

இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சேவை மனப்பான்மையுடனும் மனித நேயத்துடனும் இருக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன் அறிவுரை கூறினார். பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்கள் அளவில் சிறந்த இளம் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.மதிவாணன் தலைமை வகித்து, தேர்வு எழுதும் மாணவர்களை வாழ்த்திப் பேசும்போது ‘‘மாணவர்கள் தியாக உணர்வு, சேவை மனப்பான்மை, மனிதநேயம், நட்புணர்வு, பிறருக்கு உதவிசெய்தல், விட்டுக் கொடுத்து வாழ்தல் ஆகிய நற்பண்புகளுடன் சிறந்த குடிமகன்களாகத் திகழ வேண்டும். என்றார்.
வேப்பூர் கல்வி மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் வெ.ராதாகிருஷ்ணன் மாணவர்கள் தேர்வு எழுதும் முறை குறித்து விவரித்தார். இத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 68 மேல்நிலை, உயர்நிலை நடுநிலைப் பள்ளிகளிலிருந்து 180 ஜேஆர்சி மாணவர்களும், 60 கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். ஜேஆர்சி இணை கன்வீனர்கள் ராஜமாணிக்கம், ஜோதிவேல், துரை, மாவட்டப் பொருளாளர் ராஜா, இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர் மு.கார்த்திகேயன் ஆகியோர் தேர்வை மேற்பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் மா.மாரிமீனாள் (பெரம்பலூர்), குழந்தை ராஜன் (வேப்பூர்), பள்ளியின் தலைமையாசிரியர் கே.ஜெய்சங்கர், பெரம்பலூர் கல்வி மாவட்ட பொருளாளர் மு.கருணாகரன் பங்கேற்றனர். மண்டல அலுவலர்கள் கிருஷ்ணராஜ், நவிராஜ், செல்வராஜ், காசிராஜ், ராஜேந்திரன், ரகுநாதன், பள்ளி கவுன்சிலர் தேவேந்திரன் ஆகியோர் தேர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பெரம்பலூர் கல்வி மாவட்ட கன்வீனர் த.மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.