Published : 27 Feb 2020 06:41 AM
Last Updated : 27 Feb 2020 06:41 AM

அரசின் திட்டங்கள் யாருக்காக?

கடந்த ஆண்டில் தமிழக அரசு சேலத்தையும் சென்னையையும் இணைக்க, புதிதாக எட்டுவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை வெளியிட்டது. இதனால், இந்த நகரங்களுக்கு இடையேயான தூரம் 60 கிமீ வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் வேளாண் மக்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். பொருளாதார வளர்ச்சிக்கு இதுபோன்ற திட்டங்கள் முக்கியம் எனும் வாதம் ஒரு புறமும், நிலங்களை மட்டுமே நம்பி வாழும் மனிதர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது எனும் வாதம் இன்னொரு புறமும் எழுந்தன.

2018-ல் கேரளம் வரலாறு காணாத பெரும் மழை வெள்ளத்தைச் சந்தித்தது. அது போன்ற பேரழிவுகள் நூற்றாண்டுக்கு ஒரு முறை வரும், அதை எதிர்கொள்வது கடினம் எனும் வகையில் அரசும் நிர்வாகமும் கடந்துபோயின. ஆனால், 2019-ல் கேரளத்தில் மீண்டும் பெரும் மழையும் வெள்ளமும் சேதமும் நிகழ்ந்தன. இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பேரழிவு நிகழும் சாத்தியங்கள் பத்தாயிரத்தில் ஒன்று என்றாலும், இந்தத் தொடர் நிகழ்வை நாம் சாதாரணமாகக் கடந்துபோக முடியாது என்கிறார் இந்தியாவின் தலைசிறந்த சூழலியல் ஆய்வாளரான மாதவ் காட்கில். நாட்டின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் பலவும் மையப்படுத்தப்பட்ட நிர்வாக அலகுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. இன்றைய அதீத நுகர்வு, அதீத சக்தி உபயோகம் எனும் வாழ்க்கை முறையை மேலும் வலுப்படுத்தவே இந்தத் திட்டங்கள் உதவுகின்றன. அதீத சக்தி நுகர்வு வாழ்க்கை முறை, சூழல் சமநிலையைப் பெரிதும் குலைக்கும் திசையில் செல்கிறது என்பது அவர் கருத்து.

இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்கள்

இதற்கு உதாரணமாக, அவர் சாலக்குடி ஆற்றின் குறுக்கே ஏற்படுத்தப்படவுள்ள 163 மெகாவாட் அதிரப்பள்ளி நீர்மின் திட்டத்தைக் குறிப்பிடுகிறார். இந்த நதியின் கரையில் உள்ள பசுமைமாறாக் காடுகளும் மீன்வளமும் மிகவும் அபூர்வமானவை. மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக முக்கியமான இந்தச் சூழலை மின் திட்டம் அழித்துவிடும் என்று கேரள பல்லுயிர்க்கழகம் இதை எதிர்த்தது. உள்ளூர் மக்கள் இந்தத் திட்டத்துக்கு எதிராகப் போராடிவருகிறார்கள். நதிநீர் ஆராய்ச்சிக் கழகமும் இந்தத் திட்டத்தில் பல பிழைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதில் மிக முக்கியமானது, மின் உற்பத்தித் திட்டத்துக்குத் தேவையான அளவு நீர் இல்லை என்பதே.

எனினும், மாநில அரசின் தொடர்ந்த அழுத்தம் காரணமாக, காட்கிலை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அந்தத் திட்டத்தை மறுபரிசீலிக்கச் சொன்னது. காட்கில் குழு, கேரள வனத் துறை ஆராய்ச்சி நிறுவனம், கேரள பல்லுயிர்க்கழகம், வெப்ப மண்டலத் தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம், பழங்குடியினர் என அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, திட்டத்தின் பாதகங்களை கேரள மின்வாரியத்தின் முன் வைத்தார். அவர் முன் வைத்த எந்தத் தரவையும் கேரள மின் வாரியம் எதிர்க்கவில்லை. இதற்குப் பின்பும் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படுமானால், அதனால் பயனடைபவர்கள் ஒப்பந்ததாரர்களும் அரசியலர்களும் மட்டுமே என்கிறார் காட்கில்.

வளர்ச்சி நிலையானதுதானா?

சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக, அது உருவாக்கிய பெரும் கட்டமைப்பைச் சொல்கிறார்கள். நாடெங்கும் அகலமான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதும், தொழிற்சாலைகளும் வீடுகளும் கட்டப்பட்டதும், பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன. இதற்காக, சீனா 2011-2013 ஆண்டுகளில் உபயோகித்த சிமென்ட், அமெரிக்கா 20-ம் நூற்றாண்டு முழுதும் உபயோகித்த அளவுக்குச் சமமானது என்கிறது ‘எகனாமிஸ்ட்’ இதழ். சிங்கப்பூர் 1960-லிருந்து உலகெங்குமிருந்து மணலை இறக்குமதிசெய்து, தன் நிலப்பரப்பை 25% அதிகரித்திருக்கிறது. அளவற்ற மணல் இருந்தாலும் கட்டுமானத்துக்கு உதவாது என உலக ஏழை நாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்துகொண்டிருக்கின்றன அமீரக நாடுகள்.

அடுத்த 40 ஆண்டுகளில், கட்டுமானத் துறைக்கான மணல் தேவை 200% அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது. அதில் பெரும்பாலும் ஆசிய நாடுகளிலிருந்து ஏற்றுமதி நடக்கப்போகிறது. இதனால், ஆறுகள் தங்கள் நீர்ப் போக்கை இழந்து, நிலத்தடி நீர் குறைந்து, சூழல் மாறி, உணவு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படப்போகிறது. தமிழகத்தில் காவிரியும் பாலாறும் மணல் சுரங்கங்கள் ஆனது நம் கண் முன்னே நிகழ்ந்துகொண்டிருக்கும் சூழலியல் சூறையாடல். காவிரிப் படுகை வேளாண்மை பாதிக்கப்பட்டிருப்பது தற்செயல் அல்ல. மணல் அள்ளுவதால் கட்டுமானத் துறை வளர்ச்சி பெற்றுப் பொருளாதாரம் வளர்கிறது. ஆனால், சூழல் என்ன ஆகியிருக்கிறது? இந்த வளர்ச்சி நிலையானதுதானா?

ஜோசஃப் ஸ்டிக்லிஸ் எனும் நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர், ஒரு நாடு மனிதனால் உற்பத்திசெய்யப்படும் பொருட்களின் பணமதிப்பு எனும் அலகுடன் அதன் இயற்கை வளம், மனித வளம், சமூக வளம் எனும் நான்கு மூலதனங்களும் ஒத்திசைந்த வளர்ச்சியையே முன்னெடுக்க வேண்டும் என்கிறார். ஆனால், தற்போது நாட்டின் தலைவர்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்படும் பொருளாதாரத் திட்டங்கள், நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் பொருட்களின் மதிப்பை மட்டுமே அதிகரிக்கும் வகையிலானவை. கேரளத்தில் 2018, 2019-ம் ஆண்டுகளில் நிகழ்ந்த வெள்ளத்தையும் நிலச்சரிவையும் அதனால் ஏற்பட்ட பொருட்சேதத்தையும் கணக்கில்கொள்ளாமல், அதையடுத்து வீடுகளுக்கான தேவை அதிகரிப்பதையும், அதற்காகக் கல்குவாரிகள் தோண்டப்படுவதையும் வளர்ச்சியாகப் பார்க்கும் ஒரு பார்வை. கல்குவாரிகள் தோண்டுவதால் ஏற்படும் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி, குவாரித் தொழிலால் பாதிக்கப்படும் மக்களுக்கான மருத்துவத் துறையின் வளர்ச்சி என்று மட்டுமே பார்க்கும் குறுகிய வளர்ச்சியியல் பார்வை என்கிறார் காட்கில்.

முழுமையான பார்வை வேண்டும்

மேற்கத்திய முதலாளித்துவம், தனது காலனிகளி லிருந்து கொள்ளையடித்த செல்வங்களையும் இயற்கை வளங்களையும் கொண்டு, அதிக செல்வ வளத்தால் கட்டப்பட்ட ஒரு பொருளாதார மாதிரியை உருவாக்கி விஸ்தரித்தது. இது அதிக இயற்கை வளத்தை வீணடிக்கும் பொருளாதார மாதிரி. ஆனால், இந்தியா நிதியாதாரங்களும் இயற்கை வளங்களும் குறைந்த, ஆனால் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. எனவே, இயற்கை வளங்களை அளவாக உபயோகித்து காத்துக்கொள்ளும் பொறுப்பு உள்ளூர் மக்களிடமே இருக்கும்படி, அதிக மனித வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்தியப் பொருளாதாரத் திட்டங்கள் மிகவும் புதிய முறையில் உருவாக்கப்பட வேண்டும் என்பது ஜே.சி.குமரப்பா முன்வைத்த கருத்து.

உற்பத்தி மற்றும் அதீத நுகர்வுப் பொருளாதார வளர்ச்சியின் பக்கவிளைவுகள்தான் சென்னையிலும் கேரளத்திலும் நிகழ்ந்த வெள்ளச் சேதம். உற்பத்திப் பெருக்கு எனும் குறுகிய பார்வையை விடுத்து இயற்கை வளம், மனித வளம், சமூக வளம் எனும் முழுமையான பார்வையை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள், மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும்.

- பாலசுப்ரமணியம் முத்துசாமி,

‘இன்றைய காந்திகள்’ நூலாசிரியர்.

தொடர்புக்கு: arunbala9866@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x