Published : 28 Feb 2020 06:47 AM
Last Updated : 28 Feb 2020 06:47 AM

எல்ஐசி என்னும் எஃகுக் கோட்டை

அறிவுக்கடல்

எல்ஐசியின் வாடிக்கையாளர்களாகிய எளிய மக்களிடம் சில தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தற்போது செய்துகொண்டிருக்கும் பிரச்சாரம் இதுதான்: ‘எல்ஐசியைத் தனியாரிடம் தரப்போகிறார்களாம், உங்கள் பணத்தை உடனே எடுத்துவிடுங்கள்.’ அது மட்டுமில்லை. ‘அரசு தன் நிதித் தேவைகளுக்காக எல்ஐசியின் பங்குகளைக் கொஞ்சம் விற்பதாக அறிவித்துள்ளது...’, ‘அரசுக்கு எல்ஐசியில் 5% பங்குகள் மட்டுமே உள்ளன, அதைத்தான் விற்கிறது...’ இப்படி ஏராளமான தவறான புரிதல்களும், தவறான பிரச்சாரங்களும் வலம்வந்துகொண்டிருக்கின்றன.

உண்மையில், எல்ஐசி முழுக்க முழுக்க 100% அரசு நிறுவனம். இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதலான பொதுத் துறை வங்கிகளில் கொஞ்சம் பங்கு விற்பனை செய்ததுபோலவே, எல்ஐசியிலும் செய்யப்போவதாக அரசு அறிவித்துள்ளது. அவை இப்போதும் அரசு வங்கிகளாகச் செயல்படுவதைப் போலவே எல்ஐசியும் தொடர்ந்து செயல்படும்.

லாபம் இல்லை... உபரி!

எல்ஐசியின் லாபத்தில் அரசு 5% மட்டும் தானே எடுத்துக்கொள்கிறது, அப்படியானால் அரசின் பங்கு அவ்வளவுதானே இருக்க முடியும்? அப்படி அல்ல! காப்பீட்டு நிறுவனங்களில் லாபம் என்ற ஒன்றே கிடையாது. பலரிடமிருந்தும் ‘பிரிமியங்கள்’ வாங்கி, அவற்றில் இழப்பு ஏற்பட்டவர்களுக்கு வழங்கியதுபோக மீதமிருப்பது உபரி என்று அழைக்கப்படும். அந்த உபரியில் நிறுவனத்தின் உரிமையாளர் சிறிய பங்கை எடுத்துக்கொண்டு, மீதத்தைப் பாலிசிதாரர்களுக்குத் தந்துவிட வேண்டும். அதனால்தான், வட்டி என்று எதுவும் இல்லாமல் ‘போனஸ்’ என்று அந்த 95% பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அப்படியானால், எல்ஐசியின் பாலிசிதாரர்களுக்குப் பாதிப்பே இல்லையா? இல்லை என்பதுதான் உண்மை. எல்ஐசியின் நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதுடன், எல்ஐசிக்கு அளித்துவருகிற அரசு உத்தரவாதத்தையும் தொடர்ந்து அளிக்கப்போவதாகவே அரசு கூறியுள்ளது. 64 ஆண்டுகளில் எல்ஐசி நஷ்டமே அடைந்ததில்லை என்பதால், 1956-ல் எல்ஐசி தொடங்கும்போது வழங்கப்பட்ட இந்த உத்தரவாதத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே வரவில்லை என்பது மறைக்கப்படுகிற மற்றொரு உண்மை. சரி, பாலிசிதாரர்களுக்கு எந்தப் பாதிப்புமே இல்லையென்றால் ஏன் ஊழியர்கள் போராடுகிறார்கள்? அவர்களின் வேலைக்கு ஆபத்தா? அதுவும் இல்லை. எல்ஐசியின் பாலிசிதாரர்கள், முகவர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு எந்தப் பாதிப்புமே வரப்போவதில்லை.

1947-ல் இந்தியா விடுதலை அடைந்தபோது, போதுமான உள்கட்டமைப்பு வசதிகளோ கனரகத் தொழில்களோ இல்லை. அவற்றைத் தொடங்க மிகப் பெரிய அளவில் நிதி தேவைப்பட்டது. ஆயுள் காப்பீடு என்பது நீண்ட காலத்துக்கானது என்பதால், மக்களின் பணம் அதிக காலம் காப்பீட்டு நிறுவனத்திடம் இருக்கும். இந்தியாவில் அப்போது இருந்த தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், மக்கள் பணத்தைத் தங்கள் தொழில்களுக்குப் பயன்படுத்திக்கொண்டு, லாபம் வந்தால் தாங்கள் எடுத்துக்கொண்டு, நஷ்டம் வந்தால் மக்கள் தலையில் சுமத்தி, மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தன. மக்கள் பணத்துக்குப் பாதுகாப்பு வேண்டும். அதேநேரத்தில், அது நாட்டுக்கும் பயன்பட வேண்டும் என்ற ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ நோக்கத்துடன் 1956-ல் அப்போதைய பிரதமர் நேருவும் நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக்கும் 245 தனியார் காப்பீட்டு நிறுவனங்களைத் தேசியமயமாக்கி எல்ஐசி நிறுவனத்தை உருவாக்கினர்.

அப்போது அந்த 245 நிறுவனங்களினுடைய பாலிசிதாரர்களின் பணத்தைத் திருப்பித்தர அந்த நிறுவனங்களிடம் போதுமான கையிருப்பு இல்லாததால், அதற்கு வசதியாக ரூ.5 கோடியை மத்திய அரசு வழங்கியது. அந்தக் கையிருப்பை முதலீடாகக் கணக்கில் காட்டிய எல்ஐசி, அன்று முதல் இன்று வரை நஷ்டம் அடையவே இல்லை. அடையாளபூர்வமாக உபரியில் 5%-ஐ அரசு எடுத்துக்கொள்ளத் தொடங்கியது.

போராட்டங்கள் ஏன்?

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டபோது, குறைந்தபட்சம் ரூ.100 கோடி முதலீடுசெய்ய வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. எனவே, எல்ஐசி தனது லாபத்தில் 5% பங்காக ரூ.1,031 கோடியைக் கொடுத்த 2009-10-ல் அரசு ரூ.95 கோடியை முதலீடுசெய்வதாக அறிவித்தது. ஆக, அரசின் முதலீடு மொத்தம் ரூ.100 கோடியாகியது. ஆனாலும், 95% உபரியைப் பாலிசிதாரர்களுக்குப் பிரித்துத்தரும் நடைமுறையே இன்று வரை தொடர்கிறது. 2018-19-ம் ஆண்டுக்கு அரசுக்குரிய அந்த 5% லாபப் பங்காக, ரூ.2,610 கோடியை எல்ஐசி வழங்கியுள்ளது. ரூ.100 கோடி முதலீட்டுக்கு ரூ.2,610 கோடி லாபம் அளிக்கக்கூடிய ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பது அவசியமல்ல என்பதாலேயே அது எதிர்க்கப்படுகிறது.

மக்கள் பணத்தைப் பாதுகாப்பதுடன் மக்கள் சேமிப்பைத் திரட்டி அரசின் திட்டங்களுக்குத் தர வேண்டும் என்பதும் எல்ஐசி தொடங்கப்பட்டதற்கான நோக்கங்களில் அடிப்படையானது. அதன்படியே, இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இதுவரை சற்றேறக்குறைய ரூ.35 லட்சம் கோடியை எல்ஐசி திரட்டித் தந்துள்ளது. தொடங்கப்பட்ட நோக்கத்தை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவருகிற ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பது நியாயமல்ல என்பதால் அது எதிர்க்கப்படுகிறது.

தற்போது, எல்ஐசி ரூ.100 முதலீடுசெய்தால் அதில் ரூ. 85ஐ அரசின் பங்குகள், திட்டங்களில் முதலீடுசெய்கிறது. அரசுப் பத்திரங்களின் வட்டி விகிதம் மிகக் குறைவு என்றாலும், எல்ஐசி அவற்றில் முதலீடு செய்துவருகிறது. பங்கு விற்பனைக்குப் பின், இதைவிட லாபம் தரும் முதலீடுகளை நோக்கி எல்ஐசியின் முதலீடுகள் திருப்பிவிடப்பட்டால் அரசுக்குக் கிடைக்கும் நிதி குறையும். சாப்பிட்டால் ஜிஎஸ்டி, கடனுக்கு வட்டி கட்டினால் ஜிஎஸ்டி என்று ஏற்கெனவே சகலத்துக்கும் எளிய மக்கள் மீது வரிகளைச் சுமத்தும் அரசு, ஆண்டுக்கு சுமார் ரூ.4 லட்சம் கோடி (2017-18-ல் ரூ.3.82 லட்சம் கோடி!) எல்ஐசி செய்யும் முதலீடு கிடைக்காவிட்டால் இன்னும் வரி போடுமே! அது எல்ஐசியின் பாலிசிதாரர்கள், முகவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களையும் பாதிக்கும் என்பதால், மக்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து நிற்கிறார்கள். எல்ஐசி மீது அடி விழுந்தால், அனைத்து மக்கள் மீதும் விழும் என்பதாலேயே அது எதிர்க்கப்படுகிறது.

2018-19 நிதிநிலை அறிக்கையில் திட்டமிட்டதைவிட ரூ.1.7 லட்சம் கோடி குறைவாகவே உண்மையான வருவாய் வந்துள்ளது. இதைத்தான், ‘இந்தியப் பொருளாதாரம் ஒரு அமைதியான மாரடைப்பைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது’ என்று கடந்த ஆண்டு வரை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்தவரான ரத்தின் ராய் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறான மோசமான சூழலில், எல்ஐசியின் பங்குகளும் விற்கப்படுவது என்பது அரசின் நிதிநிலையை மேலும் மோசமாக்கவே செய்யும் என்பதாலும், இந்தியப் பொருளாதாரத்துக்கு அது நல்லதல்ல என்பதாலுமே எல்ஐசியின் ஊழியர்கள் இன்று போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.

தொடரும் நம்பிக்கை

எவ்வளவு லாபம் ஈட்டினாலும் மக்கள் பணத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தை எல்ஐசி என்றுமே விட்டுக்கொடுக்கவில்லை. மற்ற துறைகளில் எல்லாம் தனியாரின் சேவையே சிறப்பு என்று நம்பவைக்கப்பட்டாலும், ஆயுள் காப்பீட்டில் இன்று வரை எல்ஐசிதான் மிக அதிக விகிதத்தில் பாலிசிதாரர்களின் பணத்தைத் திருப்பித்தருகிறது. அதனால்தான், 2000-ல் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பின், 23 தனியார் நிறுவனங்கள் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக முயன்றும் 70-75% சந்தைப் பங்கை எல்ஐசியே கொண்டிருக்கிறது. வங்கி, தொலைத்தொடர்பு என்று தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்ட அனைத்துத் துறைகளிலும் முக்கிய இடத்தைக் கைப்பற்றிய தனியார் நிறுவனங்கள், ஆயுள் காப்பீட்டுத் துறையில் மட்டும் சராசரியாக 1% சந்தைப் பங்கை மட்டுமே கொண்டிருக்கின்றன.

எல்ஐசியுடன் நியாயமாகப் போட்டியிட்டு அதைத் தோற்கடிக்க முடியாது என்பதால்தான், ‘எல்ஐசி தனியார்மயமாகிறது, பணம் போய்விடும்’ என்று பிரச்சாரம் செய்கிறார்கள். 5% அல்லது 10% எல்ஐசியின் பங்குகள் விற்கப்பட்டாலே அங்கு மக்கள் பணம் பாதுகாப்பாக இருக்காது என்றால், 100% பங்குகள் தனியாரிடம் உள்ள நிறுவனங்களில் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று மக்கள் சிந்திக்க மாட்டார்களா? எல்ஐசி பாதுகாப்பாகத்தான் உள்ளது, அதிலுள்ள மக்களின் பணமும் பாதுகாப்பாகத்தான் உள்ளது. ஆனால், எல்ஐசியின் பங்கு விற்பனை நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மக்களுக்கும் நல்லதல்ல.

- அறிவுக்கடல், தொடர்புக்கு: kadal27@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x