Published : 06 Feb 2020 08:21 AM
Last Updated : 06 Feb 2020 08:21 AM

கூட்டாட்சிக் கொள்கை குடியுரிமையிலும் பிரதிபலிக்க வேண்டும்!

தியாகு

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ளபடி, ‘இந்திய மக்களாகிய நாம்’ இந்தியாவைக் குடியரசாக அமைத்துக்கொள்கிறோம். எத்தகைய குடியரசு? இறையாண்மையுள்ள, சோஷலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு. அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் ‘இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு’ என்று மட்டும் இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 42-வது திருத்தத்தின் வாயிலாக சோஷலிஸமும் மதச்சார்பின்மையும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் சேர்க்கப்படுவதற்கு முன்பே 1973-ல் கேசவானந்தபாரதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட முழு ஆயம் வழங்கிய தீர்ப்பில் மதச்சார்பின்மையை அரசமைப்பின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாக வரையறுத்துக் கூறியது. ஏனென்றால், இந்தியா போன்ற ஒரு பன்மைச் சமூக நாட்டில் சமயச்சார்பின்மை என்பது ஜனநாயகத்தின் இன்றியமையாத கூறுகளில் ஒன்று; மதச்சார்பின்மைபோலவேதான் கூட்டாட்சியும். இந்திய அரசமைப்பு தன்னைக் கூட்டாட்சி என்றோ, ஒற்றையாட்சி என்றோ வரையறுத்துக்கொள்ளவில்லை என்றாலும், ‘இந்திய ஒன்றியம்’ என்ற பெயருக்கு ஒரேவிதமான பொருள் விளக்கம் தரப்படுவதும் இல்லை. ஆனால், கேசவானந்த பாரதி வழக்கில் ‘இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் கூட்டாட்சிக் கொள்கையும் ஒன்று’ என உச்ச நீதிமன்றம் வரையறுத்துக் கூறியது. இந்த அடிப்படைக் கட்டமைப்பை நாடாளுமன்றத்தில் எவ்வளவு பெரும்பான்மை இருப்பினும் திருத்த முடியாது அல்லது இந்த அரசமைப்பை அப்படியே தூக்கிப்போட்டுவிட்டு புதிய அரசமைப்பைத்தான் உருவாக்க வேண்டும். ஆக, கூட்டாட்சியைத் தன்னுடைய அடிப்படையாகக் கருதும் ஒரு நாடு உள்ளபடி கூட்டாட்சிக்கு என்ன மதிப்பளிக்கிறது?

இறையாண்மை எங்கே இருக்கிறது?

இப்போது பெரிதாக விவாதிக்கப்படும் ‘குடியுரிமைச் சட்டத் திருத்தம்’ விவகாரத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ‘பாரதம் என்கிற இந்தியா அரச மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்கிறது அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது கூறு. ‘ஸ்டேட்ஸ்’ என்ற சொல்லை ‘மாநிலங்கள்’ என்றும் கருதலாம்; ‘அரசுகள்’ என்றும் கருதலாம். ஆட்சிப்புலம், குடிகள், ஆட்சி மூன்றும் இருந்தால்தான் அரசு. சமூக அறிவியல் அல்லது அரசியல் அறிவியலில் நாடுகள் என்று இவற்றைக் குறிக்கக் காணலாம். ‘யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா’வை அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்றே குறிப்பிடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த எடுத்துக்காட்டு.

குறுநிலம் என்பது பேரரசுக்குக் கப்பம் கட்டும் சிற்றரசு. அது இறையாண்மையற்றது. மாகாணமும் அப்படித்தான். ஒரு ஆட்சி அலகு என்ற வகையில், ‘விரிவடைந்த மாவட்டம்’ என்பதற்கு அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஆனால், ஒரு மாநிலம் என்பது குறுநிலம் அல்ல; அது தற்சார்பானது, தன்னாட்சி கொண்டது. இறையாண்மையுடையது. 1935-ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் மாகாணங்களையே தோற்றுவித்தது. 1950-ம் ஆண்டின் இந்திய அரசமைப்புதான் மாநிலங்களைத் தோற்றுவித்தது.

‘ஸ்டேட்’ என்பது மாநிலத்தைக் குறிக்க மட்டுமல்லாமல் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து இந்திய அரசைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் மாநில அரசானாலும் மத்திய அரசானாலும் இரண்டுமே ‘ஸ்டேட்’ எனப்படுகிறது. ஆக, ‘ஸ்டேட்’ என்பதை மாநிலம் என்றாலும் சரி, அரசு என்றாலும் சரி, நாடு என்றாலும் சரி, அது இறையாண்மையுடையது.

இந்திய அரசமைப்பில் ஒன்றியம், மாநிலம் என்று இரு அரசுகள் உள்ளன. இரண்டும் இறையாண்மை கொண்டவை. ஒவ்வொன்றும் சில வகையில் தனி முழு இறையாண்மை கொண்டவை, வேறு சில வகையில் இறையாண்மையைப் பகிர்ந்துகொள்ளக்கூடியவை.

மாநில இறையாண்மை

இந்திய ஒன்றியத்துக்கு இறையாண்மை உண்டு. அது மாநிலத்துக்கு உண்டா? ‘உண்டு’ என்றார் அம்பேத்கர். மாநிலப் பட்டியலில் இடம்பெற்ற அதிகாரங்களில் மாநிலத்துக்கு இறையாண்மை உண்டு என்று அவர் விளக்கமளித்தார். 1963-ல் மாநிலங்களவையில் உரையாற்றிய அண்ணாவின் புகழ் மிக்க உரைகளில் ஒன்று, ‘இறையாண்மைக்கான அர்த்தம் அறுதியிடப்பட்டதல்ல’ என்பதாகும். இறையாண்மை என்பது ஓரிடத்தில் குவிந்துவிட்டிருக்கவில்லை; அது மாநிலங்களுடனும் பகிரப்பட்டிருக்கிறது என்பதை டெல்லிக்கு அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் அண்ணா. ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இறையாண்மையைப் பகிர்ந்துகொள்வதே கூட்டாட்சி அமைப்பின் சாராம்சம்.

குடியுரிமை இல்லாத அரசு, அரசே ஆகாது. அப்படியென்றால், ஒன்றியம்போலவே மாநிலமும் அரசுதான் என்றால், அதற்கும் குடியுரிமை இருக்க வேண்டும்; இல்லையா? மாநிலம் என்றாலும், அரசு என்றாலும், நாடு என்றாலும் குடியுரிமை இன்றியமையாத ஒன்று. இந்திய அரசின் கூட்டாட்சித்தன்மை இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பில் ஒன்று என்பது உண்மையானால் குடியுரிமையில் ஒரு பகுதியாவது மாநில அதிகாரமாக இருக்க வேண்டும். இறையாண்மையைப் பகிர்ந்துகொள்ளும் கொள்கைப்படி குடியுரிமையையும் பகிர்ந்துகொள்ளலாம். இதை இரட்டைக் குடியுரிமை என்று அழைக்கலாம்.

இந்திய அரசமைப்பின் முதல் பகுதி ‘ஒன்றியமும் மாநிலங்களும்’ பற்றியது. இரண்டாம் பகுதி குடியுரிமை பற்றியது. 5 முதல் 11 வரையிலான ஏழு கூறுகள் குடியுரிமை பற்றியவை. இவற்றில் முதல் மூன்று கூறுகளும் 1947 நாட்டுப் பிரிவினையை ஒட்டி இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் குடிபெயர்ந்தவர்கள் பற்றியவை. அடுத்த எட்டாம் கூறு அயல்நாடு வாழ் இந்தியர்கள் பற்றியது. ஒன்பதாம் கூறு, விரும்பி அயல்நாட்டுக் குடியுரிமையை ஏற்போர் இந்தியக் குடியுரிமையை இழப்பது பற்றியது. பத்தாம் கூறு, இந்தியக் குடிமக்களாக இருப்போரின் குடியுரிமை - நாடாளுமன்றம் ஏதேனும் சட்டம் இயற்றுமானால் அதற்கு உட்பட்டு தொடர்ந்து நீடிப்பது பற்றியது. இறுதியாக வரும் கூறு 11 குடியுரிமையை முறைப்படுத்த நாடாளுமன்றம் சட்டமியற்றுவது பற்றியது. ஆக, இந்திய அரசமைப்புச் சட்டம் நாட்டுப் பிரிவினையை ஒட்டி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான புலப்பெயர்வு பற்றிய வழிவகைகள் தவிர – குடியுரிமைக் கொள்கை எதையும் வகுத்துரைக்கவில்லை. இந்தியா-பாகிஸ்தான் புலப்பெயர்வுக்குப் பின் எதிர்காலத்தில் இந்தியாவுக்குக் குடிவரவோ குடிச்செலவோ இருக்காது என்று அரசமைப்பின் சிற்பிகள் எதிர்பார்த்தார்கள் போலும்!

மாநிலங்களின் குடியுரிமை

என்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் சமாளிப்பதற்கு 11-ம் கூறைப் பயன்படுத்திப் புதிய சட்டங்கள் இயற்ற வேண்டியதுதான். ஆனால் இந்தப் புதிய சட்டங்களுக்கு அடிப்படையாக அமைய வேண்டிய விழுமியங்களைக்கூட அரசமைப்புச் சட்டம் கோடிட்டுக் காட்டவில்லை என்பது பெருங்குறை. குடியுரிமை தொடர்பான இந்த அரசமைப்புச் சட்டக் கூறுகளில் கூட்டாட்சிக் கொள்கையின் லேசான சாயல்கூட இல்லை. ‘ஸ்டேட்’ என்பது அரசு, மாநிலம் அல்லது நாடு என்பது உண்மையானால், இந்தியக் குடியுரிமையோடு மாநிலக் குடியுரிமையும் தேவை.

குடியுரிமை, குடிமையளிப்பு, அயலார் ஆகியவை ஒன்றிய அதிகாரப் பட்டியலில் 17-வது இனத்தின் கீழ் வருகிறது. ஆக, குடியுரிமை என்பது நடுவணரசு எனப்படும் ஒன்றிய அரசின் தனி முழு அதிகாரமாகிவிடுகிறது. இது, ஒன்றியத்துக்கும் மாநிலத்துக்குமான இறையாண்மைப் பகிர்வு என்ற கொள்கைக்கும் முரணாகும். ஆகவே, இது கூட்டாட்சிக் கொள்கைக்கும் புறம்பானது. குடியுரிமையைப் பொதுப் பட்டியல் அல்லது இசைவுப் பட்டியலில் சேர்க்கக் கோர வேண்டும். அசாமில் காணப்படுவது போன்ற கடுஞ்சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், ரோகிங்யாக்கள், இலங்கைத் தமிழர்கள் போன்றோரின் இருண்ட வாழ்வில் சிறிது ஒளியூட்டவும் இந்த வழிமுறை பயன்படக்கூடும்.

- தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

தொடர்புக்கு: thozharthiagu.chennai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x