Published : 23 Jan 2020 07:58 AM
Last Updated : 23 Jan 2020 07:58 AM

சேலம் ஊர்வல சம்பவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை

சென்னை, பிப்: 15

சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் இந்து மதத்துக்கு எதிரான பேச்சுகளுக்காகவும் இந்துக் கடவுளர்களை அவமதிக்கும் வகையில் ஊர்வலம் நடந்ததையும் கண்டித்து சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீனம்பாக்கத்திலிருந்து
நங்கநல்லூருக்கு ஊர்வலம் சென்றனர்.

‘துக்ளக்’ பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்த அவர்கள், பத்திரிகைச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்று
வலியுறுத்தினர். இந்துமதக் கடவுளர்களை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

உதகமண்டலத்தில் ஊர்வலம்

உதகமண்டலத்தில் சுமார் 1,500 மாணவர்கள் சேலம் சம்பவத்தைக் கண்டித்து உதகை தாவரவியல் பூங்காவிலிருந்து ரயில் நிலையத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர். தி.க., திமுக, ஈ.வெ.ரா. ஆகியோருக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டுச் சென்றனர். போஸ் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பலர் பேசினர்.

திருச்சி

‘துக்ளக்’ பத்திரிகையை காவல்துறை பறிமுதல் செய்ததைக் கண்டித்து திருச்சி கல்லூரி மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக மாலையில் கண்டன ஊர்வலம் நடத்தினர்.

தஞ்சாவூர்

பூண்டி புஷ்பம் கல்லூரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தஞ்சாவூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.

வேலூர்

சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ஆபாசமான காட்சிகளைக் கொண்ட ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். ‘துக்ளக்’ பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்டதற்காகவும் சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காகவும் அரசை அவர்கள் கண்டித்தனர்.

தொடர் உண்ணாவிரதம்

கோயமுத்தூரில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் தொடர் உண்ணாவிரதக் கிளர்ச்சியைத் தொடங்கினர். சேலத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்தி, அதில் தொடர்புள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று கோரினர்.

(‘தி இந்து’ 16.02.1971)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x