Published : 14 Feb 2020 09:32 AM
Last Updated : 14 Feb 2020 09:32 AM

பெண்களின் போட்டிகளுக்குள் குளிர்காயும் ஆண்கள்

நவீனா

சமூகத்தின் பல்வேறு அடுக்குகளிலும் பெண்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் அவர்களைத் தாங்களாகவே தங்கள் வாழ்விடங்களையும், சமூகத் தளங்களில் அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் பரப்பையும் குறுக்கிக்கொள்ளச் செய்கிறது. தனித்துவமான சில பெண்களை மட்டும் தேர்வுசெய்து, அவர்களுக்குப் பதவிகளையும் பொறுப்புகளையும் மாதிரி அதிகாரங்களையும் பகிர்ந்தளிப்பதாகக் கூறி, மறைமுகமாக ஏனைய பெண்களின் திறமைகளை ஒதுக்கிப் புறந்தள்ளுவதும், பெண்களுக்கு வாய்த்த திறமைகளை அங்கீகரிக்காமல் அலட்சியப் போக்கோடு அவற்றை அணுகுவதும், ஆண் சார்ந்து பெண்களின் வாழ்க்கைமுறைகளை வடிவமைத்துக்கொள்ள அவர்களை வற்புறுத்துவதும், பெண்களை ஒடுக்க மேற்கொள்ளப்படும் பல உத்திகளில் முதன்மையானவையாக இருக்கிறது. இது கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

30 ஆண்டுகளாகக் கூட்டுக்குடும்ப அமைப்பில் வாழும் ஒரு மாமியாரையும் மருமகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களைச் சந்திக்கவரும் விருந்தினர்கள் அனைவரிடமும், அந்த மாமியார் உரையாடலை இப்படியாகத் தொடங்குவார். ‘மலர நா அடுப்படி பக்கங்கூட விட மாட்டேன். எல்லா சமையலும் எங்க வீட்ல நான்தா. சின்னச் சின்ன நகாசு வேலதான் மலரு செய்யும். முப்பது வருஷமா நா எம் மருமகள அப்டிப் பாத்துக்கிறேன்’ என்று பெருமையாகப் பிதற்றிக்கொள்வார்.

உண்மையில், அடுக்களையில் அந்த மூதாட்டி சமைக்கும்போது, வராந்தாவில் கால் மேல் கால் போட்டு தொலைக்காட்சி பார்ப்பவரல்ல அந்த மருமகள். ‘மலரு, கத்தியில தேங்காய எனக்கு சில்லுபோடத் தெரியாது, கொஞ்சம் எடுத்துக்குடு, மிக்ஸியெல்லாம் இந்தக் காலத்துச் சாமான், நா எங்க அதப் போடப் படிச்சேன்? இந்தச் செலவுச் சாமான ஒரு சுத்துவிட்டு எடுத்துக்குடு, மலரு, இந்தக் கடுகு டப்பால கடுகு ஆயிப்போச்சே, நீ பாக்கல?’ என்றெல்லாம் நின்றபடி அவரிடும் கட்டளைகளுக்குப் பம்பரமாய்ச் சுழன்றுகொண்டிருப்பார் மலர். மூதாட்டியின் கைகளில் நடுக்கம் கூடிவிட்டபடியால் அடுப்பைப் பற்ற வைப்பதுகூட மலரின் வேலைதான். அவர் செய்யும் இவ்வளவு வேலைகளையும் அந்த மூதாட்டி ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொண்டது கிடையாது. அந்தப் பெண்ணின் உழைப்பையும் மெனக்கெடலையும் அந்த மூதாட்டி அங்கீகரித்தது கிடையாது. இதை அவர் அறிந்திராமல் இல்லை; அறிந்தும் அறியாதவராகக் காட்டிக்கொள்கிறார்.

அவரின் இந்தப் பசப்புக்கு அடிப்படைக் காரணம், அதிகாரப் போட்டியாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் ஆணின் செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்வதற்காக நிகழ்த்தப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை சமையலறைதான் வீட்டின் அதிகார மையம். சமையலறை மருமகளின் கட்டுப்பாட்டில் போய்விடும் பட்சத்தில் தன்னுடைய மகன் தான் எதற்கும் லாயக்கற்றவள் என்றும், தன்னால் எந்தப் பயனும் அவனுக்கு இல்லை என்றும் நினைத்து, தன்னை விரட்டிவிடுவானோ என்கிற பயம் தாய்மார்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது. இன்னொரு பெண்ணிடம் குடும்பத்தின் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள பெண்கள் விரும்பாதபோது, அவர்களுக்குள் ஆதிக்கப் போட்டி மூண்டு, ஆண் சார்ந்து கட்டமைக்கப்படும் அவர்களுடைய வாழ்க்கை அழுத்தத்துக்குள்ளாகிறது. இதில் வெல்பவர் அதிகாரத்தின் பரிவாரங்களோடு குடும்பத்துக்குள் வலம்வருகிறார். மற்றவர் தன்னம்பிக்கை இழந்து, எதையும் தன்னிச்சையாகச் செய்ய முடியாத இயக்கமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

ஹிட்லரின் கூற்றுப்படி, ஒரு பொய்யை நான்கு முறை திரும்பத் திரும்பக் கூறுவதால் உண்மையாகிவிடும் என்பதுபோல, வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம் தனது மருமகளுக்குச் சமையல் தெரியாது எனும் பொய்யை அழுத்தமாகப் பதிவுசெய்து, அந்தப் பெண்ணின் தன்னம்பிக்கையை அழித்து, தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்கிறார். இந்தப் போட்டியில் ஆண் வர்க்கம் குளிர்காய்ந்தாலும் இதில் எழுச்சி, வீழ்ச்சி அடைவதெல்லாம் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

- நவீனா, ‘லிலித்தும் ஆதாமும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writernaveena@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x