Published : 05 Feb 2020 08:15 AM
Last Updated : 05 Feb 2020 08:15 AM

எல்லா குழந்தைகளையும் எப்படிப் படிப்பவர்களாக வளர்த்தெடுப்பது?

இராமானுஜம் மேகநாதன்

அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கி 1990-களில் தொடங்கிய பல முன்னெடுப்புகள் பல்வேறு திட்டங்களாகவும் சட்டங்களாகவும் உருப்பெற்று, ஒரு நல்ல நிலையைத் தற்போது எட்டியிருக்கிறது. ‘யுனெஸ்கோ’ போன்ற சர்வதேச அமைப்புகள் முன்னெடுத்த முயற்சிகளாலும், மத்திய - மாநில அரசுகள் எடுத்துக்கொண்ட சிரத்தைகளாலும் இந்த முயற்சிகள் ஒருவிதமாக நல்ல விளைவுகளை நோக்கி நகர்த்திச் செல்கின்ற வேளையில், பல இடையூறுகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. மிக முக்கியமான சவால் என்னவென்றால், தேர்வு மதிப்பெண்களைப் பொருட்படுத்தாமல், குழந்தைகளைத் தொடர்ந்து அடுத்தடுத்த வகுப்புகளுக்கு நகர்த்தும்போது அவர்களுடைய கற்றல் உண்மையாகவே முழுமை அடைகிறதா என்பதாகும்.

எட்டாவது படிக்கும் ஒரு குழந்தையால், எட்டாம் வகுப்புக்கான புத்தகங்களில் உள்ள வாக்கியங்களையே வாசிக்க முடியாமல் போகும்போது, இந்த முடிவு சரியானதா என்று கேள்வி எழுவது நியாயமானது. ‘ஐந்தாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு’ என்பது போன்ற முடிவை அரசு சிந்திக்க இது ஒரு முக்கியமான காரணம். பிள்ளைகள் ஒருபுறம் வகுப்புகளைத் தாண்டிவிடுகிறார்கள்; இன்னொருபுறம் அதற்கேற்ற அறிவை அவர்கள் பெற்றிருப்பதில்லை. இந்தச் சூழலை எப்படி மாற்றுவது?

ஆக, எட்டாம் வகுப்பு வரையில் யாரையும் எந்த வகுப்பிலும் தடுத்து நிறுத்துவதில்லை என்ற கல்வி உரிமைச் சட்டத்தின் சாரத்தைத் திருத்தி, ‘தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு நடத்தவும், அதிலும் வெற்றி பெறாதவர்களைத் தொடர்ந்து அதே வகுப்பில் நிறுத்தி வைப்பதைப் பற்றி மாநில அரசு முடிவெடுக்கவும்’ நாடாளுமன்றத்தால் சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு இல்லையென்றாலும், இனி வரும் காலங்களில் எட்டாம் வகுப்பு வரையில் தேர்வில் தேர்ச்சி பெறாத குழந்தைகளை அதே வகுப்பில் நிறுத்திவைக்கும் நிலை வருமோ என்ற அச்சமும் தொடர்கிறது.

உலகில் வேறு எங்கும் இல்லை

பச்சிளம் குழந்தைகள் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அதற்கு அவர்கள் மட்டும்தான் காரணமா அல்லது அவர்களுக்கு அந்த வசதிகளைச் செய்து தராத பெற்றோர்களும், உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்காத பள்ளிக்கூடமும் காரணமா? ஒரு குழந்தை பள்ளிக்கூடத்துக்கு வந்துவிட்டால், ஏதாவது கற்றுக்கொள்ளவே செய்யும். அதை மேம்படுத்தும் முயற்சிகளை எடுப்பது ஆசிரியர்கள், பள்ளிக்கூடம் மற்றும் பெற்றோர்களின் கடமை. இதனை உணராத ஒரு சமுதாயமாக நாம் உருவெடுத்துள்ளோம் என்பதுதான் கசப்பான உண்மை.இன்று உலகிலுள்ள ஏறத்தாழ 195 நாடுகளில், 180-க்கும் மேற்பட்ட நாடுகள் 10-ம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் தடுத்து நிறுத்துவதில்லை. ஏன், 120-க்கும் மேற்பட்ட நாடுகள் 12-ம் வகுப்பு வரை எந்தக் குழந்தைகளையும் தடுத்து நிறுத்துவதில்லை. ஏன் இந்த உலக நடப்பு, நமது கல்வித் திட்டமிடுதலில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளுக்கும் 'உலகத் தரம்', 'உலகத் தரம்' என்று தினமும் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கின்ற அரசியலர்களுக்கும் புரியவில்லை? அறியாமையா அல்லது அறிவீனமா?

கடந்து வந்த கல்விப் பாதை

1964-ல் அமைக்கப்பட்ட பேராசிரியர் டி.எஸ்.கோத்தாரி தலைமையிலான தேசிய கல்விக் குழு, பல கலந்தாய்வுகளுக்குப் பிறகு, 1966-ல் அதன் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயம், 10-ம் வகுப்புக்கு முன்பாகப் பொதுத் தேர்வை நடத்தக் கூடாது என்பது. அறிவுபூர்வமான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையிலேயே கோத்தாரி கல்விக் குழு இந்த முடிவை எடுத்தது. அதன்படி, இந்தியா முழுவதும் அனைத்து மாநில பள்ளித் தேர்வு வாரியங்களும் சிபிஎஸ்சி போன்ற தேசிய அளவிலான பள்ளித் தேர்வு வாரியங்களும் 1970-களிலிருந்து 10-ம் வகுப்பில் முதல் பொதுத் தேர்வை நடத்திவருகின்றன. 10 வருடப் படிப்புக்குப் பிறகே முதல் பொதுத் தேர்வை எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான காரணம், 15 அல்லது 16 வருட உடல் வளர்ச்சியும் 10 அல்லது 12 வருட கல்விப் பயிற்சியும்தான் குழந்தைகளுக்குத் தங்கள் ஆசிரியர்களும் பள்ளியும் இல்லாத ஓரிடத்தில் பொதுத்தேர்வு எழுதத் தேவையான முதிர்ச்சியையும் தைரியத்தையும் கொடுக்கின்றன. ஒருவேளை, அதற்கு முன்னதாகவே பொதுத் தேர்வைக் கொண்டுவந்தால் என்னவாகும்?

பெற்றோர்கள் வழக்கம்போல் தனிப் பயிற்சிக்குக் குழந்தைகளை அனுப்பி, தங்களுடைய பணத்தையும் குழந்தைகளின் விளையாட்டு, கேளிக்கை மற்றும் ஓய்வெடுக்கும் நேரத்தையும் வீணடிப்பார்கள். அதன் வாயிலாக, குழந்தைகளுக்கு மேலும் இறுக்கமான, மன உளைச்சல் தருகின்ற சூழலையும் ஏற்படுத்துவார்கள். பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் நடுத்தரத்திலுள்ள மக்களின் குழந்தைகளும் கீழ்த்தளத்திலுள்ள மக்களின் குழந்தைகளும் இதனால் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

19-ம் நூற்றாண்டுக் கேள்வி

கல்வி அறிவு மற்றும் கல்வித் திறன்கள்தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் அதன் வளர்ச்சியையும் நிர்ணயிக்கும். எல்லா வளர்ந்த மற்றும் வளர்கின்ற நாடுகளும் அப்படித்தான் தங்களது பாதைகளை அமைத்துக் கடந்துவந்துள்ளன. எதற்கெடுத்தாலும் 'உலகத் தரம்வாய்ந்த கல்வியைத் தருகின்றோம்' என்று கூறி, பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை மேற்கோள் காட்டுகிறோம். ஆனால், இந்த நாடுகள் எதுவும் 12-ம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் அதே வகுப்பில் நிறுத்துவதில்லை என்பது ஏன் நமக்கு விளங்கவில்லை? அனைவருக்கும் கல்வி என்கின்ற கொள்கையிலும் நோக்கத்திலும் இவர்களுக்கு நம்பிக்கையும் உணர்வும் இல்லையா? இல்லை, 'எல்லோரும் படித்து என்ன கிழித்துவிடப் போகிறார்கள்?' என்ற 19-ம் நூற்றாண்டுக் கேள்வியா?

ஒன்று மட்டும் உண்மை, இன்று எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும், படிக்க வேண்டும், தான் படுகின்ற கஷ்டத்தைத் தன் குழந்தைகள் படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஏறத்தாழ எல்லா குழந்தைகளுமே (95% முதல் 99% வரையில்) பள்ளிக்கூடத்தில் சேர்ந்துள்ளனர் என்று என்சிஇஆர்டி போன்ற கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் நடத்துகின்ற கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இது எட்டாம் வகுப்பு வரை உள்ள கணக்கு. இந்த சதவீதங்கள் 2022 வாக்கில் 10-ம் வகுப்பு வரையிலும் எட்டப்படும். 2025-30 ஆண்டுகளுக்குள், 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற 18 வயதுள்ள எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில்தான் இருப்பார்கள் என்ற நோக்கிலேயே தற்போது விவாதத்தில் உள்ள வரைவு புதிய கல்விக் கொள்கை இலக்கை நிர்ணயித்ததுள்ளது.

ஆக, எல்லா மாணவர்களும் பள்ளிக்கூடங்களுக்கு வந்துவிடுவார்கள். அவர்களை உரிய வகையில் திறன் மிக்கவர்களாக மாற்றுவது, வளர்த்தெடுப்பது என்பது நிச்சயமாக நம் கையில்தான் உள்ளது. அதை எப்படிச் சாதிப்பது? ஆசிரியர்களிடமும் கல்வியாளர்களிடமும் அரசு திறந்த மனதுடன் பேச வேண்டும்; அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளுக்குச் செவி சாய்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு விஷயம் தெளிவாகும். அது, குழந்தைகள் முழுத் திறனைப் பெறாமல் இருப்பது அவர்களுடைய குறை அல்ல; நம்முடைய அமைப்பின் குறை என்பதாகும். உண்மைக்கு முகம் கொடுத்தால் அரசால் தீர்வு காண முடியும் என்பதே உண்மை.

- இராமானுஜம் மேகநாதன், பேராசிரியர்,

மொழிக் கல்வியியல் துறை,

தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்

தொடர்புக்கு rama_meganathan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x