Published : 28 Jan 2020 08:21 AM
Last Updated : 28 Jan 2020 08:21 AM

உங்கள் செல்பேசி ஜனநாயகத்துக்கு எப்படி துரோகமிழைக்கிறது?

சார்லி வார்ஸெல், ஸ்டூவர்ட் ஏ.தாம்சன்

பறந்தபடியே படம்பிடிக்கும் ட்ரோன் கேமராக்களிலிருந்து கிடைத்த காட்சிகளைப் பார்க்கும்போது, ஹாங்காங் வீதிகள் இரவு நேரத்தில் ஒளிவெள்ளத்தால் நிரம்பிவழிகின்றன; ஆயிரக்கணக்கான செல்பேசிகளின் வெளிச்சம் ஒன்றாக அசைந்தாடியது. ஒவ்வொரு ஒளிச்சிமிட்டலும் தங்களது வருகையையும், சுதந்திரத்துக்கான கோரிக்கையையும் தெரிவிக்கும் அடையாளமாக இருக்கிறது. முகத்தைக் கண்டுபிடிக்கும் அரசு கேமராக்களின் வலைப்பின்னலிலிருந்து தப்பிப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் முகமூடிகளை அணிந்திருக்கிறார்கள்.

இந்த விளக்கு வெளிச்சங்களுக்கு மேலாக, ஒவ்வொரு செல்பேசியும் இருளில் மற்றுமொரு கலங்கரை விளக்கமாக ஒளிவீசியதை மனிதக் கண்களால் கண்டுகொள்ள முடியாது. ஒவ்வொரு நிமிஷமும் இதன் சமிக்ஞைகள் பதிவுசெய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டன. ட்ரோன் கேமராவால் அல்ல; திறன்பேசி செயலிகளால். போராட்டக்காரர்கள் தங்களது செல்பேசி கேமராக்களின் விளக்குகளை அணைத்துவிட்டு, அவர்களின் வீடுகளை நோக்கிச் சென்ற பிறகும் அவர்களது முகமூடிகளைக் களைந்த பிறகும் நெடுநேரத்துக்கு இந்த சமிக்ஞைகள் செய்திகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.

எப்படி இது நடக்கிறது?

அமெரிக்காவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் எந்தவொரு போராட்டக்காரரும் தன்னோடு செல்பேசியை எடுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்துக்குச் சென்றார் என்றால், அவர் அதில் கலந்துகொண்டார் என்று கண்காணிக்கப்படுவதோடு, அதைப் பற்றி தரவுத் தொகுப்புகளிலும் பதிவுசெய்யப்படும். அதேநேரத்தில், வாக்காளர்களைத் தூண்டிவிடுவதற்காக, அரசியல் கட்சிகளும் அத்தகைய தகவல்களைத் திரட்டவும் செல்பேசிகள் எந்தப் பகுதியில் இருக்கின்றன என்ற தகவல்களை விலைக்கு வாங்கவும் தொடங்குகின்றன.

“சந்தேகத்துக்கு இடமின்றி இது ஒரு வஞ்சகச் செயல்” என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதழியல் பேராசிரியர் டோட் கிட்லின். இவர் 1960-களில் முக்கியமான செயல்பாட்டுக் குழுவாக இருந்த ஜனநாயகச் சமூகத்துக்கான மாணவர்கள் என்ற அமைப்பின் முன்னாள் தலைவரும்கூட. “இது அரசமைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட கருத்துரிமைக்குக் கேடு விளைவிக்கக்கூடியது. மக்கள் தாங்கள் கண்காணிப்படக்கூடும் என்று அறிந்துகொண்டால், தங்களை ஒரு இயக்கத்தோடு இணைத்துக்கொள்வதற்கு முன்னால் நிச்சயம் ஒரு தடவைக்கு இரு தடவை யோசிக்கவே செய்வார்கள்” என்கிறார் அவர்.
1.2 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் செல்பேசிகளிலிருந்து 500 கோடிக்கும் மேற்பட்ட இடங்களைப் பற்றிய ஒரு பெரும் தகவல்தொகுப்பு ‘டைம்ஸ் ஒப்பீனிய’னால் பெறப்பட்டது. இத்தகைய ஒருங்கிணைந்த கண்காணிப்பு முறைகள், ஒன்றுகூடவும் ஆரோக்கியமான ஜனநாயகத்தில் பங்கெடுத்துக்கொள்ளவும் அமெரிக்கர்களுக்கு இருக்கும் உரிமைக்கு எவ்வளவு தீங்கானது என்பதை எடுத்துக்காட்ட அது உதவியது.

சில நிமிடங்களில், எந்தவிதமான சிறப்புப் பயிற்சிகளும் இல்லாமல், கூகுள் வழியே தேடி மட்டுமே நாடு முழுக்கவும் சிறிதும் பெரிதுமாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் பற்றி ‘டைம்ஸ் ஒப்பீனிய’னால் தகவல்களைத் திரட்ட முடிந்திருக்கிறது.

ரகசியமாகப் பின்தொடர்பவர்கள்

சில குறிப்பிட்ட செல்பேசிகளைக் கண்காணிப்பதன் மூலமாக, 2017 பெண்கள் பேரணியில் கலந்துகொண்டவர்களை அவர்கள் வீடு திரும்புவது வரைக்கும் நம்மால் பின்தொடர முடியும். 2017-ல் ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற தினத்தில் நடந்த கருஞ்சட்டை ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டவர்களை நம்மால் அடையாளம் காண முடியும். அவர்களது பணியிடங்களுக்கே சென்று பின்தொடர்வதும் எளிதானது.

சில சமயங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுத்துக்கொண்டால், போராட்டக்காரர்களின் வீடுகளையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும்கூட அடையாளம் கண்டுகொள்ள முடியும். உதாரணத்துக்கு, கலிபோர்னியாவின் பெர்க்லியில் பாஸிஸத்துக்கு எதிரானவர்களுக்கும், மைலோ இன்னோபோலஸின் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் இடையே பிப்ரவரியில் நடந்த மோதலைச் சொல்லலாம்.

யாராலும் தப்பிக்க முடியாது

போராட்டக்காரர்கள் தங்களது அடையாளங்களை மறைத்துக்கொள்வது சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவே இருந்துவருகிறது. முகங்களை மறைத்துக்கொள்ளும் போராட்டக்காரர்கள் கலவரங்களைத் தூண்டிவிட வாய்ப்பிருக்கிறது என்ற அச்சத்தைப் பொதுவாக அரசுகள் விரும்புவதில்லை. நியூயார்க், ஜார்ஜியா உள்ளிட்ட சில மாகாணங்களில், பொது ஆர்ப்பாட்டங்களின்போது முகத்தை மறைத்துக்கொள்வதைத் தடுக்கும் சட்டங்கள் இருக்கின்றன. கனடா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கலவரங்கள் அல்லது சட்டவிரோதக் கூடுதல்களின்போது முகமூடி அணிந்துகொள்வதற்குக் கட்டுப்பாடு விதிக்கும் விதிமுறைகள் உள்ளன. ஆனால், திறன்பேசிகளின் காலத்தில் - முகங்களை மறைத்தாலும் மறைக்காவிட்டாலும் - முகங்களின் கூட்டத்திலிருந்து எவரொருவரும் இனிமேலும் தப்பிக்க முடியாது.

கீழ்க்காணும் கொடுங்கனவுகளைக் கற்பனைசெய்து பாருங்கள். பெரிய அளவிலான போராட்டங்களில் கலந்துகொள்ளும் அரசியல் எதிரிகளை அடையாளம் காணுவதற்காக அரசே செல்பேசியின் இட அமைவுத் தரவுகளைப் பயன்படுத்துகிறது. அரசுத் தரப்போ அல்லது காவல் துறையோ குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்க வாய்ப்பளிக்காமல் இட அமைவுத் தகவல்களைப் பயன்படுத்தி அச்சுறுத்துகின்றன. விளம்பர-தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு முரடர், அரசியல் கலவரங்களில் ஈடுபடும் கும்பலிடம் அந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்ளலாம். ஒரு பெரும் நன்கொடையாளர், அவரது கட்சி உயர்த்திப் பிடிக்க வேண்டிய அரசியல் இலக்குகளைத் தீர்மானிப்பதற்கு உதவியாகவும் போராட்டக்காரர்களைப் பற்றிய விவரங்களைப் பெறுவதற்காகவும் இட அமைவுத் தரவுகளைச் சேகரிக்கும் ஒரு நிறுவனத்தையே வாங்கலாம். வெள்ளை ஆதிக்கவாதக் குழுவொன்று, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சிறிய அளவிலான பாதுகாப்பில்லாத இட அமைவு பற்றிய தரவுச் சேகரிப்புகளை உடைத்து அவற்றிலிருந்து தேவைப்படும் இலக்குகளின் வீட்டு முகவரிகளை அறிந்துகொள்ளலாம்.

தரவுகள் விற்பனை

ஹாங்காங்கில் உள்ள சீனப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆய்வாளரும் செயல்பாட்டாளருமான லோக்மன் சாய் நம்மிடம் பேசியபோது மூன்றாவது தரப்பினர்கள் இத்தகைய தரவுகளை விற்பது பிரச்சினைக்குரிய ஒன்று என்றார். அதற்கு அவர் கூறிய காரணம், “இந்தத் தகவல்களைப் பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையானதாக இல்லை - அதுபோன்ற நிறுவனங்களிடம் நெறிமுறைகள் மீறப்படுகின்றனவா என்று ஆய்வுசெய்யும் அமைப்புகளும் இல்லை. நான் பணிபுரியும் பல்கலைக்கழகம் இந்தத் தகவல்களை வாங்க முடியும், அதைப் பெறுவது மிகவும் எளிதானது. அவர்கள் இத்தகைய தரவுகளை வாங்கினால் அதைக் கண்டு நான் ஆச்சரியமடைவேன். ‘ஓ, வாவ், இதை நீங்கள் வாங்கியிருக்கிறீர்களா? வெகு ஆச்சரியமான தரவுகள்’ என்று நான் சொல்வேன்.”

இந்தத் தரவுகள் கசிந்து வேறு கைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை - அத்தகைய தரவுகள் இருக்கின்றன என்பதே ஜனநாயக பங்கேற்பைத் தடுப்பதற்குப் போதுமானது. போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திப் பழகியவர்களிடையே இதைக் குறித்த எச்சரிக்கைகள் ஏற்கெனவே பரவ ஆரம்பித்துவிட்டன. செல்பேசிகளை வீட்டிலேயே வைத்துவிட்டு வரும்படியும் அல்லது அதன் தொலைபேசித் தொடர்பை துண்டிக்கும்படியும் அல்லது அணைத்து வைக்கும்படியும் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். வெறுப்பை வளர்க்கும் குழுக்கள், காவல் துறை, பத்திரிகைகளிடமிருந்து தங்களது அடையாளத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பாஸிஸத்துக்கு எதிரான பெரும்பாலான போராட்டக்காரர்கள் பேரணிகளின்போது முகத்தை மூடிக்கொள்கிறார்கள்.

“எதிரிகளைத்தான் நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள் என்றே இதற்கு அர்த்தம்... போராட்டங்களின்போது உங்கள் செல்பேசிகளைக் கொண்டுவராதீர்கள் என்றே மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் அல்லது குறைந்தபட்சம் உங்களது செல்பேசியில் இட அமைவு செயலியையாவது அணைத்துவையுங்கள் என்கிறோம். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா இல்லையா என்பதுதான் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் ஆற்றலை அளிக்கிறது” என்று பாஸிஸத்துக்கு எதிரான ஒரு ஆராய்ச்சியாளர் நம்மிடம் சொன்னார். அவரது பெயரை நாம் குறிப்பிட மாட்டோம் என்று உறுதியளித்த பிறகுதான், அவரை மேற்கோள் காட்டவும் ஒப்புதல் அளித்தார்.

எங்கும் கண்காணிப்புக் கருவிகள்

ஹாங்காங்கில் 2014-ல் நடந்த குடை இயக்கத்துக்கு உதவிய ஜோஷ்வா வாங்க், தற்போது அங்கு தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்களிலும் முக்கியப் பங்கு வகித்துவருபவர். “எல்லா இடங்களிலும் கண்காணிப்புக் கருவிகள் நிறைந்திருப்பது, ஹாங்காங்கில் நடந்துவரும் போராட்டங்களின் அடிப்படைகளையே மாற்றிவிட்டது. கடந்த காலங்களில், செயற்பாட்டாளர்களாகவோ அல்லது முன்னணி நபர்களாகவோ இல்லாதவர்கள் கண்காணிப்புகளிலிருந்து பாதுகாப்பாகவே இருந்தார்கள், அவர்கள் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமில்லை. ஆனால், போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கண்காணிப்பு ஒரு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று அவர்கள் தற்போது புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் போராட்டங்களில் முன்னணி வகிப்பவர்கள் இல்லை என்றாலும்கூட அரசு அவர்களையும் சேர்த்தே குறிவைக்கிறது” என்கிறார் அவர்.

பொது இடங்களில் போராட்டங்களை நடத்தியதற்காகத் தரவுகளில் அடையாளம் காணப்படுபவர்கள், தங்களது அசைவுகள் ஒவ்வொன்றும் தரவுகளில் பதிவாவது பற்றி பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அந்தத் தரவுகள் விலைக்கு வாங்கப்படலாம், விற்கப்படலாம், ஒன்றுசேர்க்கப்படலாம், திருடவும்படலாம். செயற்பாட்டாளர்களின் எதிர்காலம் என்பது இனிமேல் பெரிதும் ஹாங்காங்கைப் போலத்தான் அதிகரிக்கும். கடந்த ஆறு மாதங்களாகத் தலைவரே இல்லாமல் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதற்கான சாத்தியத்தைத் தொழில்நுட்பமே அளித்துள்ளது. தந்தியைப் போன்று பகிரப்படும் இணையவழி, தொலைபேசிக் குறுஞ்செய்திகளே இத்தகைய ஒருங்கிணைப்பை எளிதாக்கிப் போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதற்குக் காரணமாயின. ஆனால், அதே தொழில்நுட்பத்தால்தான் போராட்ட இயக்கம் தன்னுடைய வலிமையையும் இழக்க ஆரம்பித்திருக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காவல் துறை உள்ளிட்ட அமைப்புகளும்கூடத் தங்களது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடுகிறார்கள். காவல் துறையின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்திவந்த இட அமைவுச் செயலிகள் ஆப்பிள் செல்பேசிகளினுடைய செயலிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்தத் தரவுகளைப் பயன்படுத்துவதில் அரசுக்குத் தனிச் செல்வாக்கு இருக்கிறது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

சட்டைப் பையில் இருக்கும் ஒற்றர்கள்

ஆர்ப்பாட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபடுகையில், லேசரைக் கொண்டு அரசின் கண்காணிப்பு கேமராக்களைச் செயலிழக்க வைக்கிறார்கள். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதாக அடையாளம் காணுகிற விளக்குக் கம்பங்களைச் சேதப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால், அவர்களது இந்த முயற்சிகள் அனைத்தையும் அவர்களது சட்டைப் பையிலேயே இருக்கும் ஒற்றர்கள் ஒன்றுமில்லாமல் செய்துவிடுகிறார்கள். நம்மைப் போன்று மிச்சமிருப்பவர்களில், செல்பேசிகளில் குறைவான செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே பாதுகாப்பானவர்கள்.
ஹாங்காங் போன்ற இடங்களில் அதிகாரத்துக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பை அமைதியான வகையில் தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான செல்பேசிகள் ஒளிர்கின்றன. எனினும், அந்த ஒளிரும் விளக்குகளை அணைத்துவைக்க வாய்ப்பிருந்தால் மட்டும்தான், உற்சாகமளிக்கும் புகைப்படங்களும் ஜனநாயக மனநிலையும் பிரகாசிக்க முடியும்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’,
சுருக்கமாகத் தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x