Published : 28 Jan 2020 07:50 AM
Last Updated : 28 Jan 2020 07:50 AM

கட்சித் தாவல் தடை: உச்ச நீதிமன்றத்தின் நல்ல யோசனை

உச்ச நீதிமன்றம் ‘கட்சித் தாவல் தடைச் சட்டம்’ தொடர்பாக சமீபத்தில் எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. ஆளுங்கட்சியின் ஆதரவில்தான் சட்டமன்றத் தலைவராக முடிகிறது என்பதால் பெரும்பாலும் அவற்றுக்கு ஆதரவாகவே சட்டமன்றத் தலைவர்கள் முடிவு எடுக்கின்றனர். சில சமயங்களில், முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தும் உத்தியையும் பேரவைத் தலைவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கட்சி தாவும் உறுப்பினர்கள் தொடர்பான முடிவுகளை விரைவாகவும் பாரபட்சமின்றியும் எடுக்க ‘நிரந்தர நடுவர் மன்றங்க'ளை ஏற்படுத்தலாம் அல்லது சரியான மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

கட்சி தாவியோர் மீது நடவடிக்கை எடுக்க மக்களவைத் தலைவர், பேரவைத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் (பத்தாவது அட்டவணை) செல்லும் என்று ‘கிஹோட்டோ ஹொல்லாஹன்’ வழக்கில் 1992-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே 2016-ல் ‘சம்பத்குமார் எதிர் காலா யாதய்யா’ வழக்கில், மிகச் சில வரம்புக்குட்பட்டு, சட்டமன்றத் தலைவரின் முடிவுகள் நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உரியவையே என்கிற நிலை ஏற்பட்டது. சட்டமன்றத் தலைவர் முடிவெடுக்கும் வரை நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்பதும் அப்போது தெளிவாக்கப்பட்டது. ஆனால், கட்சி தாவியவர்கள் மீது சட்டமன்றத் தலைவரிடம் புகார் தெரிவிக்கப்படும்பட்சத்தில் காலவரம்பு நிர்ணயித்து அதற்குள் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடலாமா என்ற கேள்வி உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.

மணிப்பூர் சட்டமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், கட்சி மாறி பாஜகவில் சேர்ந்து இப்போது அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். கட்சி தாவல் தடைச் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் சார்பில் அளிக்கப்பட்ட மனு பேரவைத் தலைவரின் விசாரணையில் இருக்கிறதே தவிர, நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்தே மணி்ப்பூர் காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த முறை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.எஃப்.நாரிமன், இறுதி முடிவெடுக்க மூன்று மாத கால அவகாசம் அளித்திருக்கிறார்.

நாரிமன் தனது உத்தரவில் 2007-ன் ராஜேந்திர சிங் ராணா வழக்கை உதாரணமாகக் காட்டியிருக்கிறார். உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பேரவை உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். அது கட்சித் தாவல் அல்ல, கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு என்று கூறிவிட்டார் பேரவைத் தலைவர். நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டதால் அப்போது நீதிமன்றம் தலையிட வழி ஏற்பட்டது. நடவடிக்கை எடுக்காமலே காலம் தாழ்த்துவது, நீதிமன்றம் இவ்விஷயத்தில் தலையிடுவதற்கான வாய்ப்பையே இல்லாமலாக்குகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் நாரிமன். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், சட்டமன்றத் தலைவரின் அதிகாரத்தை வரையறுக்க வேண்டும் என்ற அவசியத்தையே உச்ச நீதிமன்றத்தின் யோசனை உணர்த்துகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x