Published : 31 Jan 2020 08:07 AM
Last Updated : 31 Jan 2020 08:07 AM

நானி பல்கிவாலா: நீதித் துறை அறிஞரின் பொருளியல் முகம்

பா.சந்திரசேகரன்

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பன்முக ஆளுமைகளில் ஒருவர், நானி பல்கிவாலா. நீதித் துறை அறிஞராக அவரது அபார ஆளுமைத்திறனைப் பற்றி தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்றளவும் பேசப்பட்டுவருகிறது. பிரபல வழக்கறிஞர், இந்திய அரசமைப்புச் சட்ட நிபுணர், சர்வதேச சட்ட வல்லுநர், சிறந்த சட்டப் பேராசிரியர், கல்வியாளர் என்பதோடு அவர் ஒரு பொருளியல் அறிஞரும் நிதிநிலை ஆய்வாளரும்கூட.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அரசமைப்புச் சட்டம் ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள அடிப்படை உரிமைகளைப் பின்பற்றுவதோடு, அவற்றை அரசியல் களத்தில் கண்ணியமாகக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமாக இருந்தது என்பதுதான் வரலாறு. அந்நிலை இன்றும் தொடர்கிறது. அரசமைப்புச் சட்டம் குறித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வழக்குகளில் நானி பல்கிவாலாவின் பங்களிப்பு அளப்பரியது. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை ஆளும் அரசு, தன்னுடைய மனம்போன போக்கில் மாற்றங்கள் செய்ய முடியாத அளவுக்கு அவற்றை வழக்குகளின் வாயிலாக வலுப்படுத்தினார். நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது, பத்திரிகைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது, வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளில் அவரின் அறிவார்ந்த வாதங்கள் பாராட்டப்பட்டன. அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் குறித்த அவரது விமர்சனங்கள் வீரியம் மிக்கவை.

வரிச் சட்டங்களில் நிபுணர்

நானி ஆர்த்தீர்ஸ் பல்கிவாலா, ஜனவரி 16, 1920-ல் பம்பாயில் ஓர் எளிய பார்சி குடும்பத்தில் பிறந்தார். அவரின் பெற்றோர் ‘நானாபாய்’ என்று அவரை அழைத்தார்கள். மற்றவர்கள் அவரை ‘நானி பல்கிவாலா’ என்று அழைத்தார்கள். அவர் தனது பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பை பம்பாயில் முடித்தார். தூய சேவியர் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியமும் பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்தார். பள்ளியில் படிக்கும்போது, திக்குவாய் பிரச்சினையைச் சந்தித்த அவர், பின்னாளில் மிகப் பிரபலமான வழக்கறிஞராக விளங்கினார் என்பது ஊக்கமூட்டும் விஷயம்.

1946-ல் சர் சாம்சட்ஜி காங்கா என்ற மூத்த வழக்குரைஞரிடம் இளம் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார் நானி பல்கிவாலா. அடுத்த சில ஆண்டுகளில், அவர் ‘வருமான வரிச் சட்டம் மற்றும் நடைமுறைகள்’ என்ற சிறந்த நூலை எழுதிமுடித்தார். அப்போது அவரின் வயது 30 தான். பல பத்தாண்டுகளாக இந்தப் புத்தகம் வருமான வரிகள் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகத் திகழ்ந்தது. வருமான வரி மற்றும் வணிக வரிச் சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் புகழ்வாய்ந்த வழக்கறிஞராக விளங்கிய பல்கிவாலா, இந்தியாவின் முதல் இரண்டு சட்டக் குழுக்களிலும் (1955 மற்றும் 1958) உறுப்பினராக இருந்தவர்.

நிதிநிலை அறிக்கையின் விமர்சகர்

1958 தொடங்கி பொது நிகழ்ச்சிகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தத் தொடங்கினார் நானி பல்கிவாலா. மத்திய அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கைகளைப் பற்றி ஆய்வுச் சொற்பொழிவுகள் அப்படித் தொடங்கியதுதான். 1958 தொடங்கி 1994 வரை தொடர்ந்து நிதிநிலை ஆய்வுச் சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்திவந்தார். முதன்முதலில் மும்பையில் ஒரு ஹோட்டலில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட அந்தச் சொற்பொழிவு, பொதுமக்களின் ஆதரவைப் பெற்று பல்வேறு நகரங்களில் கிரிக்கெட் மைதானங்களில் நடத்துகிற அளவுக்கு செல்வாக்குப் பெற்றது. இறுதி ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தச் சொற்பொழிவைக் கேட்கக் கூடினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையின் அனைத்து முக்கிய அம்சங்களையும், எல்லா மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் புள்ளிவிவரங்களோடு சொற்பொழிவாற்றினார். நிதிநிலை அறிக்கை பற்றிய தனது எண்ணங்கள், விமர்சனங்கள் மட்டுமின்றி, அரசின் வருவாயைப் பெருக்குவது, செலவுகளை எப்படிக் குறைப்பது என்பது குறித்து ஆக்கபூர்வமான யோசனைகளையும் அளிப்பது அவரது வழக்கம். அவரின் நிதிநிலை அறிக்கை பற்றிய ஆய்வு நிதியமைச்சரின் அறிக்கைக்கு நிகராகப் பார்க்கப்பட்டது. ஒன்றரை மணி நேரம், துண்டுச் சீட்டுகூட இல்லாமல் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் என்பது இன்னொரு ஆச்சரியம்!

இந்தியப் பொருளாதாரம், நீதித் துறை, அரசமைப்பு, சமுதாய ஒற்றுமை, நிதிநிலை அறிக்கைகள் பற்றிய ஆய்வு முதலான அவரது சிறந்த சொற்பொழிவுகள் ‘மக்களாகிய நாம்’ (1984) , ‘நாடாகிய நாம்’ (1994) என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டு நூல்களிலும் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை ஆக்கபூர்வமாக ஆய்வுசெய்து, அறிமுக வாசகர்களுக்கும் எளிதில் புரியும்படி விளக்கியுள்ளார். ஆங்கில இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர் பல்கிவாலா. அவரின் எழுத்துகள் அனைத்திலும் உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் மேற்கோள்களைப் பார்க்க முடியும்.

அரசமைப்புச் சட்ட வழக்கறிஞர்

உச்ச நீதிமன்றத்தில் 1973-ல் நடந்த கேசவானந்த பாரதி (எதிர்) கேரள அரசு என்ற முக்கியமான வழக்கில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மட்டுமே நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது, அதன் அடிப்படைகளை மாற்றுவதற்கு அதிகாரமில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வழக்கில், நானி பல்கிவாலாவுக்கு முக்கிய பங்குண்டு. உலகளாவிய நீதித் துறை சிந்தனைகளை எடுத்துக்காட்டி தனது வாதங்களை எடுத்துவைத்தார் பல்கிவாலா. சர்வதேச நீதிமன்றங்களிலும் இந்தியாவின் சார்பாகப் பல்வேறு முக்கிய வழக்குகளில் நானி பல்கிவாலா வாதிட்டார். பிற நாட்டுச் சட்ட அறிஞர்கள், தமது வாதுரைகளை எழுதிவைத்துக்கொண்டு பேசியபோது, பல்கிவாலா மட்டும் கைகளில் குறிப்புகள் எதுவும் இல்லாமல் வாதாடி ஆச்சரியப்படுத்தினார்.

1971-ல் சுதந்திரா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு நானி பல்கி வாலாவைக் கேட்டுக்கொண்டார் ராஜாஜி. ஆனால், அரசியல் சார்பற்றுத் தனித்துச் செயல்படவே தான் விரும்புவதாக வருத்தத்துடன் மறுத்துவிட்டார் பல்கிவாலா. டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் இயக்குநராகவும் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். 1968 முதல் 2000 வரை ‘ஃபோரம் ஆஃப் ஃப்ரீ எண்டர்பிரைசஸ்’ அமைப்பின் தலைவராக விளங்கினார். மும்பையை மையமாகக் கொண்டு இயங்கிய இந்த அமைப்பு, இந்திய அரசின் பொருளியல் கொள்கைகள் குறித்த விமர்சனங்களைப் புத்தகங்களாகத் தொடர்ந்து வெளியிட்டுவந்தது.

1977-ல் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நானி பல்கிவாலாவை நியமித்தது மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அவர் அந்தப் பணியில் இருந்தார். ஆனால், அந்த வாய்ப்பையும்கூட அவர் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் சட்டத் துறை மற்றும் பொதுச் சேவைகளைப் பாராட்டி, 1998-ல் நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான ‘பத்மவிபூஷண்’ வழங்கப்பட்டது. தனது 82-ம் வயதில் 2002 டிசம்பர் 11 அன்று மும்பையில் நானி பல்கிவாலா மரணமடைந்தார். தகுதிகள் இருந்தாலும் பதவிகளை விரும்பாதவர் அவர். 2004-ல் அவரது நினைவுச் சொற்பொழிவில் பேசிய முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், ‘இந்தியா ஒரு சிறந்த சட்ட அமைச்சரைப் பெறாமல் போய்விட்டது’ என்று கூறினார். சட்ட அமைச்சரை மட்டுமல்ல, நல்ல ஒரு நிதியமைச்சரையும் இந்தியா இழந்துவிட்டது. அவரைப் போல் சட்டத் துறையிலும் பொருளியல் துறையிலும் ஒருசேர நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் மிக அரிது.

- பா.சந்திரசேகரன், பொருளியல் நிபுணர்,

தொடர்புக்கு: bc.sekaran04@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x