Published : 10 Jan 2020 07:21 am

Updated : 10 Jan 2020 07:21 am

 

Published : 10 Jan 2020 07:21 AM
Last Updated : 10 Jan 2020 07:21 AM

கீழடியைத் தொடர்ந்து கையில் எடுக்கப்படுமா ஆதிச்சநல்லூர்?

aadhichanallur-excavation

அப்பணசாமி

அடுத்தடுத்து விழும் டெல்லி செய்திகள் ஒட்டுமொத்த நாட்டையுமே ஆக்கிரமித்துவிடுகின்றன. விளைவாக, பரபரப்பான செய்திகள் நடுவே பல முக்கியமான செய்திகள் மூழ்கடிப்பட்டுவிடுகின்றன. சமீபத்தில், மதுரையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. கீழடி அகழாய்வில் வெளிக்கொணரப்பட்ட விஷயங்கள் தொடர்பாக எழுந்த விவாதங்களை ஒரே இடத்தில் கூடி ஆராயும் நிகழ்ச்சிபோல நடந்த இந்தக் கருத்தரங்கை முன்னெடுத்தது தமிழக தொல்லியல் துறை என்பதுதான் விசேஷம்.


கீழடி நான்காம் கட்ட அகழாய்வுகள் முன்வைக்கும் இரு தரவுகள் மிக முக்கியமானவை. ஒன்று, வைகை நதிக்கரையில் 2,600 ஆண்டுகளுக்கு முன் நகர நாகரிகம் தழைத்தோங்கி உள்ளது எனும் தரவு. தென்னிந்தியாவில் நகர நாகரிகம் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று இதுவரை வரலாற்றாளர்கள் கூறிவந்ததை இம்முடிவு மறுபரிசீலனைக்கு உள்ளாக்குகிறது; கங்கைவெளிச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரிகம் உருவான காலத்திலேயே இங்கும் நகர நாகரிகம் உருவாகியுள்ளது என்று கருத இது வாய்ப்பளிக்கிறது. அடுத்து, அங்கு காணப்பட்ட தமிழி எழுத்துகள் 2,500 ஆண்டுகள் பழைமையானவை எனும் தரவு. அதாவது, அசோகர் பிராமி எழுத்துகள் உருவாவதற்கு முன்பே தமிழில் எழுத்தறிவு உருவாகியிருப்பதற்கான சாத்த்தியத்தை இது பகிர்கிறது.

மதுரையில் இரண்டு நாட்கள் நடந்த தேசிய ஆய்வரங்கில், கீழடி குறித்த பல்வேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இதுவரை சங்க இலக்கியங்கள் மூலமாக மட்டுமே தமது பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருந்த தமிழ்ச் சமூகம், இனி தொல்லியல் சான்றுகளுடன் அதைப் பேசுவதற்குக் காலம் கனிந்துள்ள மகிழ்ச்சியைப் பெரும்பாலான ஆய்வாளர்களிடம் காண முடிந்தது. அதேவேளையில், தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை, அதன் அறிவியல் அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வாதங்களும் எழுப்பப்பட்டன.

குறிப்பிடத்தக்க உரைகள்

எட்டு அமர்வுகளாக நிகழ்த்தப்பட்ட 22 உரைகளையும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த விவாதங்களையும் தொகுத்துப் பார்க்கும்போது, துணைக்கண்ட தொல்லியல் பணிகள் குறித்த ஒரு வரைபடமே மனதில் உருவாகிறது. முதல் இந்தியர்கள் இந்தியா வந்ததிலிருந்து வேளாண்மையில் ஈடுபட்ட ஸ்டெப்பி வெளி விவசாயிகள், சிந்துவெளி மக்கள் உருவாதல், திராவிடத்துக்கு முந்தைய மொழி உருவாதல், ஆஸ்ட்ரோ – ஆசியர்கள் தமது மொழியுடன் தென்னிந்திய வருகை, ஆரியர்கள் வருகை, சிந்துவெளி முத்திரைகள் கில்காமேஷ் காப்பியங்கள் ஒப்பீடு என டோனி ஜோசப் உரை விரிந்தது.

ஹார்வர்டு பல்கலைப் பேராசிரியர் வாஹீஷ் நரசிம்மன் தலைமையில் உலகளவில் முன்னணி அறிவியலாளர்கள் 92 பேரைக் கொண்டு, பழைய கற்காலம் முதல் தற்காலம் வரையிலான பல காலகட்டங்களைச் சேர்ந்த 523 மரபணுக்களை ஆய்வுசெய்து, அதன் முடிவுகள் அண்மையில் ‘சயின்ஸ்’ ஆய்விதழில் வெளியானது. மதுரை கருத்தரங்கில் வாஹீஷ் நரசிம்மன் காணொளி உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின்போது வாஹீஷ் நரசிம்மன், இந்தியாவில் பெரும்பாலானோர் 80%-100% சிந்துவெளி மக்கள் மரபணுக்களைத்தான் கொண்டுள்ளனர் என்றார். தொல்லியல் ஆய்வின் எதிர்காலம் மரபணு ஆய்வையும் சார்ந்துள்ளதை அவருடனான உரையாடல் எடுத்துக்காட்டியது.

சிந்துவெளியின் திராவிட அடித்தளத்தை சங்க இலக்கியம், ஊர்ப் பெயர்கள், சிந்துவெளி முத்திரை எழுத்துகளை திராவிடப் பண்பாட்டை ஒட்டி வாசிக்க முயலுதல், சிந்துவெளியில் அலையலையாக இடம்பெயர்ந்த மக்கள் மராட்டியம், ஒடிசா பகுதிகளில் குடியேறியதைத் தொல்லியல், இலக்கியத் தடயங்கள் மூலம் நிறுவுதல் என ஆர்.பாலகிருஷ்ணனின் உரை சுமார் 3,500 ஆண்டு கால மூதாதையர் பயணக் கதைகளைப் பேசியது. “இந்தியத் துணைக்கண்டம் என்பது மழைக்காடுகள்போல் பல பண்பாடுகளால் சுவாசிக்கப்படுகிறது” என்றார் பாலகிருஷ்ணன்.

விரியும் எல்லைகள்

தமிழகத்தின் தொன்மை வரலாறு என்பது இன்றைய தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளம், புதுவை, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா வரை பரவியதாகும். எனவே, “அகழ்வாய்வில் இன்றைய மாநில எல்லைகளைப் புறக்கணித்து தமிழ்நாடு, புதுவை, கேரளம், கர்னாடகம், ஆந்திரா, தெலங்கானா எல்லைகளுக்கும் அகழாய்வுகள் விரிவடைய வேண்டும்” என்றார் பி.ஜே.செரியன். இவர் மேற்கொண்ட பட்டினம் அகழாய்வு, சங்க காலத் துறைமுக நகரமான முசிறியின் தொன்மையை வெளிக்கொணர்ந்தது. “இந்திய வரலாறு எழுதுதலில் தீபகற்ப வரலாற்றைக் கீழமையாகக் காணும் போக்கு காலனிய, தேசிய காலத்திலிருந்து இன்றும் தொடர்கிறது. முன்முடிவுகள், ஒவ்வாமைகள் தொடர்கின்றன. இது தென்னிந்தியத் தொல்லியல் ஆய்வுகளிலும் எதிரொலிக்கிறதோ?” என்று செரியன் எழுப்பிய அச்சம் சிந்திக்கத்தக்கது.

இதற்கு மதிப்புமிக்க தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்களும் விதிவிலக்கில்லை. கருத்தரங்கில் கலந்துகொண்ட சில மூத்த தொல்லியலாளர்கள் கீழடி அகழ்வாய்வைப் புராண, இதிகாசங்கள் வழி பார்த்ததையும், கரிமப் பொருள் காலக் கணிப்பு முடிவுகள் மீதே சந்தேகம் கொண்டதையும் பார்க்க முடிந்தது. இன்னும் அதிக இடங்களில் மேலும் சரிபார்க்கப்பட்ட நவீனத் தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டியதன் தேவையையே இது உணர்த்துகிறது என்றாலும், வரலாற்றுச் சான்றுகளைப் புராணங்களில் தேடும் போக்கு இன்னும் நீடிக்கவே செய்கிறது.

ஆய்வுகள் தொடர வேண்டும்

இரு நாட்களிலும் தொல்லியல் ஆய்வாளர்களால் தொடர்ந்து வலியுறுத்திய ஒரு கருத்து, கடந்த 30 ஆண்டுகளாகவே தமிழகத்தில் போதுமான அகழாய்வுகள் நடத்தப்படவில்லை என்பது. இது குறித்து முன்னணி தொல்லியலாளரும் தமிழி எழுத்துகளை வெளிக்கொணர்ந்தவருமான பேராசிரியர் கொடுமணல் கே.ராஜன் முன்மொழிந்த தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய தொல்லிடங்கள் பட்டியல் கவனம் பெற்றது.

“பழைய கற்காலக் கருவிகள் காணப்படும் தர்மபுரி, வேலூர் பகுதிகள், இரும்புக் காலப் பண்பாடு காணப்படும் பாலாறு, பெண்ணாறு படுகைகள், காவிரிப் படுகை எனப் பட்டியல் நீள்கிறது. மேலும், தமிழ்நாட்டில் நுண் கற்காலக் கருவிகள் ஆவணப்படுத்தப்படவில்லை. ஆர்கானிக் தொல்பொருட்கள் மட்டுமல்லாமல் இன்-ஆர்கானிக் தொல்பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மெகாலித்திக் பகுதிகளில் ஈமப் பகுதிகள் மட்டும் ஆய்வுசெய்யப்படுகின்றன. அருகமை வாழ்விடங்களும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கொங்கு பகுதியில் ஒவ்வொரு 5 கிமீ இடைவெளியிலும் தொன்மை இடங்கள் காணப்படுகின்றன” என்கிறார் கே.ராஜன்.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் முடிவுகள் ஆய்வுசெய்யப்பட்ட விதமும்கூடக் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. கீழடியின் இரண்டாம், மூன்றாம் கட்ட ஆய்வுகள், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கைகள் இன்னமும் வெளியாகாதது குறித்த கேள்விகள் எழுந்தன. விவாத நேரத்தில் ஆதிச்சநல்லூரில் ஆய்வுசெய்த தி.சத்திய மூர்த்தி கூறிய தகவல் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. ஆதிச்சநல்லூர் தொன்மையை அலெக்சாண்டர் லீ போன்றவர்கள் வெளிக்கொணர்ந்து நூறு ஆண்டுகள் கழித்துதான் அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, அப்போது 12 மனித எலும்புக்கூடுகள் வெளிக்கொணரப்பட்டன. இவற்றில் ஒன்று, ஆய்வுக்காக 2004 வாக்கில் மைசூர் மானுடவியல் ஆய்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அறிக்கை அளிக்கப்படவில்லை. ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை என்றார். அந்த மனித எலும்புக்கூடு இன்னமும் பத்திரமாக இருக்கிறதாம்.

கீழடியைத் தொடர்ந்து அடுத்து தமிழகத் தொல்லியல் துறை கவனம் செலுத்த வேண்டிய களம் எது என்பதைத் திசை காட்டுவதுபோல இருந்தது அது. கீழடியோடு சேர்த்து கொடுமணல், ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களிலும் அடுத்தகட்ட அகழாய்வுகளை முழுமூச்சில் நாம் தொடங்கும்போது வரலாறு இன்னும் துலக்கமாகத் தெரியவரும்.

- அப்பணசாமி, ‘கொடக்கோனார் கொலை வழக்கு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: jeon08@gmail.com


Aadhichanallur excavationகீழடிஆதிச்சநல்லூர்கீழடி நான்காம் கட்ட அகழாய்வுஇரண்டாம் நகர நாகரிகம்கங்கைவெளிச் சமவெளி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author