Published : 26 Feb 2020 07:42 AM
Last Updated : 26 Feb 2020 07:42 AM

மேற்படிப்புக்கு ஜெர்மனி காட்டும் வழி

ஜே.ஜெ

மேற்படிப்புக்காகத் தன் பிள்ளைகளை வெளிநாடு அனுப்புவதென்பது பல பெற்றோர்களின் கனவு. ஆனால், நிறைய நாடுகள் படிப்பு எனும் பெயரில் பெற்றோரின் சேமிப்புகளை உறிஞ்சிக் குடித்துவிடுகின்றன. ஆனால், ஒரு சில நாடுகள் நிறைய படிப்புகளை இலவசமாகவே தருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? படித்த பின் அங்கேயே வேலையும் கிடைத்துவிடுகிறது. அந்த வகையில், ஜெர்மனியில் மேற்படிப்பு படிக்க வருபவர்களுக்கு ‘டிஏஏடி (DAAD)’ ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்காகத் தன் பல்கலைக்கழகத்தின் மேற்படிப்புக் கதவுகளை விஸ்தாரமாகத் திறந்துவைத்திருக்கிறது ஜெர்மனி. 2017-18 கல்வியாண்டைப் பொறுத்தவரையில், ஜெர்மனியில் படித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 17,570. படித்த பின் இங்கேயே வேலையும் கிடைத்துவிடுவதால் ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்குப் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவருகிறது.

அமெரிக்காவின் ‘க்ரீன் கார்டு’போலவே ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் அதிக திறமை தேவைப்படுகிற வேலைகளுக்கு ‘ப்ளூ கார்டு’ கொடுக்கப்படுகிறது. ஜெர்மனியில் வேலைக்கான ‘ப்ளூ கார்டு’ கிடைக்க வேண்டும் என்றால், குறைந்தது 55,200 யூரோ வருடச் சம்பளம் தருகிற வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஜெர்மன் மொழி தெரிந்திருந்தால் இதுபோன்ற வேலைகள் எளிதில் கிடைக்கும். அதனால், படிக்கும் காலத்திலேயே ஜெர்மன் மொழியையும் பயின்றுவிட்டால் அவர்களின் எதிர்காலம் இன்னும் பிரகாசமாக இருக்கும். ஜெர்மனியைப் பொறுத்தவரையில், வேலைக்கான ‘ப்ளூ கார்டு’ அறிமுகப்படுத்தப்பட்ட 2012 முதல் 2018 வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான ‘ப்ளூ கார்டு’கள் வழங்கப்பட்டுள்ளன. 2018 மட்டும் 27,241 ‘ப்ளூ கார்டு’கள் வெளிநாட்டினருக்காக வழங்கப்பட்டுள்ளன. இதில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமானது.

ஜெர்மனியில் மேற்படிப்பு படிக்க விரும்புபவர்கள் முதலில் www.daad.de என்ற இணையதளத்தைப் பார்வையிட்டுவிடுவது நல்லது. இதன் புதிய தலைவர் ஜாய்பிராட்டோ முகர்ஜி. பெயரைப் பார்த்தவுடனே ஊகித்திருப்பீர்கள். ஆம், இவர் இந்திய வம்சாவளிதான். பொதுவாக, பொதுப் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்புக்காக எந்தப் பணமும் கட்டத் தேவையில்லை. தனியார் என்றால், குறிப்பிட்ட தொகை கட்ட வேண்டியிருக்கும். முக்கியமாக, ஜெர்மனி வருவதற்காக விசாவுக்கு அணுகும்போதே 10,236 யூரோ உங்கள் வங்கிக் கணக்கில் காட்ட வேண்டியிருக்கும். ஜெர்மனி வந்தவுடன் இந்தக் கணக்கிலிருந்து மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் செலவுக்கு எடுத்துக்கொள்ளலாம். பகுதி நேர வேலை மூலமாகவும் சம்பாதித்துக்கொள்ளலாம். படிக்கும் காலத்தில் வாரத்துக்கு 20 மணி நேரம் வரை பகுதிநேர வேலைசெய்யலாம்.

இந்தியா, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். நிறைய தமிழ்க் கடைகள் இருக்கின்றன. நம் பாரம்பரியக் காய்கறிகள், மசாலா வகைகள், உணவுப் பொருட்கள் அனைத்தும் ஜெர்மனியில் உங்களுக்கு எளிதாகக் கிடைக்கின்றன. கிறிஸ்தவ நாடாக இருந்தாலும், நிறைய மசூதிகளும் கோயில்களும் உள்ளன. கால நிலையைப் பொறுத்தவரையில், குளிர்காலத்தில் மைனஸில் இருக்கும் வெப்பநிலை, கோடையில் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இந்தச் சமயத்தில், எங்கு நோக்கினும் வண்ண மலர்கள் நம் கண்களை ஈர்க்கும். வசந்த காலத்தில் செர்ரி மலர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக்குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும். இதையெல்லாம் படிக்கும்போது நாமும் ஜெர்மனியில் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா?

- ஜே.ஜெ, ஜெர்மனியில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

தொடர்புக்கு: jpjesu@googlemail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x