Published : 25 Feb 2020 07:26 AM
Last Updated : 25 Feb 2020 07:26 AM

அசத்துகிறார் ஜெகன்!

வேலையின்மைக்குத் தீர்வு... பெண் தொழில்முனைவோர்கள்!

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் தீர பெண்கள் தொழில்முனைவோராவதுதான் சிறந்த தீர்வு என்கிறது கூகுள், பெயின் அன்ட் கம்பெனி இணைந்து நடத்திய சமீபத்திய ஆய்வு. புதிய நிறுவனங்களைத் தொடங்கி அவை தன்னளவில் நிலைபெற்றுவிட்டால் 2030-ம் ஆண்டு வாக்கில் 17 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமாம். இது வேலைசெய்யும் வயதில் இருக்கும் மக்கள்தொகையில் 25%. சிறிய, நடுத்தர, பெரிய தொழில்கள் என்று அனைத்து இனங்களிலும் சேர்த்து 20% நிறுவனங்களுக்குத்தான் பெண்கள் உரிமையாளர்களாக இருக்கின்றனர். இந்நிறுவனங்களில் நேரடியாக 2.7 கோடிப் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மகளிர் தொழில்முனைவோர் எண்ணிக்கை அதிகரித்தால் நேரடியாக மேலும் 5 கோடி முதல் 6 கோடிப் பேர் வரையிலும் மறைமுகமாகவும் தூண்டப்பட்டும் 10 கோடி முதல் 11 கோடிப் பேர் வரையிலும் வேலைவாய்ப்பு பெறுவர். இதுவரை சந்தையை நாடியிராத வாடிக்கையாளர்களைப் பெண் தொழில்முனைவோர் வெற்றிகரமாக வர்த்தகத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். பெண் தொழிலதிபர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்கு நிதிச் சுதந்திரம் கிடைக்கும், அவர்கள் அதிக எண்ணிக்கையில் சக பெண்களுக்கு வேலை தருவார்கள், பெண்களின் உடல்நலமும் கல்வியறிவும் மேம்படும் என்கிறது இந்த ஆய்வு.

அசத்துகிறார் ஜெகன்!

மக்கள்நலத் திட்டங்களை முன்னெடுப்பதில் தென்னிந்தியாதான் எப்போதும் முன்னிலையில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டுவரும் முன்னெடுப்புகளைப் பார்க்க வேண்டும். ‘ஜெகன் அண்ணா வசதி தேவெனா’ என்ற திட்டத்தை அவர் கடந்த திங்கள்கிழமையன்று விஜயநகரத்தில் தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் 11,87,904 மாணவர்கள் பயனடையவிருக்கிறார்கள். இதற்கென 2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஏழை மாணவர்கள் பணமில்லை என்ற காரணத்துக்காக மேல்படிப்பைப் பாதியிலேயே விட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்படி, தொழிற்கல்வி மாணவர்கள் 10 ஆயிரமும், பாலிடெக்னிக் மாணவர்கள் 15 ஆயிரமும், பட்டப்படிப்பு மாணவர்கள் 20 ஆயிரமும் ஆண்டுக்கு இரண்டு தவணைகளில் பெறுவார்கள். இந்தத் தொகையானது அந்த மாணவர்களின் தாயின் வங்கிக்கணக்கிலோ அல்லது பிற பாதுகாவலர்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தப்படும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, பட்டியலின/பழங்குடியினர் மாணவர்கள் கட்டிய கல்விக் கட்டணம் முழுவதுமாகவே இந்தத் திட்டத்தின் கீழ் திருப்பித் தரப்படுமாம். நீங்கள் அசத்துங்கள் ஜெகன்!

சூழல் மாசைத் தடுக்கும் பாக்டீரியா

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க முடியவில்லையே என்று ஏங்கும் சூழலியல் ஆர்வலர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது புது வகை பாக்டீரியா. இதற்கு பிரபுர்க்கோல்டெரியா மாட்லெனியானா என்று பெயரிட்டுள்ளனர். இந்தத் தனித்துவமான நுண்ணுயிரி, புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களைக்கூட பகுக்கும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. நிலக்கரி, இயற்கை நிலவாயு, எண்ணெய், தேவையற்றவை என்று வீசியெறியப்படும் கழிவுகள் என்று எதை எரித்தாலும் அதில் வெளியாகும் ரசாயனம்தான் புற்றுநோயை உண்டாக்குகிறது. இந்தப் புதிய நுண்ணுயிரியோ எளிதில் ஆவியாகிற, நிலையற்ற கூட்டுப்பொருள்களைக்கூட சிதைய வைத்துவிடும். வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனையும் ஈர்த்து மண்ணில் கலக்க வைக்கும். மண்ணில் இயற்கையாகக் கலந்திருப்பதும் தாவரங்களில் நிறைந்திருப்பதுமான நார்ப் பிணைமங்களை இது உடைக்கிறது. மண்ணில் கலந்துள்ள கரிமங்களைச் சுழற்சிக்குள்ளாக்க இது பெரும்பங்கு ஆற்ற முடியும். இயற்கையான கழிவுகளை இதைக் கொண்டு பகுத்துவிடலாம். இந்த நுண்ணுயிரிக்கும் காடுகளில் உள்ள மரங்களுக்கும் உள்ள இணக்கமான உறவு என்ன என்று ஆராய்ந்தபோது, இந்த நுண்ணுயிரி பெருக வேண்டும் என்பதற்காக மரங்கள் இதற்குக் கரிமங்களை ஊட்டுகின்றன. பதிலுக்கு நைட்ரஜன், பாஸ்பரஸ் என்கிற ஊட்டச்சத்துகளை இது மரங்களுக்கு அளிக்கிறது. இது எப்படி கரிமங்களை உடைக்கிறது என்ற நடைமுறையைக் கண்டுபிடித்துவிட்டால் மண்வளத்தைக் காப்பது, எதிர்கால உலக பருவநிலை எப்படி இருக்கும் என்று ஊகிப்பது ஆகியவை எளிதாகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x