Published : 19 Jan 2020 10:25 AM
Last Updated : 19 Jan 2020 10:25 AM

நான் உருவாக்கிய வாசிப்புப் படை!

சுடர்விழி

எந்த ஒரு பண்டிகைத் திருநாளும் தந்துவிடாத பெரும் உற்சாகத்தை ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழா தந்துவிடுகிறது. என் தந்தையிடமிருந்து தொற்றிக்கொண்ட வாசிப்புப் பழக்கம் இன்று எட்டாயிரத்துக்கும் அதிகமான நூல்களைக் கொண்ட ஒரு நூலகத்தை வீட்டிலேயே உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது; நூல்களை வாங்குவதற்கும் வாசிப்பதற்குமான மனநிலையை வளர்த்தெடுத்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் குடும்ப வரவு-செலவுத் திட்டத்தில் நூல்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிச் சேமிப்பில் வைப்பதும் புத்தகத் திருவிழாவின்போது அப்பெருந்தொகையைச் செலவிடுவதும் வழக்கமாகிவிட்டது. இப்படி வாங்குவதைப் பெருமையாக அல்ல; ஒரு ஆசிரியர் என்கிற முறையில் என் கடமையாகவே கருதுகிறேன்.

கல்லூரியில் ஆசிரியர் பணியாற்றும் என்னைப் போன்றோருக்கு இருக்கும் சவால் என்னவென்றால், கல்விப்புலம் சார்ந்த கட்டாய வாசிப்புகளுக்கு நேரம் ஒதுக்கிய பின்னரே, பிற நூல்களின் பக்கம் திரும்ப இயலும். அப்படியென்றால், வாங்கிக் குவித்திருக்கும் நூல்களை எப்போது வாசித்து முடிப்பது? நாமே வாசிக்காதபோது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி எப்படி வாசிப்பைத் தூண்டுவது? மனதைத் துளைக்கும் இக்கேள்விகள் காரணமாகத்தான் கல்விப்புலம் சாராத நவீன இலக்கிய வாசிப்பையே கட்டாய வாசிப்பாகவும், தினசரிச் செயல்பாடாகவும் வரித்துக்கொண்டேன். தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை வாசிப்புக்கு ஒதுக்குவேன். நள்ளிரவு நேரம் கடந்தும் நீளும் இந்த வாசிப்பின் மூலமே ஒவ்வொரு நாளும் என்னைப் புதுப்பித்துக்கொள்கிறேன். ஒருசில நூல்களைப் பாதியில் நிறுத்த மனமில்லாமல் முழு இரவும் வாசித்துவிட்டு அடுத்த நாள் பணிக்குப் போனது, விடுப்பு எடுத்துக்கொண்டு முழு நாளும் வாசித்தது, பயணங்களின்போதெல்லாம் நூல்களை உடன் எடுத்துச் செல்வது என்று வாசிப்பு என்னைக் ஆட்கொள்ளும் விதங்கள் பல.

கல்விப்புல வாசிப்பும் நவீன இலக்கிய வாசிப்பும் வேறுவேறாக இருந்தபோதும் பாடத்துடன் தொடர்புபடுத்தி நவீன இலக்கியங்களை எப்படியாவது மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதை ஒரு முறையாகவே கொண்டு இருக்கிறேன். உதாரணமாக, ஆற்றுப்படை இலக்கியங் களை நடத்தும்போது ‘நிலம் பூத்து மலர்ந்த நாளையும்’, பாரதிதாசனின் புரட்சிக்கவி நடத்தும்போது ‘தமிழில் பில்கணீயம்’ நூலையும், மணிமேகலை வகுப்பின்போது ‘உ.வே.சா. கடிதக் கருவூலத்தையும்’, தமிழக வரலாற்றுடன் ‘சுளுந்தீ’யையும், சுற்றுச்சூழல் கல்வி வகுப்பில் ‘பூவுலகின் நண்பர்கள்’ நூல்களையும் அறிமுகப்படுத்துவேன்.

நான் எந்த நூலை வாசிக்க எடுக்கிறேனோ அதையே வாட்ஸ்அப்பின் காட்சிப்படமாக வைத்து ‘தற்போது வாசிக்கும் நூல்’ என்று பதிவிடுவேன். மாணவர்களும் நண்பர்கள் பலரும் படத்தைப் பார்த்துவிட்டு அந்நூலைப் பற்றி விசாரிப்பார்கள். நூலை அறிமுகப்படுத்தி சிறுகுறிப்பு எழுதுவேன். விருப்பமுள்ள மாணவர்கள் வாங்கி வாசித்துவிட்டு, உரையாடலைத் தொடங்குவார்கள். சாதாரணமாகத் தொடங்கிய இச்சிறு முயற்சியின் பயன்விளைவுகள் நான் எதிர்பார்த்ததைவிட அதிகம். சில மாணவர்களும் பிற துறையைச் சேர்ந்த பேராசிரியர்களும் ஒரு ஆண்டின் அனைத்துக் காட்சிப்படங்களையும் சேமித்து வைத்துக்கொண்டு புத்தகக்காட்சியின்போது தேடித்தேடி வாங்குவதைப் பார்த்திருக்கிறேன்.

என் வாசிப்பு பல பரிமாணங்கள் கொண்டது. ஒரு குறிப்பிட்ட எழுத்தாளர், பதிப்பகம், அல்லது இலக்கியக் குழுக்கள் என்று எந்தச் சார்பையும் வாசிப்பில் வைத்துக்கொள்வதில்லை. மாணவர்களுக்கும் அப்படித் திணிப்பதில்லை. நூல்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி உரையாடலைத் தொடங்கி வைப்பதுடன் என் பணி முடிவதாகவே கருதுகிறேன். அவரவர் விருப்பமும் தேவையும் சார்ந்து நூல்களை வாசிக்கத் தொடங்குகிறார்கள். தொடர்ந்து அவர்கள் யாரை வாசிக்க வேண்டும் என்பதை எழுத்தாளரின் எழுத்துதான் முடிவுசெய்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x