Published : 06 Feb 2020 08:23 AM
Last Updated : 06 Feb 2020 08:23 AM

மருந்து தயாரிப்பு ஆய்வுகளில் ஏன் பெண்ணுடலைப் பொருட்படுத்துவதில்லை?

நவீனா

பெண்களின் சருமத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கென பிரத்யேகமாக சோப்புகளும், முகக்களிம்புகளும், வாசனை திரவியங்களும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அவர்களுடைய நோய்களுக்கான மாத்திரைகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுவதில்லை. அப்படியொரு தேவை இருப்பதைப் பற்றி விவாதங்கள்கூட நிகழ்வதில்லை. உலகம் முழுமைக்கும் புழக்கத்தில் இருக்கும் சுமார் பத்தில் எட்டு மருந்துகளும் மாத்திரைகளும் ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகப் பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தன்மையுடையவை எனக் கூறி 80% மருந்துகளை 2000-ல் தடைசெய்துள்ளது அமெரிக்காவின் எஃப்டிஏ.

ஒரு மருந்து மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, புழக்கத்துக்கு வருவதற்கு முன், பல கோடிகள் செலவில், பல ஆண்டுகள் ஆராய்ந்து பரிசோதிக்கப்பட்டு, மருத்துவக் குழுவின் ஒப்புதலின் பேரில்தான் சந்தைக்கு வருகிறது. இத்தனை படிநிலைகளைத் தாண்டி வரும் ஒரு மருந்து, ஆண் உடலுக்கு ஏற்றபடி வேலைசெய்யும்போது, பெண்களுக்கு மட்டும் அதிகக் கேடுகளை விளைவிக்கிறது என்பதை மிகச் சமீபத்தில்தான் அறியத் தொடங்கியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் மனித உடல்நலம், ஆரோக்கியம் குறித்த ஆராய்ச்சிகள் அதிக முக்கியத்துவம் பெற்ற சூழலில், மருத்துவ ஆய்வுகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மனித செல்கள், விலங்குகள், நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் என அனைத்தும் ஆண்கள்தான் என்றும், இவ்வாறு ஆண் பாலினத்தைத் தேர்வுசெய்வதற்கு மூன்று காரணங்கள் இருந்ததாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒன்று, பெண்ணுடலைக் காட்டிலும் ஆணுடலை ஆய்வுசெய்வது எளிது. இரண்டு, பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தும்போது அது அவர்களின் இனப்பெருக்கத் திறனையும், கரு உற்பத்தியையும் பாதித்துவிடும் என்கிற அச்சம். மூன்றாவது, ரத்தக்கொதிப்பு முதல் இதய நோய் வரை பொதுவான வியாதிகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் அப்போது ஆண்களாகவே இருந்தார்கள்.

அடிப்படையில் ஆணுடலிலிருந்து பெண்ணுடல் மார்பகம், பிறப்புறுப்பு, கருப்பை ஆகியவற்றில்தான் வேறு படுவதாகத் தவறான பிம்பம் நிலவிவருகிறது. இரு பாலினத் தவருக்கும் குரோமோசோம்களின் வகைகள், ரத்த அணுக்களின் எண்ணிக்கை, மூளையின் எடை, இதய அமைப்பு என உடற்கூறுகளும் வேறுபட்டிருக்கின்றன. இப்படி இருக்கும்போது, ஆணுடலுக்காகத் தயாரிக்கப்படும் மருந்து, பெண்களுக்கான நோய்களை எப்படிக் குணப்படுத்த முடியும்? இந்தக் கேள்விதான் பெண்ணுடல் சார்ந்த மருத்துவ ஆய்வுகள் இன்று அதிக கவனம் பெறக் காரணமாக இருக்கிறது. பெண் நோயியல் எனப் பெண்களின் உடற்கூறுகளை ஆய்வுசெய்யும் துறை ஒன்று இருந்தாலும், அதில் மகப்பேறு மருத்துவம், மார்பக வியாதிகள் சார்ந்த ஆய்வுகள்தான் பெரும்பான்மையாக நிகழ்ந்துவருகின்றன. பெண் நோயியலின் மருத்துவ முன்னெடுப்புகள் ‘பிகினி மெடிஸின்’ என்று அழைக்கப்படுவதிலிருந்து அதன் நோக்கத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

இரண்டாவதாக, பெண்களின் இனப்பெருக்கத் திறனைப் பாதிக்கும் எனக் கூறி, அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் மருந்துகளை ஆய்வுசெய்ய பச்சிளம் குழந்தைகளைக்கூட ஆய்வுக்கு உட்படுத்தும்போது, பெண்களும் அவர்களின் மேம்பட்ட உடல்நலனுக்காக ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. மூன்றாவதாக, பொதுவான வியாதிகள் பெண்களைக் குறைவாகத் தாக்கினாலும், ஆண்களுக்காகத் தயாரிக்கப்படும் மருந்துகளைப் பெண்கள் உட்கொள்வது அவர்களுக்குக் கூடுதல் சுகவீனத்தை ஏற்படுத்துகிறது. ஆணுடலைக் காட்டிலும் பெண்ணுடல் ஒரு மருந்தை வளர்சிதைக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு அதிகம் என்பதால், அது ஒவ்வாததாக மாறுகிறது. உதாரணமாக, ஒரே வீரியமுள்ள தூக்கமாத்திரையை இரவில் உட்கொள்ளும் ஆண், பெண் இருவரில் மறுநாள் காலையில் ஆண் சுறுசுறுப்புடனும், பெண் தூக்கக் கலக்கத்துடனும் எழுவார்கள் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவான நோய்களுக்கான மருந்துகள் மட்டுமின்றி, அவசரகால மருந்துகள், மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவ உபகரணங்கள் என அனைத்தும் ஆணுடலின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையிலும் ஆய்வுகள் தற்போது நிகழ்ந்துவருகின்றன. வெளிப்புறத்தில் பூசிக்கொள்ளும் முகக்களிம்புகளைக் காட்டிலும் ஒரு பெண்ணின் உடல்நல மதிப்பு குறைவானதா? ஒரு பெண்ணின் உடற்கூறுகளுக்கேற்ற மருந்து அவளுடைய உரிமை இல்லையா?

- நவீனா, ‘லிலித்தும் ஆதாமும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: writernaveena@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x