Published : 15 Jan 2020 08:18 AM
Last Updated : 15 Jan 2020 08:18 AM

மதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு!- ந.ஜயபாஸ்கரன் பேட்டி 

தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலக் கவிதைகளில் தேர்ந்த பரிச்சயம் கொண்ட ந.ஜயபாஸ்கரன், ‘அர்த்தநாரி’ கவிதைத் தொகுதி வழியாக தமிழ்க் கவிதை வாசகர்களுக்கு அறிமுகமானவர். மதுரையும் இவர் நடத்தும் வெண்கலப் பாத்திரக் கடையும்தான் ஜயபாஸ்கரன் கவிதைகளின் சிற்றண்டம். தமிழ் இலக்கிய, புராணங்களின் தொடர்ச்சியைத் தனது கவிதைகளில் கொண்ட ஜயபாஸ்கரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்கள் இவை…

அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கன்சனின் அறிமுகம், கவிதையுடனான அறிமுகம் இரண்டும் உங்களுக்கு ஒரே சந்தர்ப்பத்தில் ஏற்படுகிறதல்லவா?

பேராசிரியரும் அறிஞருமான எஸ்.ஆர்.கே. எனப்படும் எஸ்.ராமகிருஷ்ணன், அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கன்சனை, எங்களைப் போன்ற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திய நாளின் இரவு இன்னும் நினைவில் உறைந்திருக்கிறது. 1978 மார்ச் 12 அது. 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திகட்டலும் சலிப்பும் தொடாததாக அந்தக் கவிஞருடைய படைப்புகளுடனான உறவு தொடர்கிறது. ஒன்றைத் தேர்ந்த பின் கதவை அடைத்துவிடுகிற மன உறுதி, பிறர் பாராட்டு என்பது உயிர்வாழத் தேவையற்ற நறுமணப் புகை என்ற தீர்மானம், தன் பாதையில் கடைசிப் புள்ளி வரை பயணிக்கிற பிடிவாதம் இப்படிப் பல விஷயங்களின் கலவையாக எமிலியின் உருவம் என் மனத்தில் பதிந்திருக்கிறது. பிடிவாதமாக நான் அடைகாத்த தனிமை என்னை எமிலிக்கு அருகில் இழுத்துக்கொண்டுபோய்ச் சேர்த்திருக்கக்கூடும். சுயத்தின் தொடர் பயணத்தில் எமிலியின் பங்கு மறுக்க முடியாதது.

மதுரை என்ற இடம்தான் உங்கள் கவிதையின் தீராத உள்ளடக்கம். அதுபற்றிச் சொல்லுங்கள்?

தேய்வழக்காகிவிட்ட ‘யாதும் ஊரே’ என்ற தொடரைத் தலைகீழாக ‘ஊரே யாதும்’ என்று நான் வாசித்துக்கொள்கிறேன். பிறந்து, வளர்ந்து, படித்து, வியாபாரம் செய்துவருகிற மதுரையே உலகமாகிவிட்டது. தமிழ்ப் பண்பாட்டுக்குப் பெரும் கொடையாளிகளான சமணர்களின் எண்பெரும் குன்றங்களால் தழுவப்பட்ட மதுரை பல முகங்களைக் கொண்டது; சில முகங்கள் குரூரமானவை. வைகையின் கொதிமணலில் தொன்மச் சில்லுகள் பாதத்தைக் கீறிக்கொண்டேதான் இருக்கின்றன. அதேசமயம், முகம் தெரியாத இளைஞனின் பிரேதமும் அவ்வப்போது காலில் இடறுகிறது. சிதிலமான வைகைப் படித்துறைகளும், படர்தாமரையின் ஆக்கிரமிப்பும் கலக்கும் அனைத்து வகைக் கசடுகளும், மச்ச அவதாரம் நிகழ்ந்ததாகப் புராணிக்கப்படும் கிருதமாலை ஆற்றின் நசிவும் ஒடுக்கமும் என்று இவை எல்லாமே மதுரையின் இன்றைய இருப்பின் குறியீடுகள்தான். ஆனால், இதே வைகை, கள்ளழகர் அதற்குள் இறங்கும்போது வேறு தோற்றம்கொள்கிறது. பௌர்ணமி நிலவில் வைகை மணல், நீரைப் புணர்ந்து புதிய சோபைகொள்கிறது. வைகைக் கரையில் பத்தி உலாவும் மோகினி வைகறைப் பொழுதில் அமுதத்தை அசுரருக்கும் சேர்த்தே பரிமாறிச் செல்கிறாள். ஆற்றையும் அழகரையும் ஒருசேரக் காணும் கணம் அது. வெயிலின் சலிப்பை வேறுவிதமாகக் கடந்துவிடுகிறது மதுரை. இதையெல்லாம் பாடித் தீரவில்லை எனக்கு.

சமய இலக்கியங்கள், புராணங்களின் நினைவுகளை அழுத்தமாகக் கொண்டவை உங்கள் கவிதைகள். பழைய மதிப்பீடுகள், வரையறைகளைக் கொண்ட மரபிலக்கியத்தை உங்கள் புதுக்கவிதைகளில் எங்கே விடுவிக்கிறீர்கள்?

பெருந்தெய்வமான மீனாட்சியின் கோயிலுக்கும், சிறுதெய்வமான மதுரை வீரனின் கோயிலுக்கும் இடையே இருந்த கடைவெளியில் பல பதிற்றாண்டுகளைத் தின்றவன் என்ற வகையில் அதன் ருசி என்னிடம் எஞ்சியிருப்பது இயல்பானதுதான். என் உட்செவிகளில் நாகசுரமும் பறையும் சம அளவில் ஒலித்திருக்கின்றன. அதேசமயம், பாவமும் மன்னிப்பும் வருண அளவுகோலால் வெவ்வேறு வகைகளில் அளக்கப்படுவதைப் புராணங்கள் பின்னாளில் உணர்த்தின. எங்கள் தாயார் வாசித்த ‘திருவிளையாடல் புராண வசனம்’ ஒரு புதிய உலகத்தை எனக்குக் காட்டியது. கடைவீதி அஞ்சலகத்தில் வியாபாரத் தகவல் கார்டுகளை நாள்தோறும் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பழக்கம் இருந்த அந்தக் காலத்தில், குறுக்குவழியாக மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் புகுந்து பஜார் அலுவலகம் சென்று மீள்வது என் அன்றாட நடைமுறை. போகும்போது அமுதம் பரிமாறும் மோகினியையும், வரும்போது பிச்சாடனரையும், வல்லபச் சித்தரையும் கண்களால் முத்தமிட்டுக் கடைக்குத் திரும்பிவிடலாம். இவையெல்லாம் 15 நிமிடங்களில் என்பது அன்று சாத்தியமாக இருந்தது. ‘பெரிய தென்னன் மதுரையைப் பிச்சது ஏற்றி’ என்ற மாணிக்கவாசகரின் கவிதையை எனக்கு ஏற்பப் புரிந்துகொண்ட புள்ளியில் என்னுடைய கவிதை பிறந்தது என்று சொல்லலாம். சிவன் மீதான பித்து ஒருபுறமிருக்க, சிவனால் அங்கம் வெட்டப்பட்ட பாணனின் பக்கமும், சித்தரால் முத்தம் மறுக்கப்பட்ட பொன்னனையாளின் பக்கமும்தான் என்னால் நிற்க முடிகிறது.

அன்பின் நிராகரிப்பு, நிராசையின் வலி உணர்வு உங்கள் கவிதைகளின் பாடுபொருளாக உள்ளது. அந்தப் பொருளுடன் தொடர்புடைய நடிகை வஹிதா ரஹ்மான், இயக்குநர் குரு தத் போன்றோர் உங்கள் கவிதைகளில் வருகிறார்கள். அதுகுறித்து?

பேரழகியான நடிகை மதுபாலா, உணர்ச்சிகரமான நடிப்பை அள்ளித்தந்த மீனாகுமாரி போன்ற நடிகைகளுக்கு மத்தியில் வஹிதா ரஹ்மானின் மிகை தவிர்த்த நடிப்பும் நடனத்தேர்ச்சியும் மென்மையான நளினமும் குரல் தணிவும் என்னைக் கவர்ந்தன. வஹிதா ரஹ்மானை வடிவமைத்ததில் குரு தத்தின் பங்கு முக்கியமானது. தன்னுடைய சிருஷ்டியின் மீதே காதல் கொள்வதுதான் அங்கே நிகழ்கிறது. ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்கிறவர்களை விதி ஏன் ஒன்றாக வாழவிடுவதில்லை என்பதுபோல ‘காகஸ் கே பூல்’ என்ற திரைப்படத்தில் வசனம் வரும். அந்தக் காட்சியின் துயரம் வஹிதாவின் அடக்கிய நடிப்பால் கூர்மையாகப் பார்வையாளரைத் தாக்கும். உறவின் வலியை உணர்ந்த கணம் அது.

தமிழ் இலக்கிய மரபை இந்தத் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன?

டி.எஸ்.எலியட்டின் புகழ்பெற்ற ‘பாரம்பரியமும் தனித்திறமையும்’ கட்டுரையையே பதிலாகச் சொல்லிவிடலாம். இதுவரை எழுதப்பட்டுள்ள கவிதைகளின் ஒட்டுமொத்த சாரத்தையும் உயிர்ப்புடன் தனக்குள் உணர்ந்துகொள்ளும் வரலாற்றுப் பிரக்ஞையைப் படைப்பாளியிடம் வேண்டுகிறார் எலியட். ஆனால், தமிழ் போன்ற தொன்மையான மொழிகளில் மரபே சுமையாகி, படைப்பின் மூச்சை இறுக்கிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கத்தான் செய்கிறது. அதேசமயம், எலியட் சொல்கிற முறையில் மரபைப் புரிந்துகொள்ளும்போது அது படைப்புக்குச் செழுமை கூட்டுவதாகவே அமைந்துவிடுகிறது. பழந்தமிழ் இலக்கியத்தை எடுத்துக்கொண்டால் குறுந்தொகையின் சில கவிதைகள் நம்மை உறையவைக்கின்றன; கலித்தொகையின் சில பாடல்கள் நம்மைச் சீண்டிவிடுகின்றன. சிலப்பதிகாரத்தின் உணர்வுச் சமநிலையும், மணிமேகலையின் சுருள்கதை வடிவமும் வழக்கமான காவிய மரபுகளை மீறுகின்றன. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தின் அமானுஷ்ய உலகமும், நாச்சியார் திருமொழியின் வேட்கைப் பிரவாகமும் பக்தி இலக்கிய மரபுக்கு அப்பால்தான் இருக்கின்றன. மரபும் மரபு மீறலும் இங்கே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மரபைச் சுமையாகத் தூக்கிக்கொண்டு திரியாமல் அதன் சாரத்தை மட்டும் செரித்துக்கொண்டு பயணப்பட்டால் நீண்ட கவிதைப் பயணம் சாத்தியமாகக்கூடும்.

சம்ஸ்கிருதம் உங்கள் கவிதைப் பார்வையை எப்படிச் செழுமைப்படுத்தியுள்ளது?

தமிழை முழுமையாகப் புரிந்துகொள்ள சம்ஸ்கிருத அறிவு அவசியம் என்று வலியுறுத்திவந்தவர் அறிஞர் வையாபுரிப் பிள்ளை. அவருடைய ‘விடுதலை வேண்டும்’ கட்டுரையைத் தமிழர்கள் அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். தமிழ்-சம்ஸ்கிருதம் இடையே நேசம்-வெறுப்பு என்ற உறவுநிலை காலம்காலமாகத் தொடர்ந்துவருகிறது. சங்க அகக்கவிதை தமிழ் மரபிலிருந்து கிளைத்துவந்தது என்பதால் அதனளவிலேயே அது புரிந்துகொள்ளப்படக்கூடியது. அதேசமயம், ரஸத்வனிக் கோட்பாடு, தமிழ் அகக்கவிதையில் உள்ளுறையாக இருக்கும் குறிப்புப் பொருளை மேலும் நுட்பமாக விளங்கிக்கொள்ள உதவும். மேலும், காவியங்களின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள சம்ஸ்கிருதப் பரிச்சயம் அவசியம். நாடகம், அணி இயல் போன்ற துறைகளில் சம்ஸ்கிருதம் எட்டியிருக்கும் உச்சம் பெருவியப்பைத் தரக்கூடியது. காளிதாசனும் பவபூதியும் ஆனந்தவர்த்தனரும் அபினவ குப்தரும் கவிதையின் நுட்பமான அசைவுகளையும், அவை குறித்த விளக்கங்களையும் நம் முன் பரப்பி வைத்திருக்கிறார்கள். கொள்ளுவதும் தள்ளுவதும் அவரவர் விருப்பம்.

தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

எமிலி டிக்கன்சனின் நூறு கவிதைகளையாவது மொழிபெயர்ப்பது என்ற திட்டத்தில் இருக்கிறேன். வான்கோவின் மஞ்சளும், வெண்கலத்தின் உலோக மஞ்சளும் புணர்கிற ரசவாதத்தை வார்த்தைக்குள் கொண்டுவர முடியுமானால் இன்னுமொரு கவிதைத் தொகுப்பு. காரைக்காலம்மையார், ஆண்டாள் கவிதைகளுக்குக் குறைவான குறிப்புகளுடன் கூடிய ஒரு உரைப்பதிப்பு, டி.கே.சியின் முத்தொள்ளாயிரப் பதிப்புபோல. நம்பிக்கை தருகிற இன்றைய தமிழ் கவிஞர்கள் குறித்து எனக்குள் சொல்லிக்கொள்வதாய் ஒரு சிறிய கட்டுரைத் தொகுப்பு. இவ்வளவுதான்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x