Last Updated : 21 Feb, 2020 07:47 AM

 

Published : 21 Feb 2020 07:47 AM
Last Updated : 21 Feb 2020 07:47 AM

பாம்புக் கடி சிகிச்சையில் புதிய அணுகுமுறை தேவை!

சமீபத்தில் கேரளாவில் 10 வயதுப் பள்ளி மாணவி பாம்பு கடித்து இறந்துபோனது சமூக ஊடகங்களில் வைரலானது. உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, உலகில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர். ஆப்பிரிக்கா, தென்அமெரிக்காவை அடுத்து இந்தியாவில்தான் பாம்புக் கடி இறப்புகள் அதிகம். இங்கு வருடந்தோறும் 28 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆட்பட்டு, அதில் 50 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர்; சுமார் 5 லட்சம் பேர் உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் பாம்புக் கடியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம், கேரளாவுக்கு அடுத்தபடியாக தமிழகம் இருக்கிறது. இங்கு இறப்பவர்கள் 95% பேர் கிராம மக்கள். அப்படி இறப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் குழந்தைகளும் இளைய வயதினரும்தான். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்துக்குப் பொருளீட்டும் நபர்களாக இருக்கின்றனர். அவர்களின் இறப்பு அந்தக் குடும்பத்தின் பொருளாதார நிலைமையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகிறது.

இதைக் கருத்தில்கொண்டு, பாம்புக் கடிக்குத் தற்போது அளிக்கப்படும் சிகிச்சை 100 ஆண்டுகள் பழைமையானது என்றும், நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயனாளிக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தரமான விஷமுறிவு மருந்துகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்த விஷமுறிவு மருந்தைப் பயனாளிக்குக் கொடுப்பதற்கு முன்னால், அவரின் உடலில் பாம்பின் விஷம் ஏற்படுத்தும் பாதிப்புகள் தீர வழியில்லை. அதனால், பயனாளிகள் உயிர் பிழைத்தாலும் பலருக்கும் உடல்நலக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. இதற்கும் தீர்வு காண வேண்டும் என்கிறது அந்நிறுவனம்.

மரணங்களுக்கு என்ன காரணம்?

பொதுவாக, கிராமப்புறங்களில் வயல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வீடுகள் இருக்கும். அந்தப் பகுதிகளில் மக்களோடு மக்களாகப் பல ஊர்வனங்களும் வாழும். அவற்றுள் பாம்புகளும் அடங்கும். அதிலும் மழைக்காலத்தில் அவை வீடுகளுக்குள் புகுந்துவிட வாய்ப்புகள் அதிகம். அதேநேரம், எந்தப் பாம்பும் தானாக வந்து நம்மைக் கடிப்பதில்லை. அதன் பாதையில் நாம் குறுக்கிட்டாலோ, அதன் மீது நம் காலோ கையோ பட்டாலோதான் நம்மைக் கடிக்கும். ஆகவே, பெரும்பாலும் நம் பாதுகாப்புக்கு நாம் காட்டும் அலட்சியம்தான் பாம்புக் கடி இறப்புகளுக்குக் காரணம்.

அடுத்து, பாம்புக் கடிக்குச் சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக என்னென்ன முதலுதவிகளைச் செய்ய வேண்டும் என்னும் விழிப்புணர்வு கிராம மக்களிடம் அதிகமில்லை. மாறாக, கடிபட்டவரிடமிருந்து பாம்பின் விஷத்தை வாயால் உறிஞ்சி எடுக்க முயல்வது, மந்திரிப்பது, பச்சிலைகளைப் பூசுவது போன்ற மூடநம்பிக்கைகளே பெருகிக் கிடக்கின்றன. இதனால், தகுந்த நேரத்தில், தகுந்த சிகிச்சை கிடைக்காமல் பல உயிர்களை நாம் இழந்துவிடுகிறோம்.

மேலும், பாம்புக் கடியால் உடலுக்குள் புகுந்த விஷத்தை எவ்வளவுக்கு எவ்வளவு விரைவில் முறிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு உயிர் காக்க முடியும். தாமதம் உயிராபத்தை ஏற்படுத்தும். இங்குள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், கடித்த பாம்பு விஷமுள்ளதா, விஷமற்றதா என்பதை அறியும் ரத்த உறைதல் பரிசோதனை வசதியும், பாம்பின் விஷத்தை முறியடிக்க உதவும் விஷமுறிவு மருந்தும் தாலுக்கா மருத்துவமனைகளில்தான் கிடைக்கின்றன. இந்த மருந்து மிகவும் பாதுகாப்பாகச் செலுத்தப்பட வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு. பல சமயங்களில் பாம்புக் கடிக்கு உள்ளானவர்கள் கிராமங்களிலிருந்து தாலுக்கா மருத்துவமனைக்கு வந்துசேர்வதற்குத் தாமதம் ஆகிவிடும்போது சிகிச்சை பலன் தராமல் இறக்கின்றனர்.

இதையும் சொல்ல வேண்டும். மனிதர்களைக் கடிக்கும் எல்லாப் பாம்புகளும் விஷத்தன்மையோடு இருப்பதில்லை. ஆனால், பாம்பு கடித்து மருத்துவமனைக்கு வரும் பலரின் இறப்புக்கு அவர்களின் பயமும் ஒரு காரணம். பயப்படும்போது ஏற்படும் அதிர்ச்சியும், மிகை ரத்த ஓட்டமும் பாம்பின் விஷத்தை உடனே உடலில் கலந்துவிடச் செய்கிறது.

புதிய ஆராய்ச்சிகள் தேவை

தற்போதுள்ள முறைப்படி, பாம்புகளிலிருந்து எடுக்கப்படும் விஷம், குதிரைகளுக்குச் செலுத்தப்பட்டு, பின்னர் குதிரைகளின் ரத்தத்தில் உருவாகும் நோயெதிர்ப்பொருளை (Antibody) விஷமுறிவு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கான நோய் எதிர்ப்பொருளை எடுக்கும்போது,, சில தேவையற்ற பொருட்களும் அதனுடன் சேர்ந்துவிடும். இதன் காரணமாக, விஷமுறிவு மருந்தின் தரம் குறைந்துவிடும். அந்த மருந்துகளைச் செலுத்தும்போது பயனாளிக்குச் சிகிச்சை நீடிப்பதுண்டு; சமயங்களில் மருந்து பலன் தராமல் பக்கவிளைவு ஏற்பட்டு உயிரிழப்பு உண்டாகவும் வாய்ப்புண்டு. அதனால், விஷமுறிவு மருந்து தயாரிப்பு முறையில் மாற்றம் தேவைப்படுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இதன்படி, இங்கிலாந்தில் இப்போது புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு கள ஆய்வில் உள்ளதாக ‘மருந்து ஆராய்ச்சி ரீடிங் பல்கலைக்கழக’த்தின் இந்திய விஞ்ஞானி சக்தி வையாபுரி ஒரு கருத்தரங்கத்தில் தெரிவித்திருக்கிறார். பொதுவாக, பாம்பின் விஷம் நம் உடலில் ரத்தம் உறைவதைத் தடுத்தோ, முக்கிய நரம்புகளை முடக்கியோ, இதயம், சிறுநீரகம் போன்ற உயிர் காக்கும் உறுப்புத் திசுக்களை அழித்தோ இறப்பைக் கொண்டுவருகிறது. இந்தச் செயல்பாடுகளுக்கு உதவும் ‘என்சைம்’களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், பாம்பின் விஷம் நம்மைத் தாக்குவதைத் தடுக்கலாம் என்னும் அறிவியலின் அடிப்படையில், இந்தப் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டிலில் கட்டிய கொசுவலை நம்மைக் கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பதுபோல், புரத மூலக்கூறுகளால் ஆன இந்த மருந்து நம் உடல் உறுப்புகளுக்குள் பாம்பின் விஷம் நுழைவதைத் தடுத்துவிடுகிறது. இதன் பலனால் உறுப்புகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

இந்த மருந்து வாய் வழியாக விழுங்கப்படும் மாத்திரையாகவும், மூக்கில் வைத்து உறிஞ்சப்படும் மருந்தாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பக்கவிளைவுகள் இல்லை. இதை எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லலாம். வீட்டிலும் மருத்துவமனையிலும் வைத்துக்கொள்ளலாம். பாம்பு கடித்த உடனேயே இதைப் பயன்படுத்திக்கொண்டால் அதன் விஷம் நம்மைத் தாக்குவது குறைந்துவிடும்; உயிருக்கு வரும் ஆபத்து தவிர்க்கப்படும். அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று மற்ற சிகிச்சைகளை மேற்கொண்டு நம்மைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

இந்தியாவில் என்ன பிரச்சினை?

இந்தியாவில் உள்ள பிரச்சினை என்னவென்றால், இங்கு நான்கு விதமான பாம்புகளிலிருந்துதான் பாம்புக் கடிக்கு விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த நான்கு இனங்களைக் கடந்து அதிக விஷமுள்ள பாம்புகளும் இந்தியாவில் இருக்கின்றன. அந்தப் பாம்புகள் கடித்தால் தற்போது நம்மிடம் உள்ள விஷமுறிவு மருந்து பலனளிப்பது சந்தேகமே. அடுத்து, தமிழகத்தில் வனத் துறையின் அனுமதியுடன் 1982 முதல் இருளர் மக்களின் கூட்டுறவுப் பண்ணை மூலம் விஷம் சேகரிக்கப்பட்டு, மருந்து தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் இதுபோன்ற முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது. அப்படிச் சேகரித்தால்தான், புவியியல்ரீதியாக வித்தியாசமான இனங்களைச் சேர்ந்த பாம்புகளின் விஷத்திலிருந்து மருந்து தயாரிக்க முடியும்.

எனவே, இந்தியாவில் உள்ள பாம்பினங்களின் விஷம் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஏற்பப் புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது. இதைக் கருத்தில்கொண்டு, நம் அறிவியலாளர்களும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். பாம்புக் கடி இறப்புகளால் இந்திய கிராமங்களில் மனித உயிர்கள் பலியாகிவருவதைத் தடுக்க வேண்டியதும் ஒரு சமூகத்தின் கடமைதானே?

- கு.கணேசன், பொது நல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x