Published : 20 Jan 2020 09:33 AM
Last Updated : 20 Jan 2020 09:33 AM

அமெரிக்கா – சீனா வர்த்தக உறவு மேம்பாடு மேலும் விரிவடையட்டும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - சீனத் துணை அதிபர் லியு ஹி இடையில் வணிகம் தொடர்பாகக் கடந்த வாரம் கையெழுத்தான ஒப்பந்தம் ஒரு தற்காலிக சமரசமே என்றாலும், நல்ல தொடக்கம். இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக உறவில் பூசல் ஏற்பட்ட 2017-க்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா கடுமையாக அபராத வரிகளை விதித்தது. அவற்றில் முக்கால் பங்கு இன்னமும் தொடர்கிறது. வர்த்தகப் பேச்சுகளைத் தொடங்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்கவும் இந்த ஒப்பந்தம் உண்டாக்கியிருக்கும் பேச்சுச் சூழல் உதவும் என்று நம்பலாம்.

புதிய ஒப்பந்தப்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களையும் சேவைகளையும் அமெரிக்காவிடமிருந்து சீனா வாங்கியாக வேண்டும். இரு நாடுகளின் வர்த்தகத்தில் இவ்வளவு பெருந்தொகைக்கு சீனா கொள்முதல் செய்ய வேண்டிய நிலை வந்ததில்லை. எனவே, சீனாவுக்கு விற்கும் பிற நாடுகளை இந்த உடன்பாடு எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று பார்க்க வேண்டும். அமெரிக்காவிலிருந்து சோயா மொச்சையை இறக்குமதி செய்யத் தடை விதிக்கும் வகையில் காப்பு வரியை அதிகப்படுத்தியிருந்தது சீனா. இனி என்ன நடக்கும் என்று பார்க்க வேண்டும். பால் பொருட்கள், கால்நடைகள், மீன் மற்றும் கடல்சார் உணவுகள் ஆகியவற்றை அதிகம் வாங்கிக்கொள்வதாக சீன அரசு உறுதியளித்திருக்கிறது. அமெரிக்காவின் வங்கிகள், காப்பீடு, நிதி சேவைகளுக்கு விதித்த தடைகளை விலக்குவதாகவும் சீனா உறுதி அளித்திருக்கிறது. ஆனால், அறிவுசார் சொத்துரிமைகளை சீனா மீறுவது குறித்தும், தொழில்நுட்பங்களைக் கட்டாயப்படுத்தி சீனாவுக்கு மாற்றுவது குறித்தும் அமெரிக்கா தொடர்ந்து கவனித்துவரும். வர்த்தகப் பூசலில் முக்கிய இடம்பிடித்தவை இந்த இரு அம்சங்கள்தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவிருக்கிறது. அதற்கும் முன் பொருளாதார வளர்ச்சியைச் சீரமைக்க ட்ரம்ப்புக்கு இந்த உடன்பாட்டுக்குப் பிறகு கிடைக்கும் லாபம் உதவும். அது அவருக்குத் தேர்தலில் பெரும் உத்வேகத்தையும் தரலாம். இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது கட்டம் உடனடியாகத் தொடங்கும் என்றும், அதற்காகத் தானேகூட பெய்ஜிங் செல்லக்கூடும் என்றும் கூறியிருக்கிறார் ட்ரம்ப். ஒபாமா காலத்தில் கையாளப்பட்ட வணிக உடன்பாட்டு நடைமுறைகளை இனி அமெரிக்கா கடைப்பிடிக்கக்கூடும் என்று தெரிகிறது.

பொருளாதாரத்தில் உலகின் இரு பெரும் சக்திகளான அமெரிக்கா – சீனா இரு நாடுகளுக்கும் இடையில் வணிக உறவு மோசமானது, பல நாடுகளின் பொருளாதாரத்தைச் சேதத்துக்கு உள்ளாக்கியதுடன் உலகப் பொருளாதாரத்தையே மந்தச் சூழலை நோக்கியும் தள்ளியது. இந்த உறவு சுமுகநிலைக்குத் திரும்புவது நிச்சயமற்றதன்மை நீங்க உதவுவதுடன் உலக நாடுகள் வளம் காணவும் வழிவகுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x