Published : 11 Feb 2020 08:48 AM
Last Updated : 11 Feb 2020 08:48 AM

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பு

காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்து போராட்டக் களங்களாக மாறிய ஊர்கள் எல்லாம் கொண்டாட்டத்தில் ஆழ்ந்திருக்கின்றன. இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். காவிரிப் படுகையின் எட்டு மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் வகையில் சிறப்புச் சட்டம் இயற்றப்படும் என்ற தமிழக முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பே இந்த மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்துக்கும் காரணம். தமிழகத்தின் இந்த அறிவிப்பை புதுச்சேரி அரசும் வரவேற்றிருப்பது மாநில எல்லையைக் கடந்தும் பிரதிபலிக்கும் தமிழ் மக்கள் உணர்வின் வெளிப்பாடாகவே சொல்லிட வேண்டும். முதல்வரின் வேளாண் மண்டல அறிவிப்பை தமிழக அரசு விரைந்து சட்டமாக்க வேண்டும் என்பதே இப்போது எல்லோரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

தமிழகம் முழுக்க உள்ள விவசாயிகளுக்கு, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவந்த விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றியானது பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. தொடர்ந்து விவசாயம் நசிந்துவரும் சூழலில், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் போன்ற பகாசுரத் திட்டங்கள், தமிழக விவசாயிகளால் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை. ஏற்கெனவே கைவிடப்பட்ட சூழலை உணரும் அவர்கள் தங்கள் மீதான தாக்குதலாகவே இதனைக் கண்டார்கள். தமிழக அரசு இந்த விஷயத்தில் தீர்க்கமான முடிவு எதையும் எடுக்காத சூழலை அவர்கள் நிர்க்கதியாக உணர்ந்தார்கள். எனினும், மாநில அரசு இத்தகு திட்டங்களை அனுமதிக்காது என்ற நிலையிலேயே அமைதி காத்தார்கள். இந்நிலையில், ஆய்வுக் கிணறுகளைத் தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் மக்களின் கருத்தும் தேவையில்லை என்ற மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பு, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் அனுமதி பெறாமல் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தற்போது அவரது வேளாண் மண்டல அறிவிப்பு அமைந்துள்ளது.

இப்போது ‘வேளாண் பாதுகாப்பு மண்டலம்’ எத்தகு பாதுகாப்புகளைத் தரும் என்பதை நாம் வரையறுக்க வேண்டியுள்ளது. ஏனென்றால், அது வெறுமனே ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு விலக்கு அளிக்கும் திட்டமாக மட்டுமே சுருங்கிவிடும் ஒன்றாக அமைந்துவிடுவதில் பெரிய பயன் ஏதும் இல்லை. மாறாக, நாம் வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்ற வரையறைக்குள் கொண்டுவரும் பிராந்தியத்தில் விவசாய நிலங்களைப் பாதுகாப்பதோடு, தற்போது வேளாண் துறை எதிர்கொண்டுள்ள ஏனைய எல்லா நெருக்கடிகள், சவால்களிலிருந்தும் மீட்டெடுப்பதற்கான செயல்பாடுகளை உள்ளடக்க வேண்டும். வெறுமனே சட்ட நிபுணர்கள் மட்டும் அல்லாது, வேளாண் துறை நிபுணர்கள், வேளாண்மைப் பொருளியல் அறிஞர்கள், முக்கியமாக விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளின் யோசனைகளையும் அரசு கேட்டுப் பெற வேண்டும். நாட்டிலுள்ள விவசாயக் கேந்திரங்களை அவற்றின் பழைய செல்வாக்கான நிலைக்கு மீள உயர்த்திடும் வழிகாட்டித் திட்டமாக இது அமைய வேண்டும்.

எல்லோருக்குமே இந்த விஷயத்தில் ஒரு அச்சமும் இருக்கிறது. தேசிய பொது மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விலக்கு கோரி இயற்றப்பட்ட சட்டம்போல, தமிழக அரசின் பெயரளவுக்கான சட்டமாக இது போய்விடக் கூடாது என்பதுதான் அது. அப்படியொரு சூழல் உருவாகிடாத வண்ணம் பார்த்துக்கொள்வதோடு, தேசிய பொது மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்திலும் தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையிலான தொடர் நடவடிக்கைகளுக்கு அரசு உயிர் கொடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x