Published : 27 Jan 2020 07:57 AM
Last Updated : 27 Jan 2020 07:57 AM

அரசமைப்புச் சட்டம் நமக்குத் தந்துள்ள அடிப்படை உரிமைகள்

தன்னுடைய 71-வது குடியரசு நாளை நேற்றைய தினம் கொண்டாடியது இந்தியா. ஒவ்வொரு இந்தியரும் விழாவைக் கொண்டாடுகையில், ‘நாடு அளிக்கும் அடிப்படை உரிமைகளைப் போற்றுவோம்’ என்று முழங்குவது வழக்கம். நம் அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள சில முக்கியமான உரிமைகள் என்னென்ன தெரியுமா?

அரசமைப்புச் சட்டக் கூறுகள் 14-18: சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உரிமை, சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக யாரையும் பாரபட்சமாக நடத்தக் கூடாது. அதேசமயம், கல்விரீதியாகப் பின்தங்கிய சமூகங்கள், பழங்குடிகள், பட்டியல் இனத்தவர், மகளிர் ஆகியோருக்குச் சிறப்பு ஒதுக்கீடு செய்து அர்த்தமுள்ள வகையில் சமத்துவத்தை ஏற்படுத்தலாம்.

சட்டக் கூறுகள் 19-22: ஒவ்வொரு குடிநபருக்கும் சுதந்திர உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, தனிமனிதச்சுதந்திரத்தை அரசு எந்தக் காரணத்துக் காக மட்டும் கட்டுப்படுத்தலாம் என்பதும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

சட்டக் கூறு 21: வாழ்வுரிமை, சுதந்திர உரிமை ஆகியவை முறையான சட்ட நடைமுறைகள் உதவியுடன் மனித கண்ணியத்தை வலுப்படுத்துவதற்கான பிரிவு. வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், சிறைக்கூடங்களில் மனிதாபிமானத்துடன் நடத்துவது பற்றியது. சொத்துரிமை என்பது 1978-ல் அடிப்படை உரிமைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அந்தரங்க உரிமை சமீபத்தில் நீக்கப்பட்டது. எதேச்சாதிகாரமாகக் கைதுசெய்வதற்கும், காவலில் வைத்திருப்பதற்கும் எதிராகச் சட்டரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சட்டக் கூறுகள் 23-24: சுரண்டலுக்கு எதிரான உரிமைகள் இவற்றில் உள்ளன.

சட்டக் கூறுகள் 25-28: மதச்சார்பற்ற இந்தியா எல்லா மதங்களையும் சமமாக மதிக்கிறது, முழுமையான மதச் சுதந்திரம் உறுதிசெய்யப்படுகிறது. மனசாட்சிப்படி சுதந்திரமாக ஒரு மதத்தைப் பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமை அளிக்கப்படுகிறது. பொது ஒழுங்கமைதி, ஒழுக்கநெறி, நல்வாழ்வு ஆகியவற்றுக்கு ஊறு ஏற்படுத்தாமல் மத விவகாரங்களை நிர்வகிக்கச் சட்டக்கூறு 26 உரிமை வழங்குகிறது. சட்டக் கூறு 28, அரசு நடத்தும் கல்விக்கூடங்களில் மதரீதியிலான கட்டளைகளைச் செயல்படுத்த அனுமதி மறுக்கிறது.

சட்டக் கூறுகள் 29-30: சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்கிறது. தேர்தல் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை யினரின் கருத்தொற்றுமையை அடிப்படையாகக் கொண்டது என்பதால், பாரபட்சமாக நடத்தப்படுவதிலிருந்து சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான உரிமைகளை அரசியல் சட்டம் வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. மத, மொழிச் சிறுபான்மையினர் தங்களுடைய மொழியையும் கலாச்சாரத்தையும் கல்விக்கூடங்களையும் பாதுகாக்க அனுமதிக்கும் இந்தப் பிரிவு அரசால் நியாயமான அளவில் கட்டுப்படுத்தப்படவும் இடம் தருகிறது.

சட்டக் கூறுகள் 32-35: மேலே கூறிய அடிப்படை உரிமைகள் மீறப்படும்பட்சத்தில் பரிகாரம் என்ன என்பதை இந்தப் பிரிவுகள் கூறுகின்றன. அப்படியென்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும், அடிப்படை உரிமைகளை அமல்படுத்துமாறு அது கட்டளையிடவும் வழி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அடிப்படை உரிமைகளைச் செயல்படுத்துவது தொடர்பாகச் சட்டமியற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது என்றாலும் அடிப்படை உரிமைகள் என்று அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ளவற்றை மாற்றும் அல்லது மீறும் அல்லது சேதப்படுத்தும் எந்தச் சட்டத்தையும் நாடாளுமன்றமும் இயற்றிவிட முடியாது. அடிப்படை உரிமைகளுக்குக் கொண்டுவரப்படும் எந்தத் திருத்தத்தையும் பரிசீலித்து ஒப்புதல் வழங்கும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கே உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x