Last Updated : 03 Feb, 2020 09:05 AM

 

Published : 03 Feb 2020 09:05 AM
Last Updated : 03 Feb 2020 09:05 AM

அண்ணா அளவுக்கு மாணவர்களை அரசியல் களம் நோக்கி இழுத்துவந்த தலைவர் இந்திய வரலாற்றில் இல்லை: எல்.கணேசன் பேட்டி

திமுகவில் பேச்சுக்கு இணையாக எழுத்தையும் ஆயுதமாகக் கொண்டவர்களில் ஒருவர் எல்.கணேசன். சாதாரண விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவரான கணேசன் சட்டம் பயின்றவர். சுதந்திர இந்தியாவை அதிரவைத்த மாணவர் போராட்டமான இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் கணேசன் முக்கியமான பங்கு வகித்தவர். மாணவர்களுக்கும் திமுகவுக்கும் இடையே பாலமாகவும் போராட்ட ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர். அண்ணாவைத் தலைவராகவும் திராவிட சித்தாந்தத்தைக் கொள்கையாகவும் ஏற்றுக்கொண்ட மாணவர்கள் அவர்கள்; அதேசமயம், கட்சிக்கு வெளியே இருந்தார்கள்; வெளியிலிருந்து கையாள வேண்டிய சிக்கலான உறவு அது. அந்த வரலாற்றுச் சூழலையும் தன் பொறுப்பையும் அண்ணாவுடனான மகத்தான சந்திப்பையும் நினைவுகூர்கிறார் கணேசன்.

உங்கள் குடும்பப் பின்னணியைச் சொல்லுங்களேன்...

சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி. அந்த ஊரிலேயே கீழையூர், மேலையூர் என்று இருந்தது. மேலையூர் கிராமம் மொத்தமும் ஒரு வேளாளருக்குச் சொந்தமானது. அது இனாம்தாரி. கீழையூரானது ஒரு ரயத்வாரி. இனாம்தாரி என்பது மன்னர்கள் காலத்தில், எதையாவது பாராட்டி ஒரு மனிதருக்கு பத்து ஊர், நூறு ஊர் என இனாமாக அளிக்கப்படும் நிலம். அதற்கு ‘இறையிலி’ என்றும் பெயருண்டு. ரயத்வாரி என்பது அரசுக்கு வரி கட்டும் குடிகள் வசிக்கும் பகுதி. நானிருந்த கீழையூர் ரயத்வாரி. மேலையூரில் விவசாயக் கூலியாக இருந்தவர்கள், அந்த வேளாளரை அடித்து விரட்டுவதற்காகக் கீழையூர்க்காரர்களையும் சேர்த்துக்கொள்ள இருவரும் ஒன்றானார்கள். கூலிகளாக இருந்து அதிகாரம் பெற்ற ஊர் என்பதால், ஒரு முற்போக்குச் சிந்தனை இருக்கும். அதன் விளைவாகத்தான் திராவிட இயக்கம் எங்களூரில் செல்வாக்குப் பெற்றிருந்தது. நான் திராவிட இயக்கத்தில் சேர்ந்தவன் அல்ல; அதாவது, என் குடும்பமே திராவிட இயக்கக் குடும்பமாகத்தான் இருந்தது. அதில் நான் 1934-ல் பிறந்தேன். அண்ணன்கள், மாமாக்கள் இப்படிச் சுற்றியிருந்தவர்களுடனான உரையாடல் தீவிர ஈடுபாட்டைக் கொண்டுவந்தது. சின்ன வயதிலேயே அண்ணா எழுதிய நூல்கள் பெரும்பாலானவற்றைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன். கல்லூரிக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிமுகமானது. அவர்களுடைய கூட்டங்களுக்குப் போவது, ‘ஜனசக்தி’ படிப்பது என்று ஆரம்பித்தேன். ஒருகட்டத்தில் ‘இதுவா, அதுவா?’ என்று ஒரு பெரிய போரே மனதுக்குள் நடந்தது. இறுதியில் திமுகழகமே வென்றது. இன்றைக்கு ஆழ்ந்து யோசித்தால், திமுக என்னைத் தக்கவைத்துக்கொண்டது அதன் ‘தமிழர்க்குத் தனி நாடு’ கொள்கைதான் என்று புரிகிறது. அன்றைக்குப் பெருவாரியான மாணவர்களை அரசியல்படுத்தியதும் அரசியலுக்கு ஈர்த்ததும் அண்ணாவின் எழுத்துகளும் இந்தக் கொள்கையும்தான்.

அண்ணாவை முதன்முதலில் எப்போது பார்த்தீர்கள்?

பதினெட்டு வயது இருக்கும், எஸ்.டி.சோமசுந்தரம் தன்னுடைய ஊரான செண்டாங்காட்டுக்கு அண்ணாவைக் கூட்டிக்கொண்டுவந்தார். நல்ல மழை. ராஜாமடத்தில் இருந்தேன், மழையில் நனைந்தபடி மூன்று மைல் நடந்தே போனோம். கொட்டும் மழையில் பேசிக்கொண்டிருந்தார் அண்ணா. பெரும் கூட்டம் மழையில் நனைந்தபடி நின்றிருந்தது.

இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் முழு மூச்சில் நின்றபோது, “திமுக அவர்களை முன்னின்று நடத்தவில்லை” என்று சொன்னவர் அண்ணா. ஆனால், உங்களைப் போன்றவர்கள் பின்னணியில் இருந்திருக்கிறீர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

தமிழ்நாட்டில் மொழிப் போராட்டத்துக்கு என்று நெடிய வரலாறு இருக்கிறது. அதை முழுக்கச் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும். 1938-ல் முதல் போர். அப்போதே நீதிக் கட்சியில் இருந்த அண்ணா, இந்தி ஒழிப்புப் போராட்டத்தில் கைதாகி, சிறைத் தண்டனையை அனுபவித்திருக்கிறார். அடுத்தது 1948-ல் நடந்தது. அந்தப் போரில் சர்வாதிகாரி பொறுப்பு வகித்து தலைமை வகித்தவர் அண்ணா. அடுத்தது 1950-ல் நடந்தது. அடுத்தது 1963-ல் நடந்தது. அப்போதெல்லாம் திமுக தோன்றிவிட்டது. அண்ணா அவற்றிலும் முக்கியப் பங்கு வகித்தார். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த நான்கு போர்களிலுமே அண்ணா சார்ந்திருந்த நீதிக் கட்சி/ திராவிடர் கழகம்/ திமுக மட்டும் அல்லாது வேறு தமிழ் அமைப்புகளும் பங்கெடுத்துக் கொண்டன. எந்த அமைப்பிலும் இல்லாத மாணவர்களும் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். மாணவர்களில் திமுக சார்ந்தவர்களும் இருப்பார்கள், சாராதவர்களும் இருப்பார்கள்; ஆனால், மொழியுணர்வும் இனவுணர்வும் இரு தரப்பாருக்கும் இடையில் ஒரு உறவை உண்டாக்கியிருந்தது. மாணவர்கள் விஷயத்தில் தலையிடக் கூடாது என்று அண்ணா நினைப்பார். ஆனால், தன் போக்கில் செல்லும் மாணவர்கள் விபரீதமாக வன்முறையில் ஏதும் இறங்கிவிடாத வண்ணம் ஒரு பார்வை அவர்கள் மீது கொண்டிருக்க வேண்டும் என்றும் எண்ணுவார். இந்தப் பின்னணியில்தான் என்னைப் போன்றவர்கள் பணியாற்ற நேர்ந்தது.

மொழிப் போர் காலகட்டத்தில் உங்களுடைய பணி என்னவாக இருந்தது? கொஞ்சம் விளக்க முடியுமா?

மொழிப் போர் காலத்தில், இரு வகையில் நான் பங்களித்திருக்கிறேன். முதலாவது, ஒரு மாணவனாக. அதாவது, 1962-ல் நான் சட்டக் கல்லூரி மாணவன். ‘அகில இந்திய இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு’ (ஆல் இண்டியா ஆன்ட்டி இந்தி அஜிடேஷன் கவுன்சில்) என்ற பெயரில் அமைப்பு தொடங்கிப் போராடிக்கொண்டிருந்தோம். 1965-ல் இரண்டாவது பொறுப்புக்கு நகர்ந்தேன். அதாவது, இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. அப்போது நான் மாணவர் திமுக செயலாளர். தமிழகம் முழுவதும் கல்லூரி கல்லூரியாகச் சுற்றுவோம், மாணவர்களுடன் பேசுவோம், அப்போது என்னுடன் சுற்றியவர்களில் துரைமுருகனும் ஒருவர். ‘தமிழ் மொழி காக்கப்பட இந்தித் திணிப்பை எதிர்ப்பது முக்கியம்; அதேசமயம், வன்முறைப்பாதை நோக்கிச் சென்றுவிடக் கூடாது’ என்பதைத் தீவிரமாக வலியுறுத்துவோம் மாணவர்கள் அரசியலுணர்வும் உலக அறிவும் பெறுவதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டிய அதே நேரத்தில், படிப்பைப் பின்னுக்குத் தள்ளிவிடும் அளவுக்கு நேரடி அரசியலுக்கு வந்துவிடக் கூடாது என்பதை எடுத்துச் சொல்வோம். அண்ணாவின் அக்கறைகளைத் தெரியப்படுத்துவோம்.

வன்முறை எதிர்ப்பில் அந்த அளவுக்கு அக்கறை கொண்டவரா அண்ணா?

என்ன, இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? 1965 மொழிப் போர் பாதியில் நிறுத்தப்பட அண்ணாதான் காரணம் தெரியுமா? இந்திய அரசமைப்பு ஏற்பாட்டின்படி 1965, ஜனவரி 26 அன்று இந்தி ஒன்றே அலுவல் மொழியாவதுதான் ஏற்பாடு – அதாவது, ஆங்கிலத்துக்கு அன்றோடு விடை கொடுப்பது என்று முடிவெடுத்துவிட்டார்கள். இந்தச் சூழலில்தான் அந்தப் போராட்டம் நடந்தது கொந்தளிப்பான சூழல். மாணவர்கள் பெரும் தன்னெழுச்சியோடு நிற்கிறார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த காங்கிரஸ் ஆட்சி பொறுப்பற்ற வகையில், போராட்டங்களை உதாசீனப்படுத்தியது. தீப்பிழம்புபோல இருக்கிறார்கள் மாணவர்கள். தடியடி, துப்பாக்கிச்சூடு என்று காவல் துறை வெறியாட்டம் ஆடுகிறது. அடுத்த கட்டமாக, மாணவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை வரவழைத்துவிட்டது பக்தவத்சலம் அரசு. மாணவர்கள் தரப்புத் தலைவர்களில் அப்போது முக்கியமானவர் சீனிவாசன் – இவர்தான் பிற்பாடு காமராஜரைத் தேர்தலில் தோற்கடித்தார். அண்ணாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தபோதே தெரிந்துவிட்டது, அண்ணா போராட்டத்தை நிறுத்தச் சொல்லப்போகிறார் என்று. என்னை அழைக்க வந்த என்.வி.என்.சோமு உள்ளிட்டவர்களிடம் “இடையில் ஒரு வேலை இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, கலைஞரைப் பார்க்கப் போனேன். அவர் எங்கள் மாவட்டக்காரர் என்பதால் நல்ல பழக்கம். “அண்ணே, மாணவர்கள் தன்னெழுச்சியாப் போராடுறாங்க. நாம ஆதரிச்சா நாளைக்கு நமக்கு ஆதரவு கிடைக்கும். நாம தடுத்தாலும் அவங்க நிறுத்தப்போறதில்லை. ஆனா, கெட்ட பேர் பின்னாடி வரும். அண்ணாகிட்ட நீங்களாவது சொல்லுங்க” என்று சொன்னேன். “நான் அண்ணாவிடம் பேசுகிறேன். நீ ‘முரசொலி’ அலுவலகத்தில் இரு. அண்ணாவிடம் பேசிவிட்டுக் கூப்பிடுகிறேன், நீ வா” என்று சொன்னார். காத்திருந்தேன். தொலைபேசியில் அழைப்பு. அண்ணா வீட்டுக்குச் செல்கிறேன். அன்று அண்ணா பேசியதை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்.

அப்படி என்ன பேசினார் அண்ணா?

நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருந்த அண்ணா, என்னைப் பார்த்ததும் படாரென எழுந்தார். என்னையும் உட்காரச் சொல்லவில்லை. அவரும் உட்காரவில்லை. ஒரு மணி நேரம் பேசினார், முழுக்க ஆங்கிலத்தில். ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களிடம், குறிப்பாக மாணவர்களிடம் அப்படிப் பேசுவது வழக்கம். அவரைப் போலவே நாங்களும் பேச அது உத்வேகம் அளிக்கும் என்றுகூட நினைத்திருப்பார். “இனி அரசியல் களத்தில் கையாள வேண்டிய விவகாரம் இது. மாணவர்கள் எங்களை நம்பிக்கையளிக்க வேண்டும். தம்பி, விட்டுக்கொடுக்கச் சொல்வதால், நீகூட என்னைக் கோழை என நினைக்கலாம். வீரம்தான் வெற்றிக்கான வழிமுறை என்றால், தமிழினத்துக்கு சாம்ராஜ்யம் இருக்க வேண்டும். ஆனால், நாடுகூட இல்லை. சில சூழல்களில் பின்வாங்குவதும் விட்டுக்கொடுப்பதும் கோழைத்தனமில்லை. நாம் நாடு வாங்குகிறோமோ இல்லையோ, உயிர்களை இழக்கக் கூடாது. இரு தரப்பிலுமே சரி. அதிலும் மாணவர்கள் நம் பிள்ளைகள். பயமறியாதவர்கள். அதே அளவுக்கு ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடியவர்களும்கூட. பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்? நம் எதிரில் இருக்கும் ஆட்சியாளர்களுக்குக் கண் இல்லை; ஆனால், நமக்கு இதயம் இருக்கிறது” என்றார்.

போராட்டத்தைக் கைவிட்டீர்களா?

இல்லை. அப்போதே நான் என்ன சொன்னேன் என்றால், “இதையே லால் பகதூர் சாஸ்திரி சொல்லியிருந்தால், நடக்கும் கதை வேறு. ஆனால், நீங்கள் என் தலைவர்.அதனால் தாங்கிக்கொள்கிறேன். எனக்குக் கொஞ்சம் அவகாசம் தாருங்கள்” என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். இப்படியெல்லாம் பேசுவதற்கான இடத்தை அவர் தந்திருந்தார். அடுத்து கலைஞரிடம் போனேன். “எனக்கும் போராட்டத்தைக் கைவிட விருப்பம் இல்லை. ஆனால், அண்ணா உறுதியாக இருக்கிறார்” என்றார். “நான் போராட்டத்தைக் கைவிடப் பேசச் சொன்னால், போராட்டத்தைத் தொடர சிபாரிசுக்கு என்னிடமே வருகிறாயே?” என்று என்னால் கலைஞரையும் திட்டி அனுப்பியிருந்தார் அண்ணா. அங்கிருந்து வெளியேறி தலைமறைவாகிவிட்டேன். போராட்டத்தைத் தொடர்வதையே மாணவர்களும் விரும்பினார்கள்; அண்ணாவுக்கு எதிராக அவர்கள் பக்கமே நிற்பது என்று நானும் முடிவெடுத்தேன். ஆனால், ராணுவம் வந்திறங்கிய பின் கடுமையான நெருக்கடி. சிக்கிய மாணவர்களையெல்லாம் கொடிய தாக்குதலுக்கு உள்ளாக்கினார்கள். இரண்டே நாட்கள். அண்ணா சொன்ன முடிவை நாங்களாகவே எடுக்கும் சூழல் வந்தது. பிற்பாடு கட்சியில் தீவிரமானேன். அப்போதும் பெரும்பாலான தவறுகளை அண்ணா மன்னிப்பார். வன்முறை, ரௌடித்தனம் போன்றவற்றைத் துளியும் சகித்துக்கொள்ள மாட்டார்.

அண்ணா காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நீங்கள். எப்படி நடந்துகொள்வது என்று வழிநடத்துவாரா?

முழுச் சுதந்திரம் கொடுப்பார். ஆனால், ஜனநாயக நெறி கெடாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வார். நிறைய வாசிக்க வேண்டும், நாகரிகமாகப் பேச வேண்டும், எதிர்த்தரப்பினரின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

அண்ணாவின் பிரத்யேகப் பண்பு என்று எதைச் சொல்வீர்கள்?

அண்ணாவுக்குள் ஒரு ஆசிரியர் இருந்தார் அரசியல் களத்தில் ஏனைய தலைவர்களோடு ஒப்பிட, அவர் கற்பிப்பவராகவே இருந்தார். இந்திய வரலாற்றில் அண்ணா அளவுக்கு அரசியல்களம் நோக்கி மாணவர்களை இழுத்துவந்த தலைவர் கிட்டத்தட்ட யாரும் கிடையாது. ஆனால், அரசியலை மாணவர்கள் எப்படி அணுக வேண்டும் என்பதற்கான எல்லையை அவர் நினைவூட்டிக்கொண்டே இருப்பார். அந்த வயதில் அவர்கள் சட்டென்று உணர்வதற்கு ஏற்ப “அரசியல், முறைப்பெண் மாதிரி” என்று சொல்வார். அதாவது, அரசியல் மீது ஈர்ப்பு இருக்கலாம்; காதல் இருக்கலாம்; ஆனால், திருமணத்துக்கான பருவம் அதுவல்ல என்பதே அவர் உணர்த்தியது.

பிப்ரவரி 3: அண்ணா நினைவு நாள்

‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...

தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x