Last Updated : 14 Feb, 2020 09:31 AM

 

Published : 14 Feb 2020 09:31 AM
Last Updated : 14 Feb 2020 09:31 AM

மோடி, சோனியா பொம்மைகளுக்கு டெல்லி தேர்தலில் என்ன வேலை?

மூன்று பொம்மைகள். இந்தப் பக்கம் மோடி பொம்மை. அந்தப் பக்கம் சோனியா பொம்மை. இரண்டும் உதட்டைப் பிதுக்கி, தலையை உதறுகின்றன. நடுவேயுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் பொம்மை வெற்றிக் களிப்புடன் ஆட்டம் போடுகிறது.

தொலைக்காட்சிகளில் தேர்தல் முடிவு அறிவிப்புகளோடு இப்படியான குட்டி கேளிக்கைகளும் சேர்ந்துகொள்வது குதூகலமாகத்தான் இருக்கிறது. அதுசரி, நாடு தழுவிய மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும்போது, நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைக் கையில் வைத்திருக்கும் தலைவர் பொம்மைகள் யுத்தத்தில் மோதினால் அதில் ஒரு நியாயம் உண்டு; டெல்லி போன்ற நாட்டின் ஒன்றரை சதவீத மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சின்ன மாநிலத்தின் தேர்தலுக்கும் ஏன் இந்தியாவின் தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த தேசியத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்?

சுயாட்சி மீதான தேட்டம்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஈடான ஒரு முகம் இன்று பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளிலுமே வற்றிப்போனது தற்செயல் அல்ல; பிராந்தியங்களில் சுயாதீனமான தலைவர்களை இன்று இரு தேசியக் கட்சிகளுமே விரும்பவில்லை. தேர்தல்களில் எதிர் வரிசையிலும் அப்படியான தலைவர்கள் இல்லாத நிலையில், தேசியக் கட்சிகளின் கணக்குகள் செல்லுபடியாகின்றன; எதிரே வலுவான பிராந்தியத் தலைவர்களின் கட்சிகள் நிற்கும்போது தேசியக் கட்சிகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. எப்படியும் முழு அதிகாரமும் தம் கைகளிலேயே இருக்க வேண்டும் என்ற தேசியத் தலைவர்களின் அதிகார வேட்கையைப் பிராந்தியங்கள் தொடர்ந்து நிராகரிக்கின்றன.

தொடர்ந்து மூன்றாம் முறையாக டெல்லி மக்கள் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குப் பெரும் வெற்றியைப் பரிசளித்திருப்பதானது, ஒரு புதிய செய்தியை இந்திய அரசியல் பரப்பின் கவனத்துக்குக் கொண்டுவருகிறது: தாம் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை இந்திய நகரங்கள் இன்று இந்நாட்டின் தேசியக் கட்சிகளுக்குச் சொல்கின்றன; தம்மைத் தாமே ஆண்டுகொள்வதற்கு அவை தயாராகிவிட்டதைச் சுட்டுகின்றன; கூடவே, இதுநாள் வரை நம் அரசமைப்பானது மாநிலங்களுக்கும், உள்ளாட்சிகளுக்கும் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் போதாமையையும், கூடுதல் அதிகாரத்தின் மீதான தேட்டத்தையும் அவை பிரகடனப்படுத்துகின்றன.

நாடா, நகரமா?

நியூஸிலாந்து, கிரேக்கம், ஸ்வீடன், ஜிம்பாப்வே, நெதர்லாந்து நாடுகளைக் காட்டிலும் கூடுதலான மக்கள்தொகையைக் கொண்டது டெல்லி. 2020 உத்தேச மதிப்பீட்டின்படி டெல்லியின் மக்கள்தொகை இரண்டு கோடி. நிலப்பரப்பில் மிகக் குறைவு என்றாலும், உலகின் நூற்றிச்சொச்ச நாடுகள், பிரதேசங்களைவிட இது அதிகம். டெல்லி மட்டும் அல்ல; மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என்று பல நகரங்கள் அவற்றை ஒட்டிய பகுதிகளோடு சேர்க்கையில், ஒரு கோடி மக்கள்தொகையைத் தாண்டி விரிகின்றன. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மக்களைச் சுமக்கும் நகரங்கள், நாட்டின் மொத்த உற்பத்தியில் ஐந்தில் மூன்று பங்கைத் தருகின்றன. ஆண்டுக்கு ரூ.25,000 கோடி பட்ஜெட்டை நெருங்கியிருக்கும் பிரஹன்மும்பை மாநகராட்சி ஆசியாவிலேயே பணக்கார உள்ளாட்சி.

பிரச்சினை என்னவென்றால், ஒரு நாடு அளவுக்கு விரிந்திருக்கும் பெருநகரங்களை, ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை ‘ஒரு நகரம்’ என்ற வரையறைக்குள் வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது. மாநகராட்சி எனும் நிர்வாகச் சட்டைக்குள் டெல்லி போன்ற ஒரு பெருத்த உருவம் அடங்காமல் திமிறும்போது, கூடுதலாக சட்டமன்றம் என்ற கோட்டை அதற்குத் தருகிறது. ஆயினும், அதற்குரிய மாண்பையோ அதிகாரத்தையோ பகிரும் மனம் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கோ, கட்சிகளுக்கோ இல்லை.

இன்று இரண்டு கோடி டெல்லி மக்களின் பிரதிநிதியை ‘முதல்வர்’ என்று குறிப்பிடுகிறோம். ஆனால், உலகின் பல முன்னணி பெருநகரங்களின் மேயர்களுக்கு உள்ள அதிகாரம்கூட ‘டெல்லியின் முதல்வர்’ பதவிக்கு இந்திய அரசமைப்பு தரவில்லை. உலகின் பழைய, பெரிய நகரங்களில் ஒன்றான லண்டனின் அடுத்த கால் நூற்றாண்டைத் திட்டமிடும் பொருளாதார அதிகாரத்தில் தொடங்கி லண்டன் காவல் துறை வரை லண்டன் மேயரின் ஆளுகைக்குக் கீழ் வருகின்றன. உலகின் பெரும் ராணுவங்களில் ஒன்றைத் தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் இந்திய அரசு, டெல்லியின் காவல் துறை அதிகாரத்தைக்கூட முதல்வரோடு பகிர்ந்துகொள்ள முடியாதது அதிகாரக்குவிப்பின் மீதான வேட்கையன்றி வேறு என்ன?

நாடு முழுவதும் தம் கட்சி ஆட்சியில் இருக்கும் 13 மாநிலங்களின் முதல்வர்கள், 375 மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான கட்சி நிர்வாகிகள், கலைஞர்கள், பிரபலங்களை டெல்லி தேர்தலில் பாஜக ஈடுபடுத்தியதும், பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியல் புதிய எல்லையைத் தொட்டதும் தேசியக் கட்சிகளின் பெருத்த அதிகாரப் பசிக்குத் துலக்கமான சாட்சியம்.

அதிகாரத்தின் பண்பு மாற்றம்

அர்விந்த் கேஜ்ரிவாலின் வெற்றிக்குக் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மீது அவருடைய அரசு காட்டியிருக்கும் அக்கறை பேசப்படுகிறது. நாட்டின் பொதுப் பள்ளிகளுக்கும், நவீன சுகாதார நிலையங்களுக்கும் இன்று டெல்லி முன்னுதாரணமாகக் காட்டப்படுகிறது. நாட்டிலேயே அதிகமாக கல்விக்கு 26%, சுகாதாரத்துக்கு 12.7% நிதி ஒதுக்கப்பட்டதானது ஒரு அர்விந்த் கேஜ்ரிவாலின் அக்கறைகளை மட்டும் அல்ல; அதிகாரத்தின் பண்பு மாற்றத்தையும் சேர்த்தே வெளிப்படுத்துகிறது.

ஒட்டுமொத்த நாட்டுக்கும், நூற்றுச்சொச்சம் கோடி மக்களுக்கும் பிரதிநிதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒரு தேசியத் தலைவர் தேசியத்தையும் அண்டை நாடுகளையும் பற்றிப் பேசி காலத்தை ஓட்டலாம். ஒரு நகரை நேரடியாக நிர்வகிக்கும் தலைவருக்கு அந்த சாத்தியம் இல்லை. நகரின் குப்பைகளுக்கும் சாக்கடைகளுக்கும் அன்றாடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவரின் வீடு எப்போது வேண்டுமானாலும் மக்களால் சூழப்படும் நிலையிலேயே இருக்கிறது. மக்களின் வரிப் பணம் குழந்தைகளுடைய கல்விக்கு அதிகம் செலவிடப்பட வேண்டுமா, ராணுவ ஆயுதங்களுக்கு அதிகம் செலவிடப்பட வேண்டுமா என்ற கேள்விக்கான பதில் இங்கிருந்துதான் உருவாகிறது; மக்களுக்கான அன்றாட அரசியல் உரிய முன்னுரிமையைப் பெறுகிறது.

டெல்லியை இன்று ஐந்து உள்ளாட்சிகளாகப் பிரித்து நிர்வகிக்கிறோம். அதை முழுமையான ஒரு பெருநகராட்சியாக உருவாக்கி, பள்ளிக்கல்வி, காவல் துறை முதல் டெல்லி மெட்ரோ, பொருளாதாரத் திட்டமிடல் வரையிலான அன்றாட நிர்வாகத்துக்கான அத்தனை அதிகாரங்களையும் மேயர் கைகளில் ஒப்படைக்க வேண்டும். இப்படி உள்ளாட்சிகளால் இயலாத காரியங்கள் மாநிலங்கள் கைகளிலும், மாநிலங்கள் இயலாத காரியங்கள் மைய அரசின் கைகளிலும் இருக்க வேண்டும்.

உள்ளூரா, தேசிய அரசா?

சமூகங்கள் இன்று தன்னை ஒட்டுமொத்த நாடாகவும் மாநிலமாகவும் சிந்திப்பது எவ்வளவு முக்கியமோ, அப்படி உள்ளூரை சுயாதீனமான ஒரு அலகாகவும், தங்களை உள்ளூராகவும் சிந்திப்பதும் முக்கியம் என்று தோன்றுகிறது. நாடுகளின் மைய அரசுகள் எல்லா விஷயங்களிலும் இன்று முதன்மையானது, தாம் ஒரு தேசிய அரசு என்ற எண்ணத்துடன் சிந்திக்கும் காலகட்டத்தில், மக்களின் அன்றாட நலன், அவரவர் வாழும் நிலத்தின் நலன்களையும் முக்கியமானதாகச் சிந்திக்கும் இந்த உள்ளூர்ச் சிந்தனைமுறையானது கூடுதல் முக்கியத்துவம் கோருகிறது. கடந்த காலத்தைக் குழைத்து உருவாக்கப்படும் தேசியத்தைப் பேசும் மைய அரசுகள், நாடுகளுக்கு இடையேயான நிலத்தின் எல்லைகள் மீது இரும்புத் திரைகளைக் கட்டிவிடுகின்றன; சமகால அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடும் உள்ளூர் அரசுகள் இந்த எல்லைகளை அநாயாசமாகக் கடக்கின்றன.

உலகிலேயே பிரத்யேகமாக இந்தியாவைக் கிராமங்களின் குடியரசாகச் சிந்தித்தார் காந்தி. அப்படி நடக்கவில்லை என்பதோடு, கிராமங்களுக்கான அதிகாரத்தைத் திட்டமிடுகிறோம் என்ற பெயரில் ஏனைய நாடுகள் நகரங்களுக்குப் பகிர்ந்திருக்கும் குறைந்தபட்ச அதிகாரங்களையும்கூட பதுக்கிவைத்திருக்கிறது இந்தியாவின் மைய அரசு. இந்தியக் கூட்டாட்சியின் அதிகாரப் பரவலாக்கல் இனி நகரங்கள் வழியிலேனும் தொடங்கட்டும்!

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x