எல்லில் ‘5ஜி’ வசதிகள் கிடைப்பதற்குள் அதையும் விற்றுவிடுவார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

- மோ.கணேசன், தொடர்புக்கு: moganan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x