Published : 03 Mar 2020 08:21 AM
Last Updated : 03 Mar 2020 08:21 AM

ட்ரம்ப் இந்தியப் பயணம்: இரு நாட்டு உறவு மேலும் வலுப்படட்டும்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பயணம் பெரிய அளவில் இந்தியாவுக்கு உத்வேகம் அளிக்கும் உடன்படிக்கைகள் ஏதும் இன்றி முடிந்தது ஏமாற்றம்தான் என்றாலும், மீண்டும் ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில் இரு தரப்பு உறவு மேலும் வலுவடைவதற்கான சாத்தியங்களை இது உருவாக்கியிருக்கிறது.

ட்ரம்ப் வாழ்வில் இது மறக்க முடியாத ஒரு பயணம். எந்த ஒரு வெளிநாட்டிலும் இப்பேர்ப்பட்ட ஒரு கூட்டத்தை அவர் கண்டிருக்க முடியாது. அஹமதாபாதில் அளிக்கப்பட்ட வரவேற்பில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கானோரைப் பார்த்து அவர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். மோடி - ட்ரம்ப் இருவர் இடையிலான நெருக்கமானது, இந்திய – அமெரிக்க உறவில் இதுவரை இல்லாத புது நெருக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. இரு நாட்டு உறவு என்பதைத் தாண்டி, நேரடியாக வெளிநாட்டு அரசியலில் மூக்கை நுழைக்கும் அளவுக்கான நெருக்கமானது எதிர்வரும் காலத்தில் எத்தகைய விளைவுகளை உண்டாக்கும் என்பது இங்கே ஒரு முக்கியமான கேள்வி என்றாலும், சீனாவின் பிரம்மாண்ட வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முனைப்பும் இப்படியான ஒரு உறவுக்குப் பின் இருப்பதை மறுக்க முடியாது.

ட்ரம்ப் வருகையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று அமெரிக்கத் தேர்தல். அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் சில மாதங்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘அடுத்த முறையும் ட்ரம்பின் ஆட்சி’ என்று வெளிப்படையாக முழங்கினார் மோடி. அமெரிக்க இந்தியர்களில் ஐந்தில் ஒருவர் குஜராத்தி என்கிற கணக்கோடும், மிகுந்த செல்வாக்கு மிக்க சமூகங்களில் ஒன்று குஜராத்தி சமூகம் என்ற கணக்கோடும் பிணைத்துப் பார்க்க வேண்டிய பயணம் இது. பாரம்பரியமாக ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களான அமெரிக்கவாழ் குஜராத்தி சமூகத்தை இப்போது ட்ரம்புக்காக குடியரசுக் கட்சி நோக்கி நகர்த்துகிறார் மோடி. அந்த வகையில் தன் நோக்கத்தை ட்ரம்ப் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். மீண்டும் அவரே அதிபராகும் சூழலில், இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் வலுப்படும்; தேர்தல் முடிவுகள் மாறினால் நிலைமை தலைகீழாகவும் கூடும்.

இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையில் ஆக முக்கியமான உடன்படிக்கைகள் என்று எதுவும் கையெழுத்தாகவில்லை. ஐந்து உடன்படிக்கைகள் தயாராகும் என்று கூறியிருந்தாலும் மூன்றுதான் இறுதிசெய்யப்பட்டன. அவற்றில் இரண்டு சுகாதார சேவை தொடர்பானவை; இன்னொன்று, இயற்கை நிலவாயுவைக் குழாய் வழியாகக் கொண்டு செல்வதற்கானது. முக்கியமாக, இந்திய ராணுவத்துக்குத் தேவைப்படும் ஹெலிகாப்டர்களையும் சாதனங்களையும் 300 கோடி டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றம், கூட்டு ராணுவப் பயிற்சி ஆகியவை அதிகரிக்கும் என்று தெரிகிறது. அரசியல், வணிகத் தளத்திலும் அது மேம்பட்டால் நல்லது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x