Published : 09 Feb 2020 12:45 PM
Last Updated : 09 Feb 2020 12:45 PM

வெண்ணிற நினைவுகள்: இளமையின் பாடல்

பதின் வயதின் ஆசைகளை, கனவுகளை, காதலைச் சொன்ன தமிழ்த் திரைப்படங்கள் குறைவே. பாலுமகேந்திரா இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்தில் பதின் பருவப் பையன்களின் மனவுலகம் அசலாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற உறைவிடப் பள்ளியில் தங்கிப் பயிலும் மாணவர்களின் பள்ளி, விடுதி வாழ்க்கை தனித்துவமானது. எழுதுவதற்கான ஆயிரம் கதைகள் கொண்ட கதைவெளி அது. என் நண்பர்களில் சிலர் ஊட்டி கான்வென்டில் படித்தவர்கள். அவர்கள் தங்கள் விடுதி வாழ்க்கையை, பள்ளியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, சிற்றூர் அரசுப் பள்ளியில் படித்த என் போன்றோருக்கு வியப்பாக இருக்கும். ஊட்டி கான்வென்டில் படித்த ஒரு நண்பர் சொன்னார், "எங்கள் பள்ளி வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ள ஒரே படம் ‘பன்னீர் புஷ்பங்கள்’. இன்று வரை அந்தப் படத்தை ஐம்பது தடவை பார்த்திருப்பேன். அந்தப் படத்தின் டிவிடி எப்போதும் டிவியின் அடியில் இருக்கும். திடீரென இரவு இரண்டு மணிக்கு எழுந்துகூட ‘பன்னீர் புஷ்பங்கள்’ பார்த்திருக்கிறேன்.”

ஆனந்த ராகம் பாடலைக் கேட்கும்போது என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிடும். அந்தப் படத்தில் வருவதுபோல நானும் காதல் வசப்பட்டிருக்கிறேன். உண்மையைச் சொன்னால், அந்தப் படத்தின் இறுதிக் காட்சியைப் பார்த்த பிறகுதான் காதலை விடவும் படிப்பு முக்கியமானது என்று உணர்ந்தேன்.

சில திரைப்படங்கள் நம் வாழ்வின் ஆவணம்போல் ஆகிவிடுகின்றன. அப்படத்தின் வழியே நாம் கடந்தகாலத்துக்குள் பிரவேசிக்கிறோம். விலகிப்போய்விட்ட நண்பர்களை நினைவுகொள்கிறோம். மகிழ்ச்சியான நாட்களை நினைத்து ஏக்கம்கொள்ளத் தொடங்குகிறோம். சினிமா என்பது நம் கடந்த காலத்துக்குள் செல்வதற்கான படகைப் போல் ஆகிவிடுகிறது.

1981-ல் ‘பன்னீர் புஷ்பங்கள்’ வெளியானபோது நான் பள்ளி மாணவனாக இருந்தேன். நண்பர்கள் ஒன்றுகூடி மாலைக் காட்சிக்குச் சென்றோம். குளிர்கால ஊட்டியும், கான்வென்ட் மாணவர்களின் கோட் அணிந்த அழகான தோற்றமும், விடுதியில் நடைபெறும் வேடிக்கைகளும், அலைபோன்ற கூந்தல் கொண்ட சாந்தி கிருஷ்ணாவின் அழகும், காதலிக்கும் மாணவனுக்கு நண்பர்கள் உதவுவதும் மறக்க முடியாத காட்சிகளாக மனதில் பதிந்துபோயின. படம் முழுவதும் சாந்தி கிருஷ்ணா சிரித்துக்கொண்டே இருக்கிறார். ஓவியத்தில் உறைந்துபோன புன்னகைபோல அவரது சிரிப்பு மனதில் பதிந்துவிட்டிருக்கிறது. கடைசிக் காட்சியில் காதலர்களை ரயிலேற்றிவிட்டு நண்பர்கள் கையாட்டியபடியே நிற்பதும், ரயிலில் காதலர்கள் தங்கள் ஆசிரியர் பிரதாப்பைச் சந்திப்பதும் சிறப்பான காட்சிகள்.

ராஜேஸ்வர் எழுதிய கதையை இயக்குநர்கள் வாசு, சந்தானபாரதி இருவரும் இணைந்து இயக்கியுள்ளார்கள். இளையராஜாவின் அற்புதமான பாடல்கள் இன்று கேட்கையிலும் பெருமகிழ்ச்சி தருகிறது. ‘கோடைகாலக் காற்றே’ என்ற மலேசியா வாசுதேவன் பாடும் பாடல் பள்ளிப் பருவத்தில் சுற்றுலா சென்ற நினைவுகளை அப்படியே ஈரம் காயாமல் காப்பாற்றி வைத்திருக்கிறது. எத்தனை வசீகரமான குரல். எவ்வளவு அழகான இசையமைப்பு. கங்கை அமரன் எழுதிய சிறந்த பாடல்.

கிதார் இசைத்தபடியே பிரதாப் பாடும்போது அவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் இருக்கிறது. அப்படியான ஆசிரியர்கள் எவரும் எங்கள் பள்ளியில் இல்லையே என ஏங்கியிருக்கிறோம். மாணவர்களை எப்படி நடந்த வேண்டும் என்று வேறு ஒரு காட்சியில் பிரதாப் சக ஆசிரியர் ஒருவரிடம் சொல்லுவார். அப்படி ஆசிரியர் யாராவது புதிதாகப் பள்ளிக்கு வந்துவிட மாட்டார்களா என அந்த வயதில் ஏங்கியிருக்கிறோம்.

‘பன்னீர் புஷ்பங்கள்’ பதின் வயதின் காதலைச் சொன்னதோடு அது வெறும் பருவக் கிளர்ச்சி என்பதையும் அடையாளப்படுத்துகிறது. ‘அழியாத கோலங்கள்’ படத்தில் பள்ளிக்குப் புதிய ஆசிரியராக வரும் ஷோபாவை மாணவர்கள் ஆராதனை செய்வார்கள். ரகசியமாகக் காதலிப்பார்கள். அதன் மறுவடிவம்போல ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் பள்ளிக்குப் புதிதாக வரும் பிரதாப், சாந்தி கிருஷ்ணா வீட்டின் ஒரு அறையில் தங்குவதும் அவளுடன் நெருங்கிப் பழகுவதும் கண்டு சுரேஷ் கோபம்கொள்வதும் இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தைத் திரும்பப் பார்க்கும்போது மனதில் ராபின் வில்லியம்ஸ் நடித்த ‘டெட் பொயட்ஸ் சொசைட்டி’ வந்துபோனது. அதுவும் உறைவிடப் பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் படமே.

பீட்டர் வீர் இயக்கிய இந்தத் திரைப்படம் கீட்டிங் என்ற ஆங்கில ஆசிரியரின் கதையைச் சொல்கிறது. மாணவர்களுக்குக் கவிதையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் கீட்டிங் அவர்களுக்குள் மறைந்திருக்கும் கவிதை எழுதும் ஆற்றலைத் தூண்டுகிறார். கவிதையே வாழ்க்கையை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கிறது. அறிவுத் துறைகள் மனிதனின் பொருளாதார வெற்றிக்குப் பயன்படுகின்றன. ஆனால் கவிதை, இலக்கியம், இசை, ஓவியம் போன்றவை மனிதனின் அகவளர்ச்சிக்கு உதவுவதோடு வாழ்க்கை துயரங்களிலிருந்து மீட்சியளிக்கின்றன என்பதைப் புரிய வைக்கிறார்.

கீட்டிங் கதாபாத்திரத்துக்கு நிகராகவே பிரதாப் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்காக அவர் குரல் கொடுக்கிறார். வகுப்பறை சுதந்திரத்தை முதன்மைப்படுத்துகிறார். மாணவர்களின் அன்புக்குரிய ஆசிரியராக உருக்கொள்கிறார். திறமையான ஆசிரியர்களை விடவும் தோழமையான ஆசிரியர்களையே மாணவர்கள் நேசிக்கிறார்கள். அந்த நேசம் பள்ளியோடு முடிந்துபோய்விடுவதில்லை. வாழ்நாள் முழுவதும் தனக்குப் பிடித்த ஆசிரியரைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காலப்போக்கில் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் முகம் மறந்துபோய்விடக்கூடும். ஆனால், தனக்குப் பிடித்த ஆசிரியரின் முகம் மாணவர்களுக்கு ஒருபோதும் மறந்துபோகாது.

எல்லாப் பள்ளிக்கூடத்தின் வகுப்பறைகளும் மைதானங்களும் நினைவுகளால் நிரம்பியவை. நீங்கள் படித்த பள்ளிக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்பு திரும்பப்போகையில் ஏற்படும் உணர்வுகளைப் போன்றதே ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தைத் திரும்பப் பார்ப்பதும். நினைவுகளில் கரைந்துபோகாதவர் எவர் இருக்கக்கூடும் சொல்லுங்கள்?

- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x