Published : 23 Jan 2020 08:22 am

Updated : 23 Jan 2020 08:22 am

 

Published : 23 Jan 2020 08:22 AM
Last Updated : 23 Jan 2020 08:22 AM

என்ன சொல்கிறார்கள் இளம் வாசகர்கள்?

chennai-book-fair

முகம்மது ரியாஸ்

2020 சென்னைப் புத்தகக்காட்சியில் இளைய தலைமுறையினரின் விருப்பங்கள் என்ன? கல்லூரி, அலுவலக வேலை நாள் என்றபோதும்கூடக் கூட்டம் நிரம்பி வழிந்த ஒரு நாள் அது. இந்த முறை நிறைய இளம் வாசகர்களைக் காண முடிந்தது. குறிப்பாக, பெண்கள். அதில் பலரும் அரசியல் சார்ந்து வாசிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்கள். புத்தகக்காட்சி தமிழகத்தின் முக்கியமான கலாச்சார நிகழ்வாக மாறிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். பலதரப்பிலான வாசகர்கள் சங்கமிக்கும் நிகழ்வு இது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைப் புத்தகக்காட்சி தருகிறது. அந்த அனுபவங்களைத் தெரிந்துகொள்வதன் மூலம் சமகாலப் போக்கு என்னவாக இருக்கிறது என்பதையும் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. வாசகர்கள் சிலரிடம் பேசியதிலிருந்து…

புத்தகங்களின் ஊடே பயணிப்பது புத்தகக்காட்சியில்தான் சாத்தியம்

ஷாலினி: நான் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளர். தற்போது புத்தகங்களை இணையதளங்களில் சலுகை விலையில் வாங்க முடிந்தாலும் நாம் அறிந்த புத்தகங்களை மட்டுமே பெரும்பாலும் இணையதளங்களில் தேடுகிறோம். ஆனால், புத்தகக்காட்சியில் புத்தகங்களின் ஊடே பயணிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதனால், நாம் அறிந்திராத வேறு துறைகளைச் சார்ந்த பல புத்தகங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அதேபோல், சில அரிதான புத்தகங்களைப் புத்தகக்காட்சிகளில்தான் வாங்க முடிகிறது. லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான யோசா அவரது நாவல்களால் அறியப்படுபவர். ஆனால், மிகக் குறைவான அளவில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். நாவல்தான் அவரது அடையாளம் என்பதால் பெரும்பாலும் யாரும் அவரது சிறுகதைகளைக் கண்டுகொள்வதில்லை. இந்தப் புத்தகக்காட்சியில் அவரது சிறுகதைத் தொகுப்பு கண்ணில் பட்டது. இப்படி எதிர்பாராமல் கிடைக்கும் புத்தகங்களே புத்தகக்காட்சியை விஷேசமானதாக ஆக்குகிறது.

எழுத்தாளராவதுதான் என் லட்சியம்

சமிக்‌ஷா: நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறேன். இந்த முறை என் தாத்தாவுடன் வந்திருக்கிறேன். ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து புத்தகக்காட்சிக்கு வருகிறேன். வாசிப்பு எனக்கு அன்றாடச் செயல்பாடு. இப்போது பெண் எழுத்தாளர்களை வாசிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். பிரின்ஸஸ் டையிரின் ஏழாவது புத்தகத்தை ஒவ்வொரு புத்தகக்காட்சியிலும் ஆர்வத்தோடு தேடுவேன். கிடைத்ததே இல்லை. இந்த முறை எதிர்பாராத விதமாகக் கிடைத்தது. புத்தகங்கள் புழங்கும் என்னுடைய வீட்டுச் சூழலே என் வாசிப்புப் பழக்கத்துக்கு அடித்தளமாக அமைந்தது. பள்ளிக்கூடத்தில் என் சக நண்பர்களிடம் வாசிப்புப் பழக்கம் இல்லாதது வருத்தம்தான். எல்லோருக்கும் வாசிப்பதற்கான சூழல் வீடு, பள்ளிகளில் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. எழுத்தாளராவதுதான் என் லட்சியம்.

ஆங்கிலப் புத்தகங்கள் போதாது

சரண் ராஜ்: நான் ஒரு இசை அமைப்பாளர். கடந்த இரண்டு வருடங்களாக புத்தகக்காட்சிக்கு வருகிறேன். சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மேலும் உற்சாகமாக இருக்கிறது. தற்போது அரசியல் சார்ந்த புத்தகங்களை வாசிக்க விரும்புகிறேன். தமிழில் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் புத்தகங்களை அதிகம் வாங்கினேன்.

பார்கவி: நான் நடனக் கலைஞர். அருந்ததி ராய் என் விருப்பத்துக்குரிய எழுத்தாளர். இந்த முறை பெரியார் புத்தகங்கள் வாங்கியுள்ளேன். ஆங்கிலப் புத்தகங்கள் குறைவாக இருப்பது ஒரு குறைதான். இன்னும் அதிக அளவில் முக்கியமான பதிப்பகங்களை அழைத்துவர வேண்டும். வீட்டுக்குத் தெரியாமல் புத்தகக்காட்சிக்கு வந்திருக்கிறேன். அதனால், புகைப்படம் வேண்டாம்.

ஆதஷ்: நான் உதவி இயக்குநராக இருக்கிறேன். டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’ வாங்கினேன். புத்தக்காட்சியில் பல தரப்பிலான புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கிறது என்பதுதான் விஷேசம். இப்போது என் வாசிப்பு தத்துவங்களின் பக்கம் நகர்ந்துள்ளது.

ராதா செந்தில்: எனக்கும் தத்துவ நூல்கள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. அது சார்ந்த புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இரண்டாவது முறையாகப் புத்தகக்காட்சிக்கு வருகிறோம். இந்த வருடம் நல்ல வேட்டை. ரூ.6,000-க்குப் புத்தகங்கள் வாங்கியிருக்கிறோம்.

எப்படி புத்தகங்கள் வாங்குகிறார்கள் என்பதை வேடிக்கை பார்க்கவே வந்தேன்

நிவேதிதா: குழந்தைகளின் கற்றல் முறை தொடர்பான நிறுவனம் ஒன்றை தனி ஒருத்தியாக நடத்திவருகிறேன். இம்முறை நான் புத்தகங்கள் வாங்கும் திட்டம் வைத்திருக்கவில்லை. வாசகர்கள் எந்தப் பதிப்பகங்களுக்குச் செல்கின்றனர், எந்த வகையான புத்தகங்களை வாங்குகின்றனர், புத்தகங்களை அவர்கள் எவ்வாறு தேர்வுசெய்கின்றனர் போன்றவற்றை வெறுமனே அவதானிப்பதுதான் எனது இந்த ஆண்டுத் திட்டம். கிண்டில் யுகத்தில் காகிதப் புத்தகங்களுக்கான தேவை குறையும் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. இன்னும் அதிகமாக வாசிப்புக்குள் வந்திருப்பதைத்தான் பலரும் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றது உணர்த்துகிறது. இவ்வளவு பேர் புத்தகங்கள் வாங்குவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

புத்தகங்களைப் புத்தகக்காட்சியில் வாங்குவதுதான் பிடித்திருக்கிறது

மிருதுளா: எனக்கு ஆங்கில நாவல்கள் மீது விருப்பம் அதிகம். புத்தகங்களை இணையதளத்தில் வாங்குவதைவிடப் புத்தகக்காட்சியில் வாங்குவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது. என் பள்ளியில் செயல்பட்டுவரும் நூலகம் என் தேடலுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. புத்தக வாசிப்பு பிறருடைய மனங்களைப் புரிந்துகொள்ள வழிவகுக்கிறது. அது என்னுடைய தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக உணர்கிறேன். தற்போது பள்ளி பாடச் சுமையால் தினமும் வாசிக்க முடியவில்லை என்றாலும் வார இறுதி நாட்களில் தொடர்ச்சியாக வாசித்துவிடுவேன்.

ஸ்ரீவித்யா: என் பிள்ளைகள் சிறு குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்குப் புத்தகங்கள் வாசித்துக்காட்டுவேன். இப்போது அவர்களாகவே ஆர்வத்தோடு வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தப் புத்தகக்காட்சிக்கு குழந்தைகளுடன் வந்திருக்கிறேன். இது அவர்களுக்கு முதல் புத்தகக்காட்சி. அவர்கள் படு குஷியாக இருக்கிறார்கள்.


Chennai book fairஇளம் வாசகர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author