Last Updated : 04 Mar, 2020 07:55 AM

 

Published : 04 Mar 2020 07:55 AM
Last Updated : 04 Mar 2020 07:55 AM

வல்லரசுப் போட்டி: ஒரு நூற்றாண்டுக்கு முன்னும் இப்போதும்!

உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக சீனா வளர்வது சர்வதேச அமைப்பு முறையையே வெகுவாகப் புரட்டிப்போடக்கூடியது. கம்யூனிஸ்ட் புரட்சி நடந்த 1949 காலத்தில் சீனாவானது நிலவுடைமைச் சமூக நாடாகவும், விவசாயமே முக்கியத் தொழிலாகவும், தொழில் - அறிவியல் ஆகியவற்றில் பின்தங்கிய நாடாகவும் இருந்தது. இப்போது அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமையான கட்டுப்பாட்டின் கீழ் பல பத்தாண்டுகளாக எடுக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் நாட்டை இ்ப்போது தொழில்வளம், தொழில்நுட்ப வளம் ஆகியவற்றின் கோட்டையாக மாற்றிவிட்டது. உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக அமெரிக்காவை சீனா மிஞ்சுவதற்கு இன்னும் சில காலமே போதும்.

இந்தப் பொருளாதார எழுச்சி ராணுவ வியூகரீதியான சில முடிவுகளுக்கும் வழிவகுத்திருக்கிறது. உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்துக்காகச் செலவழிக்கும் சீனா ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்திருக்கிறது. உலகின் மாபெரும் வல்லரசாக வேண்டும் என்ற தெளிவான லட்சியத்துடன் சீனா செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சீனாவின் இந்த வேகமான வளர்ச்சி, உலக நாடுகளிடையேயான சமநிலையைச் சீர்குலைத்துவருகிறது. இதுநாள் வரையில் இது அமெரிக்காவை மையமாகக் கொண்டிருந்தது. 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பிறகு, அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் கூடியது.

பனிப்போர் சகாப்தம்

இந்த நிகழ்வுகளுக்கு இணையான வரலாற்றுச் சம்பவங்களும் உண்டு. 19-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெர்மானிய ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியும், 20-வது நூற்றாண்டில் சோவியத் ஒன்றியத்தின் வளர்ச்சியும் உலக நாடுகளின் முறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்தின. முதல் உலகப் போருக்கு எது காரணம் என்று பார்த்தால், வல்லரசாக வேண்டும் என்று ஜெர்மனி விரும்பியதுதான் என்பது புலனாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு சோவியத் ஒன்றியம் சவால்விடத் தொடங்கியதால் ‘பனிப்போர்’ சகாப்தத்துக்கு உலகம் தள்ளப்பட்டது. அடுத்த வல்லரசாக சீனா உருவாகத் தொடங்கியவுடன், இப்படி அடிக்கடி ஒப்பிட்டுப் பார்ப்பதும் - சில வேளைகளில் எச்சரிப்பதும் - வழக்கமாகிவிட்டது.

பிரெஞ்சு-பிரஷ்யப் போருக்குப் பிறகு (1870) ஏகாதிபத்திய ஜெர்மனி மிகப் பெரிய தொழில் - ராணுவ வல்லரசாக உருவெடுத்தது, பிறகு ஐக்கிய ஜெர்மனியானது. அதுவரை பிரிட்டனும் பிரான்ஸும் ஆதிக்கம் செலுத்திவந்த ஐரோப்பியக் கண்டத்திலேயே அது ராணுவ சமநிலையை ஆட்டம்காண வைத்தது. தான் உற்பத்திசெய்யும் பொருட்களை விற்க புதிய சந்தைகள் வேண்டும் என்று ஜெர்மனிக்கு ஏற்பட்ட பேரவாவும், அதனுடைய தேசிய உணர்வுள்ள மிகப் பெரிய தொழில் நிறுவனங்களும், நிதித் துறையில் அதன் வெகுசில நிறுவனங்கள் செலுத்திய ஆதிக்கமும் அதற்கும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தின.

பொருளாதாரத் துறையில் ஏற்பட்ட போட்டி ராணுவக் களத்துக்கும் தாவியது. தனது மேலாண்மையை விரிவுபெறச் செய்யும் வெளியுறவுக் கொள்கையை ஜெர்மனி கடைப்பிடித்தது. புத்துயிர் பெற்ற ஜெர்மனியின் இந்த எழுச்சியைத் தாங்க முடியாமல் பிரிட்டனும் பிரான்ஸும் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து, ‘மூவர் அணி’ கண்டன. தன்னுடைய இயற்கையான வளர்ச்சியைத் தடுக்க பிற நாடுகள் சதிசெய்கின்றன என்று அச்சத்தால் வெகுண்டது ஜெர்மனி. அதனுடைய இயற்கையான வளர்ச்சி வேகம் இனி சாத்தியமில்லை என்ற உச்சத்தை அடைந்தவுடன், அந்த முட்டுக்கட்டையை உடைப்பதற்காகப் போரில் ஈடுபடத் தயாரானது ஜெர்மனி. இதன் விளைவுதான், முதல் உலகப் போர். ஜெர்மனியின் எழுச்சி எப்படி பிரிட்டனை அதிருப்திக்குள்ளாக்கியதோ அப்படியே சீனாவின் எழுச்சியும் இப்போதைய ஒரே வல்லரசான அமெரிக்காவை அதிருப்தியடைய வைத்திருக்கிறது. எப்படி பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனிக்கு எதிராக ரஷ்யாவுடன் கைகோத்தனவோ அப்படியே அமெரிக்காவும் தன்னால் முடிந்த அளவுக்கு பசிபிக் கடலோர நாடுகளுடன் கூட்டு சேர்ந்து சீனாவைக் கட்டுப்படுத்த முயல்கிறது.

அப்போதும் இப்போதும்

முதலாவதாக, 19-20-ம் நூற்றாண்டுகளில் இருந்த போட்டிகளுக்கும் இன்றைய போட்டிகளுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. ஏகாதிபத்திய ஜெர்மனிக்கும் பிரிட்டனுக்கும் அப்போது இருந்த போட்டி புதிய பொருளாதாரப் பிரதேசங்களைத் தங்களுடைய சந்தைகளாகப் பிடிப்பதில் இருந்தன; லெனின் அதை ‘ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டி’ என்றார். அவ்விரு நாடுகளும் தேசிய தொழில் துறைகளாலும் நிதித் துறை நிறுவனங்களாலும் ஆதரிக்கப்பட்டன அல்லது ‘ஏகபோக முதலாளித்துவம்’ அந்நாடுகளை ஆதரித்தது. இன்றைக்கு அது காலனிகளைப் பிடித்த நாடுகளுக்கு இடையிலான போட்டி அல்ல. சீனாவும் அமெரிக்காவும் உலகப் பொருளாதார முறைமையுடன் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு நாடுகளுமே மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளிகள்.

இரண்டாவதாக, ஏகாதிபத்திய ஜெர்மனி போருக்குச் செல்லத் தயாராக இருந்தது. காரணம், அதன் மூலம்தான் முட்டுக்கட்டை நிலையை முறியடிக்க முடியும் என்று அது கருதியது. உண்மையில், முதல் உலகப் போரால்தான் ஜெர்மனியின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. உலக அரங்கில் அந்நாடு அவமானப்படுத்தப்பட்டது. பிறகு, மக்களின் கோபமும் அதிருப்தியும்தான் ஜெர்மனியில் புரட்சிக்கு வழிவகுத்தது. ‘வெய்மார் குடியரசு’ அங்கு உருவானது, அடால்ஃப் ஹிட்லர் தலைவராக உருவெடுத்தது, இரண்டாம் உலகப் போர் மூண்டது எல்லாம் அதன் விளைவுகளே. சீனா இப்போதும் வளரும் வல்லரசுதான். கடந்த 40 ஆண்டுகளில் அது மிகப் பெரிய போர் எதிலும் ஈடுபட்டதில்லை. சீனாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்குமான பாதைகள் இப்போதும் திறந்தே இருக்கின்றன.

அப்படியென்றால், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இந்தப் போட்டி இன்னொரு பனிப்போருக்கு இட்டுச் செல்லுமா? இருக்கலாம். ஆனால், வேறு மாதிரியான உலக அமைப்பு முறையாக இருந்தால் அப்படி நடக்கலாம். இப்போதைய சூழல் வித்தியாசமானது. முதலாவது, அமெரிக்காவுக்கு எதிராக சித்தாந்தரீதியிலான அணி எதையும் உருவாக்க சீனா முயற்சி செய்யவில்லை. அதனுடைய நடவடிக்கைகள் எல்லாம் தன்னுடைய பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துவதும், சர்வதேசப் பொருளாதார முறைமையைத் தனக்குச் சாதகமாக மாற்றுவதும்தான். இரண்டாவதாக, உலகம் இப்போது துடிப்பான நாடுகளைக் கொண்ட அமைப்பு. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவதொரு நாடு வலிமையுடன் வளர்ந்துவருகிறது. மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் உலகளாவிய அந்தஸ்து பெறும் ஆசையுடன் மிகப் பெரிய புவி அரசியல் சக்தியாகத் தொடர்கிறது ரஷ்யா. தெற்காசியாவில் வளரும் சக்தியாகத் திகழ்கிறது இந்தியா. மேற்காசியாவில் ஆதிக்க சக்தியாக இருக்கிறது துருக்கி. சோவியத் ஒன்றியம் - அமெரிக்கா இடையே பனிப்போர் நிலவிய இரு துருவ வல்லரசு காலம்போல அல்லாமல், பல திசைகளிலும் போட்டிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் உலகமாக இப்போது மாறிவிட்டது.

முன்னர் சோவியத் ஒன்றியத்தைக் கட்டுக்குள் வைத்ததைப் போல சீனாவை இப்போது கட்டுப்படுத்தவே அமெரிக்கா விரும்பும். காரணம், மேற்கத்திய நாடுகளின் முறைமைக்கு சீனாதான் இப்போது மிகப் பெரிய சவால். பனிப்போர் காலத்தில் மேற்கு ஐரோப்பா மறுவளர்ச்சி பெற அமெரிக்கா நிதியுதவி அளித்தது, அட்லாண்டிக் கடலோர நாடுகளிடையே ராணுவக் கூட்டை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியத்தை ஆயுதப் போட்டியில் இறங்கவைத்து அதன் பொருளாதாரத்தை வலிமையிழக்க வைத்தது, சீனாவுக்கும் சோவியத்துக்கும் இடையிலான பிளவைப் பயன்படுத்திக்கொண்டது, உலகம் எங்கும் கம்யூனிஸ எதிர்ப்புப் பிரச்சாரத்திலும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இப்போது ஆசிய-பசிபிக் நாடுகளுடன் ராணுவக் கூட்டை வலுப்படுத்த முயல்கிறது. சீனாவின் செல்வாக்கைச் சமாளிக்க இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது. இந்தப் போட்டியை வர்த்தகம், தொழில்நுட்பக் களங்களுக்கும் கொண்டுசென்றுள்ளது. இப்படி சீனாவை அடக்கிவிட அமெரிக்கா கையாளும் உத்தியிலும் மூன்று பிரச்சினைகள் இருக்கின்றன.

இரண்டாவது கட்டுப்படுத்தல்

அமெரிக்கா எவ்வளவு தீவிரமாக முயன்றாலும் சீனாவுக்கு எதிரான வலுவான ராணுவக் கூட்டு உருவாகவில்லை. சீனாவைக் கட்டுப்படுத்திவிட முயலும் அமெரிக்கப் பாதுகாப்புக் கூட்டணியில் சேராமல் இந்தியா எச்சரிக்கையாக இருக்கிறது. அதற்குக் காரணம், இப்போது முன்பைப் போல இருமுனை உலகம் அல்ல; பலமுனை உலகம். ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளிடையே நேட்டோவைப் போல ராணுவக் கூட்டு ஏற்பட்டுவிடவில்லை. இரண்டாவதாக, அமெரிக்கா தொடுத்த வர்த்தக, தொழில்நுட்பப் போர்கள்கூட அறிவித்த லட்சியங்களை எட்டவில்லை. காப்புரிமை தொடர்பாகப் பல மாதங்களாகக் கடுமையாக மோதிவிட்டு அமெரிக்காவும் சீனாவும் புதிய வர்த்தக உறவின் முதல் கட்டத்துக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்காவிடமிருந்து மேலதிகமாகச் சரக்குகளை வாங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவும் அடுத்து அமல்படுத்தவிருந்த காப்புவரிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் தீர்வு ஏற்டாத நிலையில்கூட சமரசம் ஏற்பட்டிருக்கிறது. சீனாவின் தொழில்நுட்பப் பகாசுர நிறுவனமான ஹுவாவேயைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் லட்சியம்கூட நிறைவேறவில்லை. அந்நிறுவனம் ‘5ஜி’ தொழில்நுட்பத்தை வெளியிடுவதைத் தடைசெய்வதில்லை என்ற முடிவை இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் எடுத்துள்ளன.

மூன்றாவதாக, பனிப்போர் காலத்தில் கம்யூனிஸ்ட் நாடுகளுக்கிடையே இருந்த பூசலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவால் முடிந்ததால் சோவியத் ஒன்றியத்தை அதனால் கட்டுப்படுத்த முடிந்தது. அமெரிக்காவின் அந்த உத்தி குறித்துப் புத்தகம் எழுதிய ஜார்ஜ் கென்னன், ‘அமெரிக்காவுக்கு எதிரான சக்திகள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் கூட்டுசேரும்’ என்று 1954-ல் எச்சரித்தார். சீனாவும் சோவியத் ஒன்றியமும் கூட்டுசேரும் என்று அவர் கருதினார். பனிப்போர் காலத்தில் அப்படி ஏதும் நடக்கவில்லை. அமெரிக்காவால் சீனாவை அணுகி அப்படியொரு கூட்டில் சேரவிடாமல் தடுக்க முடிந்தது. ஆனால், இப்போது கென்னன் எச்சரித்தபடி ரஷ்யாவும் சீனாவும் கூட்டுசேர்ந்துள்ளன. இப்போதைய ரஷ்யா 1970-களில் இருந்த சீனாவைப் போல அல்ல; மிகவும் வலிமையானது, எல்லா கண்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆசை அதற்கு இருக்கிறது. சீனாவிடமிருந்து ரஷ்யர்களைப் பிரிப்பதும் அமெரிக்காவுக்கு எளிதல்ல. உண்மையில், வளர்ந்துவரும் சீனாவை எதிர்கொண்டாக வேண்டிய நிலையில் இருக்கிறது. இனி பொறுக்க முடியாது என்ற கட்டத்தையும் அது எட்டிவிடவில்லை. அமெரிக்காவுக்குப் புதிய சவால்தான் இது.

© தி இந்து, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x