Published : 18 Feb 2020 07:34 AM
Last Updated : 18 Feb 2020 07:34 AM

தொலைக்காட்சியின் காலத்தில் குழந்தைகள்

தொலைக்காட்சியின் காலத்தில் குழந்தைகள்

உங்கள் குழந்தைகள் தொலைக்காட்சியின் முன்னால் உறைந்துபோயிருக்கிறார்களா? அப்படியென்றால் இது உங்களுக்காகத்தான். தொலைக்காட்சியை அதிகமாகப் பார்க்கும் குழந்தைகள், குறைவாகப் பார்க்கும் குழந்தைகள் என்று 500 பேரை வைத்து சிங்கப்பூரில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் புகழ்பெற்ற ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன்படி 2 அல்லது 3 வயதுக் குழந்தைகள் தொலைக்காட்சிக்கு முன்னால் 3 மணி நேரம் செலவிட்டால், அவர்கள் ஐந்தரை வயதில் சோம்பேறிகளாக ஆகிவிடுவார்கள். அது மட்டுமல்லாமல் உடல் பருமன், அறிதிறன் குறைபாடு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. மனநிலை சார்ந்த பிரச்சினைகளும், மூளையின் இயக்கம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இந்தக் குழந்தைகளால் மற்றவர்களுடன் சகஜமாக நட்புகொள்ள முடியாது. சமூகத்திலிருந்து அந்நியமாகிவிடுவார்கள் என்றெல்லாம் அந்த ஆய்வு எச்சரிக்கிறது. அலுவலகம் சென்றுவரும் பெற்றோர்கள் மாலையில் வீட்டு வேலைகள் பார்க்கும்போது, குழந்தைகள் இடையூறாக இருப்பார்கள் என்று தொலைக்காட்சியை இயங்க வைத்துக் குழந்தைகளை அதன் முன் உட்கார வைத்துவிடுவதே இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணம். இதற்கான தீர்வு பெற்றோர்களிடம்தான் இருக்கிறது. குழந்தைகளின் படைப்பூக்கத்தை வளர்க்கும் விதத்தில் அவர்களுடன் நேரம் செலவிட்டாலொழிய இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

10,000 அடி நடப்பதால் என்ன நடக்கும்?

உடல் பருமனைக் குறைக்க தினமும் 10,000 அடிகள் நடந்துவிட்டு காலரைத் தூக்கிவிட்டுக்கொள்கிறீர்களா? இதனாலெல்லாம் பருமன் குறையாதுங்கோ! சொல்வது நாமல்ல; மருத்துவ ஆய்வேடு ‘ஜர்னல் ஆஃப் ஒபிசிடி’. சத்துள்ள உணவைத் தினமும் உண்பதன் மூலமும், உடற்பயிற்சிகளை அன்றாடம் மேற்கொள்வதன் மூலமும்தான் எடையைக் குறைக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்காவின் ‘பிரிகாம் யங்’ பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களில் 120 பேர் தினமும் 10,000, 12,000, 15,000 அடிகள் என்று வெவ்வேறு தொலைவுகளுக்கு நடக்க வைக்கப்பட்டனர். அவர்கள் உட்கொண்ட உணவு அளக்கப்பட்டது. வாரத்தில் 6 நாட்கள் என 24 வாரங்கள் நடந்தனர். மாணவர்களின் உடல் எடை குறைந்ததா, உடலில் கொழுப்பு கரைந்ததா என்று பார்த்தார்கள். சராசரியாக ஒன்றரை கிலோ வரை பலருக்கு எடை கூடத்தான் செய்தது. இத்துடன் படிப்பதை நிறுத்திவிடாதீர்கள்; எடை குறையவில்லையே தவிர அவர்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டது. பசி, தூக்கம், செரிமானம் சீரானது. சோம்பேறித்தனம் கணிசமாகக் குறைந்தது. ஸ்மார்ட் போன்களைப் பார்ப்பதில் கழிக்கும் நேரம் அன்றாடம் 77 நிமிஷம் குறைந்தது. இனி ‘நடப்பது’ நடக்கட்டும்!

போட்டி முதல்வரா அஜித் பவார்?

மகாராஷ்டிரத்தின் துணை முதல்வரும் நிதியமைச்சருமான அஜித் பவார், பல அதிரடி வேட்டுகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார். பீமா கோரேகான் போராட்ட நினைவு தினத்தை முன்னிட்டு, அங்கே ஜனவரி முதல் வாரத்தில் சென்றிருக்கிறார். அங்கே கட்டப்பட்டுவரும் டாக்டர் அம்பேத்கர் நினைவிடத்தைப் பார்வையிட்டிருக்கிறார். இதன் மூலம் தலித்துகளின் நம்பிக்கையைப் பெறலாம் என்பது அவருடைய எண்ணம். அது மட்டுமல்லாமல், 10-ம் வகுப்பு வரை மராத்தியைக் கட்டாயமாக்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான காங்கிரஸின் வர்ஷா கெய்க்வாட்டை அவர் கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு இது. ஒரு நெடுஞ்சாலைக்கு காங்கிரஸின் முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். கூடவே, நிதிநெருக்கடியில் சிக்கியிருக்கும் பாய் ஜெர்பாய் வாடியா குழந்தைகள் மருத்துவமனைக்கு ரூ.46 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். சில மணி நேரம் கழித்து, முதல்வர் உத்தவ் தாக்கரே அந்தத் தொகையை ரூ.24 கோடியாகக் குறைத்தார். முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு இணையாகத் தன்னை அஜித் பவார் நிலைநிறுத்தும் செயல்களால் கூட்டணிக்குள் உரசல் வந்துவிடுமோ என்ற அச்சம் மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலை சரத் பவாரால்தான் சரிசெய்ய முடியும் என்றும் அங்கே நம்புகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x