Published : 22 Jan 2020 07:31 AM
Last Updated : 22 Jan 2020 07:31 AM

யார்? என்ன? எப்படி?- மத்திய சட்டம் செல்லாது என்று மாநில அரசு வழக்கு தொடுக்கலாமா?

கே. வேங்கடரமணன்

அரசமைப்புச் சட்டக் கூறு 131-ன்படி மாநில அரசுகள் வழக்கு தொடருவது சரிதானா? நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை ‘மத்திய அரசுடனான தகராறு’ என்று மாநில அரசுகள் சொல்லலாமா?

இதுவரை ‘குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019’-க்கு (சிஏஏ) எதிராக தேசிய அளவில் எதிர்ப்புகள் தொடர்கின்றன. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்) புதிதாகத் தயாரிப்பதற்கும், இந்தியக் குடிமக்களின் பெயர்கள் அடங்கிய தேசிய பதிவேடு உருவாக்கப்படுவதற்கும் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ‘குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சட்ட விரோதம் என்று அறிவிக்கப்பட வேண்டும்’ என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. ‘தேசியப் புலனாய்வு முகமை’ச் சட்டத்துக்கு (என்ஐஏ) அரசமைப்புச் சட்டபூர்வ அங்கீகாரம் இல்லை என்று கூறி, சத்தீஸ்கர் அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. இரு வழக்குகளுமே அரசமைப்புச் சட்டத்தின் 131-வது கூறின்படியே தொடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில மாநிலங்களும் கோதாவில் இறங்கலாம் என்று தெரிகிறது. என்னவாகும்? பார்ப்போம்!

அரசமைப்புச் சட்டக்கூறு 131 என்ன சொல்கிறது? அது ஏன் அவசியமாகிறது?

இரு மாநிலங்களுக்கு இடையிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலும், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கு இடையிலும் தகராறுகள் ஏற்படும்போது, அவற்றில் தலையிட்டுத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றத்துக்கு மட்டும் வழங்குகிறது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 131-வது கூறு. மாநில அரசுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கும், மத்திய அரசுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கும் இருப்பது நமக்குத் தெரிந்ததே. மத்திய, மாநில அரசுகள் இடும் நிர்வாக உத்தரவுகள் அல்லது இயற்றும் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க அரசமைப்புச் சட்டம் இடம் தந்துள்ளது. உயர் நீதிமன்றங்களில் இத்தகைய ‘ரிட்’ மனு தாக்கல்செய்ய அரசமைப்புச் சட்டத்தின் 226-வது கூறும், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர அரசமைப்புச் சட்டத்தின் 32-வது கூறும் வகை செய்கின்றன.

தன்னுடைய சட்ட உரிமைகளை இன்னொரு மாநிலம் அல்லது மத்திய அரசு மீறிவிட்டது என்று ஒரு மாநிலம் கருதினால் என்ன நடக்கிறது? தனிமனிதர்களைப் போல, தங்களுடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுவிட்டன என்று மாநில அரசுகள் புகார் தெரிவிக்க முடியாது. எனவே, அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அந்தத் தகராறைத் தீர்த்துக்கொள்ளவும், சட்டப்படியாக தனக்குள்ள உரிமைகளை நிலைநாட்டவும், அதை உச்ச நீதிமன்றத்திடம் வழக்காகக் கொண்டுசெல்ல அரசமைப்புச் சட்டம் இடம்தருகிறது. நதிநீர்ப் பகிர்வு தொடர்பாகவோ, நில எல்லை தொடர்பாகவோ மாநிலங்கள் தங்களுடைய பக்கத்து மாநிலங்களுக்கு எதிராக இப்படிச் சில வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளன. சில வழக்குகள் மத்திய அரசுக்கு எதிராகவே தொடரப்பட்டுள்ளன.

கேரள அரசு தனது வழக்கு மனுவில் கோருவது என்ன?

குடியுரிமைத் திருத்தச் சட்டமானது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும் என்று கோருகிறது கேரள அரசின் மனு. மதச்சார்பின்மை என்பது நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சம், அடிப்படை அம்சத்தைப் புறக்கணிக்கும் அல்லது மீறும் எந்தச் சட்டமும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பது கேரளத்தின் நிலைப்பாடு.

சத்தீஸ்கர் அரசு தனது வழக்கு மனுவில் கோருவது என்ன?

தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டம் 2008 அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது; ஏனென்றால், அது நாடாளுமன்றத்தின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல் என்று சத்தீஸ்கர் அரசு மனுவில் கூறியிருக்கிறது. சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலங்களின் அதிகாரங்களுக்கு மட்டுமே உட்பட்ட விஷயம். இந்நிலையில், என்ஐஏ என்ற முகமை மாநிலக் காவல் துறையையும் மீறிச் செயல்படும் அதிகாரம் உள்ளதாகச் செயல்படுகிறது. மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற்ற பிறகே என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரிவு ஏதும் அச்சட்டத்தில் இல்லை. மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே சட்டமியற்றும் அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பான ஏற்பாட்டுக்கு எதிராக இது இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சித் தத்துவத்தின் உணர்வுக்கு எதிராக இருக்கிறது என்ஐஏ சட்டம் என்பதுதான் சத்தீஸ்கர் அரசின் மனுவில் உள்ள சாரம்.

இனி என்ன நடக்கும்?

இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்கெனவே பரிந்துரைத்திருப்பதால், மத்திய சட்டத்தை எதிர்க்கும் இந்த வழக்குகள் விசாரணைக்கு ஏற்றவைதானா என்பதை ஆராய அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைக்க நேரிடலாம். இந்த வழக்குகள் செல்லத்தக்கவை என்று அந்த அமர்வு கருதினால், அந்த வழக்கை அந்தப் பெரிய அமர்வே தொடர்ந்து விசாரிக்கும்.

© ‘தி இந்து’ ஆங்கிலம், சுருக்கமாக தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x