Published : 23 Jan 2020 08:18 AM
Last Updated : 23 Jan 2020 08:18 AM

360: செயலிகளின் காலம்

செயலிகளின் காலம்

எந்தத் தொழில்நுட்பத்தையும் அள்ளிக்கொள்வதில் இந்தியர்களுக்கு நிகர் இந்தியர்களேதான். 2016-க்கும் 2019-க்கும் இடைப்பட்ட காலத்தில் செல்பேசிச் செயலிகளைத் தரவிறக்குவது 200% அதிகரித்திருக்கிறது. இது உலக அளவில் மிகவும் அதிகம். சந்தை தொடர்பான தரவுகளை அலசும் நிறுவனமான ஆப் ஆனியின் 2020-க்கான அறிக்கை இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது. இந்தியர்கள் தரவிறக்கிய, பயன்படுத்திய செயலிகளில் முதல் இடத்தை ‘அமேஸான்’ பிடித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து ‘ஃப்ளிப்கார்ட்’, ‘பேடிஎம்’, ‘மின்ட்ரா’, ‘க்ளப் ஃபேக்டரி’ ஆகிய செயலிகள் இடம்பிடித்திருக்கின்றன. 2017-ல் ரூ.2.78 லட்சம் கோடிக்கு மின்வர்த்தகம் நடந்திருக்கிறது. இதுவே 2020-ல் ரூ.85.42 லட்சம் கோடிக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்வர்த்தகம் போன்றே தற்போது பொழுதுபோக்கு தொடர்பான செயலிகளும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் செயலிகள் கூடிய விரைவில் தொலைக்காட்சியின் இடத்தைப் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றில் ‘நெட்ஃப்ளிக்ஸ்’, ‘அமேஸான் பிரைம் வீடியோ’ இரண்டும் முதல் இடத்தில் இருக்கின்றன. ‘ஹாட்ஸ்டார்’, ‘ஜியோ டிவி’ ஆகியவையும் போட்டியில் இருக்கின்றன.

தூங்கா நகரம் மும்பை

தமிழகத்தின் தூங்கா நகரமாக மதுரை பெயரெடுத்திருப்பதைப் போல இந்தியாவின் தூங்கா நகரமாக மும்பை பெயரெடுக்கப்போகிறது. ஆம்! ‘மும்பை 24 மணி நேரக் கொள்கை’ என்ற திட்டத்தை மகாராஷ்டிர அமைச்சரவை அங்கீகரித்திருப்பதாக அந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே அறிவித்திருக்கிறார். கடைகள், திரையரங்குகள், உணவகங்கள், வங்கிகள், அலுவலகங்கள் 24 மணி நேரமும் 365 நாட்களும் திறந்திருப்பதற்கு 2016-ல் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவந்தது. மாநிலங்கள் இந்தச் சட்டத்தைத் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப திருத்திய அமைத்துக்கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 2018-ல் மகாராஷ்டிர மாநிலம் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதியை வழங்கியது. எனினும், அது செயல்பாட்டில் வரவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டு தமிழ்நாடும் இதுபோன்ற திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருந்தது. ‘மும்பை 24 மணி நேரக் கொள்கை’யின்படி 24 மணி நேரமும் மால்களும் மல்ட்டிஃப்ளெக்ஸ்களும் கடைகளும் ஜனவரி 27-லிருந்து திறந்திருக்கும். பொழுதுபோக்கின் மாநகரான மும்பைக்கு இனி புதிய முகம் கிடைக்கப்போகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x