Published : 23 Jan 2020 08:03 AM
Last Updated : 23 Jan 2020 08:03 AM

ஆட்சியைப் பதவியிலிருந்து அகற்ற இது ஒன்றே போதும்: ராஜாஜி

சென்னை, பிப்.16

சேலத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகவும் ‘துக்ளக்' பத்திரிகை சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் சி. ராஜகோபாலாச்சாரியார் ‘தி இந்து' நாளிதழுக்குக் கடிதம் எழுதியுள்ளார்:

“சேலத்தில் நடந்த மூர்க்கத்தனமான மதநிந்தனை நிகழ்வுகளைப் பற்றி அறியும்போது இவற்றைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியரையும் காவல்துறை அதிகாரிகளையும் முறைப்படி காரண விளக்கம் கோரும் நோட்டீஸை அளித்து அதற்கு அவர்கள் பதில் தர அவகாசம் தந்து பிறகு அவர்களை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அந்த ஊர்வலத்தின்போது எதிர்தரப்பார் தூண்டப்பட்டு, ஓரிருவர் அந்த இடத்திலேயே கொலை செய்யப்பட்டிருந்தாலும் வியப்பதற்கு ஏதுமில்லை.

பொது அமைதியையும் கண்ணியமான நடத்தையையும் உறுதி செய்யக் கடமைப்பட்ட அதிகாரிகள், செயல்படாமல் வேடிக்கை பார்த்ததை அம்பலப்படுத்திய பத்திரிகை மீதுஅரசு நடவடிக்கை எடுத்திருப்பது, தாங்கள் செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய இடத்தில் செய்யாமல் தலைகீழாகச் செயல்படுவதையே உணர்த்துகிறது. பொது ஊர்வலத்தில் இப்படிப் பலருடைய உணர்வுகளை
முரட்டுத்தனமாகப் புண்படுத்தியவர்கள் மீது இதுவரை அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் செயல்படாதத் தன்மையையும் அரசின் ஒரு சார்பான போக்கையும் அம்பலப்படுத்திய பத்திரிகை மீது நடவடிக்கை எடுத்து
பரபரப்பு காட்டுகிறது அரசு. வரும் மார்ச் மாதத்தில் இந்த ஆட்சியைப் பதவியிலிருந்து அகற்ற, வேறு எந்தக் காரணமும் இல்லாவிட்டாலும் இது ஒன்றே போதும்” என்று குறிப்பிட்டுள்ளார் ராஜாஜி.

விவேகானந்தா, மாநிலக் கல்லூரி‘துக்ளக்’ பத்திரிகை பறிமுதலைக் கண்டித்து சென்னை விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். சேலம் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையரிடம் மனு அளித்த அவர்கள், ‘துக்ளக்’ பத்திரிகைக்கு எதிரான நடவடிக்கையை அரசு உடனே விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களும் வழியில் விவேகானந்தா மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆணையரிடம் மனு அளித்தனர்.

ஈ.வெ.ரா.வின் எல்லா சிலைகளும் மாநிலத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென்று விவேகானந்தா மாணவர்கள் மனுவில் கோரியிருந்தனர். திராவிடர் கழகத்தின் மீது தடை விதிக்க வேண்டும் என்று மாநிலக் கல்லூரி மாணவர்கள் கோரினர். சேலத்தில் திராவிடர் கழகம் நிகழ்த்திய சட்டத்துக்குப் புறம்பான செயல்களை மக்கள் தெரிந்து கொண்டுவிடக்கூடாது என்ற நோக்கத்
தில்தான் ‘துக்ளக்’ பறிமுதல் நடந்திருக்கிறது என்று விவேகானந்தா மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தி.க.வின் பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவே, ‘துக்ளக்’ பறிமுதல் நடந்திருக்கிறது என்றும் அவர்கள் கண்டித்தனர்.
இந்த மனுக்களை அரசிடம் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பேன் என்று காவல்துறை ஆணையர் பி. குப்புசாமி, மாணவர்களிடம் கூறினார். மாணவப் பிரதிநிதிகள் ஆணையருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுடன் வந்த மாணவர்
களில் சிலர், ராமர், முருகர் ஆகிய கடவுளர்களை ஈ.வெ.ரா. அவமதிப்பதைப் போன்ற, அரசால் தடை செய்யப்பட்ட புகைப்படங்களையும் அட்டைகளையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

‘சோ’வைக் கண்டு உற்சாகம்

மாணவர்களுடைய ஊர்வலம் கதீட்ரல்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது வெளிப்புற படப்பிடிப்புக்காக ‘சோ' ராமசாமி சென்றதை மாணவர்கள் கண்டனர். உடனே அவரைச் சூழ்ந்து கொண்டனர். வேன் மீது நின்றபடியே ‘சோ’ ஓரிரு நிமிடங்கள் பேசினார்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்

சேலம் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், அதைத் தடுக்கத் தவறியதற்காக அரசு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாங்கள் அளித்த மனுவில் கோரினர்.
குற்றம் செய்தவர்களைக் கைது செய்யாமல் விட்டுவிட்டு, அச்சம்பவத்தைச் சுட்டும் சுவரொட்டிகளுக்கு தடை விதித்து, பறிமுதல் செய்கிறது அரசு, இது ஒருதலைபட்சமான நடவடிக்கை என்று அவர்கள் தங்களுடைய மனுவில் சுட்டிக்காட்டி கண்டித்தனர்.

‘துக்ளக்’ பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்த மாணவர்கள், இனி எந்தச் சூழலிலும் பத்திரிகைச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட மாட்டாது என்று அரசு நிபந்தனையற்ற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கோரினர்.

சென்னை மகாஜன சபை

சேலம் சம்பவத்தைக் கண்டித்து சென்னை மகாஜன சபை நேற்று தீர்மானம் நிறைவேற்றியது. அநாகரிகமான, காட்டுமிராண்டித்தனமான செயலைத் தடுக்க அரசு தவறிவிட்டது என்று கண்டித்தது சபை. ‘துக்ளக்’ பத்திரிகை மீதான நடவடிக்கை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது, எதேச்சாதிகாரமானது, பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குவது என்றும் தீர்மானம் கண்டித்தது.

புரி ஆச்சார்யர் எச்சரிக்கை

ஜலந்தரிலிருந்து யுஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுவது: சேலத்தில் ராமருக்குச் செய்த அவமதிப்புக்கு திராவிடர் கழகம் மன்னிப்பு கேட்காவிட்டால் தேசிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று புரி சங்கராச்சாரியார் எச்சரித்தார்.‘

தி இந்து’ 17.02.1971)

தகவல் உதவி: ஏ. சங்கரன், கே. பிரபாகரன், இந்து ஆவணக் காப்பகம்.

தொகுப்பு: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x