Published : 22 Jan 2020 06:52 AM
Last Updated : 22 Jan 2020 06:52 AM

ஜே.பி.நட்டா: மூன்றாவது சக்தி?

ஆச்சார்யா

நாட்டையும் நாட்டின் சர்வ வல்லமை கொண்ட ஆளுங்கட்சியையும் தன்னுடைய கையில் வைத்திருக்கும் வகையிலேயே பிரதமர் நரேந்திர மோடி தனது வலது கரமான அமித் ஷாவை பாஜகவின் தலைவர் பதவி நோக்கி நகர்த்தினார். மோடி – ஷா கூட்டணி இந்திய அரசின் அமைப்பில் மட்டும் இன்றி, கட்சியின் அமைப்பிலும் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்று அப்போது ஆரூடம் சொன்ன பலரும், இந்த இருவர் கூட்டணியை ஒட்டி மூன்றாவதாக ஒருவர் அவ்வளவு எளிதாகத் தலையெடுத்துவிட முடியாது என்றும் கூறினர். ஆனால், மூன்றாவதாக ஒருவர் உருவாக்கப்பட்டிருக்கிறார்; ஷாவின் விருப்பத்தைக் கடந்த மோடியின் விருப்பம் என்பது ஜே.பி.நட்டாவின் தேர்வுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருகிறது.

யார் இந்த நட்டா?

பாஜகவின் தேசியத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெகத் பிரகாஷ் நட்டாவின் இன்றைய முதல் அடையாளம் என்றால், அவர் பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவர் என்பதேயாகும். எங்கிருந்து வந்தார் என்ற கதை கொஞ்சம் நீளமானது.

இமாச்சல பிரதேசம்தான் நட்டாவின் பூர்வீகம் என்றாலும், பிஹார்தான் அவர் வளர்ந்த நிலம். பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் பாட்னா பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தவர். கல்லூரி நாட்களில்தான் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். நட்டாவின் தந்தை நரைன் லால் நட்டா பாட்னா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். அவர் ஓய்வுபெற்று, சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்துக்குத் திரும்பிய பின், பிஹாரிலிருந்து நட்டாவின் அரசியல் கவனம் இமாச்சல பிரதேசத்துக்கு மாறின. சிம்லாவில் உள்ள இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றபோது, அங்கு மாணவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் நட்டா.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் கிளையான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தில் நட்டா முன்னெடுத்த உத்வேகமான செயல்பாடுகளே அவருக்கான தேசிய அரசியல் நுழைவுச் சீட்டானது. 1986-1989 காலகட்டத்தில் அந்த அமைப்பின் தேசியப் பொதுச் செயலராக இருந்த காலகட்டத்தில், ராஜீவ் காந்தி அரசு மீது ஃபோபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டை முன்னிறுத்தி நட்டா முன்னெடுத்த போராட்டங்கள் கோவிந்தாச்சார்யா, வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் உறவை அவருக்குப் பெற்றுத் தந்தன.

மோடியும் நட்டாவும்

மேலிடத் தலைவர்களின் அறிமுகம் இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை நட்டாவுக்குப் பெற்றுத்தந்ததோடு, விரைவில் மாநிலத்தின் முக்கிய முகங்களில் ஒன்றாகவும் அவரை ஆக்கியது. 1993-ல் முதல் தடவையாக இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2012 வரையில் அவர் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அவர், இரண்டு முறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். 1990-களில் இமாச்சல பிரதேச மாநில பாஜகவின் மேலிடப் பொறுப்பாளராக மோடி பணியாற்றுகையில், நட்டாவுக்கும் அவருக்கும் இடையே வலுவான நட்பு உருவானது.

2010-ல் பாஜகவின் தேசியத் தலைவராக நிதின் கட்கரி தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நட்டா தேசியப் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டார். தொடர்ந்து 2012-ல் நட்டாவை மாநிலங்களவைக்கும் அனுப்பிவைத்தார் கட்கரி. மோடியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் அவருடைய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இடம்பெற்றிருந்தார் நட்டா. அவர் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்தபோதுதான் ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில், ஏழை மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. விரைவிலேயே மீண்டும் கட்சிப் பணி என்று உத்தர பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டபோது உற்சாகமாகச் சென்றார் நட்டா.

உத்தர பிரதேசத்தில் 2019 மக்களவைத் தேர்தல் பணிகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நட்டா, அதை வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டினார். மோடி, ஷா இருவரின் நம்பிக்கையைப் பெறவும் அது காரணமாயிற்று. அந்த நம்பிக்கையே 2019 ஜூன் மாதத்தில் பாஜகவின் முதல் செயல் தலைவராக நட்டா நியமிக்கப்படுவதற்கும் காரணமாயிற்று. ஷாவின் பதவிக்காலம் 2020 ஜனவரியில் முடிவடைவதையொட்டி, தற்போது தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார் நட்டா.

மூன்று செய்திகள், இரண்டு கணக்குகள்

நட்டாவின் தேர்வின் வழி மூன்று முக்கியச் செய்திகளை மோடி வெளிப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. ஷாவைத் தாண்டியும் மோடி தன்னுடைய அதிகார எல்லையை விஸ்தரிக்கிறார் என்பது முதல் செய்தி. அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர் கட்சிக்கு உழைத்திருந்தால் எந்த நிலையிலிருந்தும் மேல் நோக்கி வரலாம் என்பது இரண்டாவது செய்தி. கட்சியின் தலைவர் பதவியில் எவர் இருந்தாலும், மோடியின் கைகளிலேயே கட்சி இருக்கும் என்பது மூன்றாவது செய்தி. இந்தச் செய்திகளை எல்லாம் தன்னுடைய சொந்தக் கட்சியினருக்கு மட்டும் அல்ல; காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கும் சேர்த்துதான் சொல்கிறார் மோடி என்கிறார்கள். தேர்தல் தோல்விக்குப் பின் ஏழு மாதங்கள் ஆகும் நிலையிலும், இன்னும் தலைமைப் பொறுப்புக்கு உறுதியான முடிவை எடுக்க முடியாமல் திணறும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை நட்டாவின் தேர்வு ரொம்பவே அவஸ்தைக்கு உள்ளாக்கும்.

இந்தச் செய்திகளைத் தாண்டி இரண்டு கணக்குகளும் சொல்லப்படுகின்றன.

பாஜகவில் முடிவெடுக்கும் இடத்திலிருந்து பிராமண சமூகத் தலைவர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பது மோடி – ஷா பொறுப்பெடுத்தது முதலாகக் கட்சிக்குள் புகைந்துவரும் விஷயம். நட்டாவின் தேர்வு வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, நிதின் கட்கரி வரிசையில் அவரை அமர்த்தியிருக்கிறது. பிராமண சமூகத்தைச் சேர்ந்த நிதின் கட்கரி ஓரங்கட்டப்பட்டதற்கு ஈடு இது என்ற கணக்கு முதலாவதாகும்.

நட்டா யார் மீதும் வெறுப்பு காட்டுபவரோ, யாரையும் அலட்சியப்படுத்துபவரோ அல்ல. அவரிடம் யார் என்ன சொன்னாலும் காது கொடுத்துக் கேட்பது அவரது வழக்கம்; கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கும் திறன்களில் வல்லவர். இவையே அவரது பலம். அடுத்து, பலவீனம் என்னவென்றால், அவருக்கு என்று பெரிய, தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது. பல மாநிலங்களில் கீழ்மட்டத் தொண்டர்களுக்கு அவருடைய முகமே தெரியாது. மேலும், ராஜ்நாத் சிங் போல சூட்சுமங்கள் தெரிந்தவரோ நிதின் கட்கரி, வெங்கய்யா நாயுடு போல உறுதியானவரோ அல்ல. ஆகையால், எப்படி மாநிலங்களில் தனிப்பட்ட செல்வாக்கற்ற தலைவர்களைக் கொண்டுவந்திருக்கிறார்களோ அப்படியே தங்கள் கைக்கு அடக்கமான ஒருவரைத் தேசியத் தலைவராகவும் கொண்டுவந்திருக்கிறார்கள் என்ற கணக்கு அடுத்ததாகும்.

காத்திருக்கும் சவால்கள்

எப்படியும் மோடி - ஷா கூட்டணியில் அவர்களது நம்பிக்கைக்குரிய மூன்றாவது நபராக நட்டாவும் இணைந்திருக்கிறார்; மோடி – ஷா கூட்டணியின் அறிவுறுத்தலின்படியே அவரும் நடப்பார். அடுத்து வரவிருக்கும் டெல்லி, பிஹார் சட்டமன்றத் தேர்தல்கள்தான் நட்டாவுக்கு முன்னுள்ள உடனடி சவால். பாஜக ஆட்சியில் இல்லாத வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும்கூட பாஜகவை வளர்த்தெடுப்பது நட்டாவின் காலகட்டத்தில் முக்கியப் பணியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பாஜகவைத் தாண்டி ஏனைய கட்சிகளுக்கு நட்டாவின் தேர்விலுள்ள முக்கியமான செய்தி என்னவென்றால், மாணவப் பருவத்திலிருந்து கட்சியில் உழைத்த ஒருவரையே மீண்டும் அது தேசிய அரசியலின் மையத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது என்பதாகும். குடும்பங்களிலிருந்து அல்ல; கட்சியின் கொள்கைகளிலிருந்தே தலைவர்கள் உருவாக வேண்டும். பாஜக கடைப்பிடிக்கும் ‘ஒரு நபருக்கு ஒரு பதவி’ என்ற அணுகுமுறையும் ஏனைய கட்சிகள் யாவும் பின்பற்றத்தக்க உதாரணம். இன்னொரு பாடமாக மாநிலங்களிலிருந்து அது தேசியத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முன்னெடுப்பையும் கொள்ளலாம். காங்கிரஸ் நிறையவே பாஜகவைப் பார்த்து இன்று கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x