Published : 07 Jan 2020 07:30 AM
Last Updated : 07 Jan 2020 07:30 AM

பாலினச் சமத்துவமின்மை: இலக்கு நிர்ணயித்துக் களைய வேண்டும்!

வாய்ப்புகளையும் வள ஆதாரங்களையும் பெறுவதில் பெண்களுக்கு உள்ள சமத்துவ நிலையை மதிப்பிடுவதே, ஒரு நாடு தனது குடிமக்களை முன்னேற்றுவதில் எவ்வளவு உறுதியோடு இருக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறையாகும்.

சமீபத்தில் வெளிவந்த உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலினச் சமத்துவமின்மைக் குறியீடுகள்-2020 அறிக்கையைப் பார்க்கிறபோது, அரசுகள் தங்கள் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தில் உண்மையிலேயே அக்கறை காட்டுகின்றனவா என்ற கேள்வியே எழுகிறது. 2018-ல் 108-வது இடத்தில் இருந்த இந்தியா, நான்கு புள்ளிகள் கீழிறங்கி, 112-வது இடத்துக்குத் தாழ்ந்திருக்கிறது.

இந்தக் குறியீடுகள் பொருளாதாரப் பங்கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வியறிவு நிலை, சுகாதாரம் மற்றும் ஆயுட்காலம், அரசியல் அதிகாரம் பெறுதல் ஆகிய நான்கு முக்கியத் துறைகளில் உள்ள பாலின அடிப்படையிலான இடைவெளிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டிலும் கிடைக்கக்கூடிய வள ஆதாரங்கள், வாய்ப்புகளின் உண்மையான அளவைக் காட்டிலும் அதைப் பெறுவதில் உள்ள பாலின சமத்துவமற்ற நிலையை அளவிடுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த பாலினச் சமத்துவ வேறுபாடு 66.8% புள்ளிகளோடு ஏறக்குறைய மூன்றில் இரண்டு மடங்காகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான ஒரு விஷயம், பொருளாதார பாலினச் சமத்துவமின்மை. அப்பிரிவில், இந்தியா 35.4% புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. 153 நாடுகளில் இந்தியா 149-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய அறிக்கையைக் காட்டிலும் ஏழு இடங்கள் இந்தியா பின்தங்கியிருக்கிறது, ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இடைவெளி மட்டுமே சரிசெய்யப்பட்டிருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்கேற்பு, உலகிலேயே மிகவும் பின்தங்கிய இடத்தில் இருப்பதோடு, பெண்கள் ஈட்டியதாக மதிப்பிடப்படும் வருமானமும் ஆண்களின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு என்ற அளவிலேயே இருக்கிறது. சுகாதாரம் மற்றும் ஆயுட்காலக் குறியீட்டில், இந்தியா மிகவும் பின்தங்கிய வகையில் 150-வது இடத்தில் இருப்பது மிகவும் கவலைக்குரியது.

பாலினப் பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம், வன்முறைகள், கட்டாயத் திருமணங்கள், சுகாதார வசதிகளைப் பெறுவதில் பேதம் காட்டப்படுதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே இது தீர்மானிக்கப்படுகிறது. கல்வியறிவு பெறுவதில் 112-வது இடத்தையும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதில் 18-வது இடத்தையும் பெற்றிருப்பது மட்டுமே ஒப்பீட்டளவில் நல்ல செய்திகள்.

தற்போது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிச்சயமாகப் போதுமானவை அல்ல; குறியீட்டில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அனைத்துப் பிரிவுகளிலும் தனிக் கவனம் செலுத்தப்படுவதோடு, எதிர்வரும் காலத்தில் பாலினச் சமத்துவமின்மையைக் குறைப்பதற்கு இலக்குகளைத் தீர்மானித்துச் செயல்பட வேண்டும். இது பெண்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.

அவை அடித்தட்டு அளவில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை உறுதிசெய்துகொள்வதும் மிகவும் அவசியமானது. பெண்களின் முன்னேற்றத்துக்கான சூழல்களை உருவாக்கும் உறுதியை மேற்கொள்வது ஒன்றே, எந்தவொரு அரசும் தவிர்க்கக் கூடாத பொறுப்பாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x