Published : 26 Aug 2015 08:27 AM
Last Updated : 26 Aug 2015 08:27 AM

இந்தியாவுக்கான இடம் அதற்கான உரிமையும்கூட!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆணையத்தில் பெரிய அளவில் எந்தவிதச் சீர்திருத்தத்தையும் மேற்கொள்ளக் கூடாது என்று அமெரிக்க அரசு தெரிவிக்கும் எதிர்ப்பானது, அது ஆடும் இரட்டை ஆட்டத்தைக் காட்டுகிறது. அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது “ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆணையத்தில் நிரந்தர உறுப்பினர் பதவியை வழங்க ஆதரவு தெரிவிப்போம்” என்று அளித்த வாக்குறுதிக்கு முரணானது இது. இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியில் அமெரிக்கா உறுதியாகவே இருக்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் வர்மா பிறகு சமாதானம் தெரிவித்தாலும், அமெரிக்காவின் போக்கு அதைச் சந்தேகத்துடனேயே பார்க்கவைக்கிறது.

சீர்திருத்தத்தில் உண்மையிலேயே அமெரிக்காவுக்கு விருப்பம் இருந்தால் ரஷ்யா, சீனாவுடன் சேர்ந்துகொண்டு சீர்திருத்த முயற்சிகளை எதிர்ப்பது ஏன்? அப்படியே பாதுகாப்பு ஆணையத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதாக இருந்தாலும், ஏற்கெனவே இருக்கும் உறுப்பினர்களுக்குள்ள ரத்து அதிகாரம் (வீட்டோ) அப்படியே நீடிக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த அமைப்பும் நடைமுறைகளும் அப்படியே தொடர வேண்டும் என்று வலியுறுத்துவது ஏன்? ஏற்கெனவே இருந்த அமைப்பும் நடைமுறைகளும் தொடருவது எப்படிச் சீர்திருத்தமாகும்?

ஐ.நா.சபையின் பாதுகாப்பு ஆணையத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை, அதற்குள்ள தகுதியின் அடிப்படையிலானது. உலகிலேயே பொருளாதார பலத்தில் மூன்றாவதாக இருக்கும் நாடு, ஆசியா கண்டத்தில் உள்ள மிகப் பெரிய நாடுகளில் ஒன்று, உலக அளவில் மக்கள்தொகையில் சீனத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாடு, சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அமைதிகாப்புப் படைகளுக்கு அதிக துருப்புகளை அனுப்பிவைக்கும் நாடு என்ற சிறப்பெல்லாம் இந்தியாவுக்கு உண்டு. எல்லாவற்றையும்விட முக்கியம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டதைத் தவிர, போருக்கானது அல்ல. பாதுகாப்பு ஆணையத்தில் நிரந்தர உறுப்பினரானால், உலகை அச்சுறுத்தும் அனைத்துப் பிரச்சினைகளிலும் சரியான முடிவை எடுக்க இந்தியாவால் உதவ முடியும்.

ஆனால், இப்போதைய நிரந்தர உறுப்பு நாடுகள் பாதுகாப்பு அவையை ஏதோ தங்கள் உடைமைபோலப் பார்க்கின்றன. தங்கள் நலன் சார்ந்தே உலகின் எல்லா விவகாரங்களையும் அணுகுகின்றன. இந்தப் பாரபட்ச அணுகுமுறை அவர்களின் முடிவில் தோல்வியாக எதிரொலிக்கிறது. ஐ.நா. சபையின் மாண்பும் நம்பகத்தன்மையும் கேள்விக்குரியதாக மாறுகிறது. சமீபத்திய சில உலக நிகழ்வுகளைப் பாதுகாப்பு ஆணையம் கையாண்ட விதம் அல்லது கையாளத் தவறிய விதம் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தியாவின் கோரிக்கை எந்த அளவுக்கு நியாயமானது என்பது புரியும். லிபியா, சிரியா நாடுகளில் நடைபெற்றுவரும் சம்பவங்களே இதற்குச் சிறந்த உதாரணங்கள்.

பனிப் போருக்குப் பிந்தைய கால் நூற்றாண்டில் உலகின் எல்லாப் போக்குகளும் மாறியிருக்கின்றன. மாறிவரும் உலகச் சூழலுக்கு ஏற்பப் பாதுகாப்பு ஆணையத்தில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றால், அது திருத்தியமைக்கப்படுவது அவசியம். உலகின் தேவைகள் மாறிவருகின்றன என்பதைப் பாதுகாப்பு ஆணையத்தின் நிரந்தர உறுப்பினர்கள் உணர்ந்து, அவற்றைப் பரிசீலிப்பதில் நீக்குபோக்கான தன்மையைக் கடைப்பிடிப்பது அவசியம். இந்தச் சீர்திருத்தத்தை முன்னெடுக்க வேண்டிய கடமை உலகின் இன்னொரு பெரும் ஜனநாயக நாடான அமெரிக்காவுக்கு உண்டு என்பதை அது உணர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x