Published : 03 Aug 2015 08:54 AM
Last Updated : 03 Aug 2015 08:54 AM

ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது!

நரேந்திர மோடி பிரதமரானது முதல் உருமாற்றத்துக்குள்ளாகும் அமைப்புகளின் வரிசையில், இப்போது ரிசர்வ் வங்கி இலக்காகியிருக்கிறது. அரசின் பணக் கொள்கையை நிர்வகிப் பதில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க விரும்புகிறது மோடி அரசு. ‘இந்திய நிதித் துறை நடத்தை நெறிகள்’ (ஐ.எஃப்.சி.) என்ற புதிய வழிமுறைகளை மத்திய நிதியமைச்சகம் திருத்தி வெளியிட்டிருக்கிறது. பணக் கொள்கையைப் பற்றி விவாதிக்கவும் வட்டி வீதத்தை நிர்ணயிக்கவும் ‘பணக் கொள்கைக் குழு’ என்ற ஒன்றை நியமிக்க இது வழிசெய்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி இந்த விஷயத்தில் இதுவரை ‘தொழில் நுட்ப ஆலோசனைக் குழு’வின் கருத்துகளைக் கேட்டுச் செயல்பட்டு வருகிறது. ஆலோசனைகள் எங்கிருந்து வந்தாலும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கியின் ஆளுநரிடமே இருக்கிறது. அதாவது, தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் ஆலோசனைகளை அவர் முற்றாக நிராகரிக்கவும் முடியும். ஆனால், அரசு அமைக்கவிருக்கும் புதிய குழுவிலோ ரிசர்வ் வங்கி ஆளுநரின் அதிகாரம் கேள்விக்குள்ளாகிறது.

முன்னதாக, இந்திய நிதித் துறையில் செய்யக்கூடிய மாற்றங்கள் குறித்துப் பரிசீலிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.  கிருஷ்ணா தலைமையில் நியமிக்கப்பட்ட ‘நிதித் துறை சட்டச் சீர்திருத்த ஆணையம்’ சில ஆலோசனைகளை அரசிடம் அளித்திருந்தது. அதுவும்கூட, ‘அரசும் ரிசர்வ் வங்கியும் தீர ஆலோசனை கலந்த பிறகே நிதிக் கொள்கைக் குழுவுக்கு ஏழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். அரசுத் தரப்பில் மூன்று உறுப்பினர்களை நியமிக்கலாம். எனினும், குழுவின் பரிந்துரைகளை ஏற்காமல் ரத்துசெய்யும் (வீட்டோ) அதிகாரம் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு வழங்கப்பட வேண்டும்’ என்றே தெரிவித்திருந்தது. ஆனால், இப்போது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டிருக்கும் அரசின் வரைவு அறிக்கையோ, ‘அரசுத் தரப்பில் நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும்’ என்று கூறுகிறது. அதாவது, குழுவின் பெரும்பான்மை அரசு நியமிக்கும் உறுப்பினர்களிடம் இருக்கும் (4/7). மேலும், ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ரத்து அதிகாரமும் கிடையாது.

அரசின் இந்த முயற்சி, ரிசர்வ் வங்கி ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் முயற்சி என்பது அப்பட்டமானது. இப்போது நிதியமைச்சகத்துக்கும் பணக் கொள்கையை நிர்வகிக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உறவு சுமுகமாக இல்லை. வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும் என்கிறது அரசு. அப்படிக் குறைத்தால் நிதி நிர்வாகம் சீர்கெட்டுவிடும் என்கிறது ரிசர்வ் வங்கி. பணக் கொள்கையில் அரசுக்கு முக்கியப் பங்கு இருக்கக் கூடாதா என்று கேட்கப்படுகிறது. அந்தக் கேள்வி சரியானதல்ல. மத்தியில் ஆட்சிகள், அவற்றின் கொள்கைகள் எப்படி மாறினாலும் நாட்டின் நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி சீராகவே பராமரித்துவருகிறது. அரசுகள் அரசியல் நோக்கில் வட்டிக் குறைப்பு, வட்டி மானிய அதிகரிப்பு, கடன் தள்ளுபடி என்று பலவற்றைத் தீர்மானிக்கும். அதனால் நாட்டின் நிதி நிலைமை மோசமானால் அதைச் சரிசெய்யும் பொறுப்பு ரிசர்வ் வங்கியுடையது என்று நழுவிவிடும். இறுதிப் பொறுப்பு யாருடையது?

நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் ரிசர்வ் வங்கி. அதன் ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம்தான், அரசின் முக்கிய பொருளாதார முடிவுகளில் அவரும் பங்கெடுப்பதை உறுதிசெய்கிறது. அவருடைய அதிகாரத்தையும் மாண்பையும் குறைப்பது அரசு தனக்குத்தானே எதிர்காலத்தில் ஆபத்தை உருவாக்கிக்கொள்வதாக அமையக் கூடும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x