Published : 06 Jan 2020 12:02 PM
Last Updated : 06 Jan 2020 12:02 PM

எல்லோருக்குமான சமத்துவத்தைச் சொல்லும் அரசமைப்புச் சட்டம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு, 1948-ல் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யப்பட்டது. பல மாதங்கள் வரையில், நாடு முழுவதுமிருந்து மாகாண அரசுகள், உள்ளூர் வழக்கறிஞர் சங்கங்கள், மக்கள் அமைப்புகளிடமிருந்து மட்டுமின்றி, குடிமக்களிடமிருந்தும்கூட அதைப் பற்றிய கருத்துகள், ஆலோசனைகள், திருத்தங்களுக்கான முன்மொழிவுகள் குவிந்தவண்ணம் இருந்தன.

பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழு இந்த முன்மொழிவுகளைக் கவனமாகப் பரிசீலித்து, அதற்கான பதில்களைப் பதிவுசெய்ததோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை அரசமைப்புச் சட்ட வாசகங்களில் திருத்தங்களை மேற்கொண்டது. இவ்வாறு திருத்தப்பட்ட வரைவுதான் அரசமைப்பு நிர்ணய அவையால் விவாதிக்கப்பட்டு, இறுதியில் இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாகியது.

இவ்வாறு, இந்திய அரசமைப்புச் சட்டமானது மக்களின் பங்கேற்பிலிருந்தே பிறந்தது. இத்தகைய மக்கள் பங்கேற்பு என்பது விடுதலைப் போராட்டத்தின் பெருந்திரளான மக்கள் இயக்கத்திலிருந்து தொடங்கி, அரசமைப்புச் சட்டத்தை இயற்றியவர்களுக்கும் இந்தியப் பொதுமக்களுக்கும் இடையிலான உரையாடலாக உச்சம் பெற்றது. இந்த வரலாறுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம்பெற்றுள்ள ‘இந்திய மக்களாகிய நாம்... இந்த அரசமைப்புச் சட்டத்தை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்கிக்கொண்டிருக்கிறோம்’ என்ற பிரபலமான வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது.

இந்த வரலாறு நமக்குச் சில விஷயங்களைச் சொல்கிறது. வழக்கறிஞர்கள், நீதிபதிகளால் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு ஒருபோதும் இல்லை. நீதிமன்றங்களின் எல்லைக்குள்ளேயே நிறுத்தப்பட்டு, வழக்கமான சட்ட மொழியில் அமைந்த வாதங்களுக்குள் அரசமைப்புச் சட்ட விவாதங்கள் ஒருபோதும் கட்டுப்படுத்தப்படவில்லை.

அரசமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்டபூர்வமான ஆவணமல்ல, அது விழுமியங்கள், கொள்கைகளின் சாசனம்; சுதந்திரமும் நீதியும் சமத்துவமும் கொண்ட சமூகத்துக்கான தொலைநோக்குப் பார்வை. அந்தத் தொலைநோக்கும் காலத்தில் நிலைபெற்று நின்றுவிடுவது அல்ல, ஒவ்வொரு தலைமுறையும் கண்டுகொள்ளவிருக்கும் புதியனவற்றுக்கு ஏற்ப நமது குடியாட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை உரையாடியும் விவாதித்தும் புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.

அரசமைப்புச் சட்டமும் குடியுரிமைச் சட்டத் திருத்தமும்

குடியுரிமைச் சட்டத் திருத்தம், 2019, தேசிய குடியுரிமைப் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களையொட்டி இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றிய கருத்துகள் முன்வந்து நிற்கின்றன. வெவ்வேறு விதமான பதிவேடுகளைப் பற்றி இந்தப் போராட்டங்கள் குரல் கொடுத்தாலும், அதன் முக்கியமான தொனி என்பது அரசமைப்புச் சட்டமாகவே இருக்கிறது.

இந்தியா முழுவதும் ஒன்றுசேர்ந்த கூட்டங்களில், அரசமைப்புச் சட்ட முகப்புரையைப் பொது இடங்களில் வாசித்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முகப்புரையைப் பொறுத்தவரையில், நிச்சயமாக அது சட்டரீதியாகக் கட்டுப்படுத்தும் ஆவணம் அல்ல. 2019-ன் குடியுரிமைச் சட்டத் திருத்தம் முகப்புரைக்கு எதிரானது என்று கண்டறியப்பட்டாலும் அதைச் செல்லாதது என்று அறிவிக்க முடியாது.

எனினும், முகப்புரை என்பது அதைக் காட்டிலும் மிக முக்கியமானது. அனைவருக்குமான நீதியையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பிரகடனப்படுத்தும் அந்த முகப்புரை, நாடு என்னவாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம் என்பதையும் நம்மிடம் சொல்கிறது. போற்றுதலுக்குரிய அந்த முகப்புரை, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அதன் சட்டரீதியான செல்லும் தன்மைக்கும் மேலாக உயர்வான நிலையில் நிறுத்திப் பார்க்கிறது.

இந்த உரையாடலானது குடியுரிமைச் சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக இல்லாத வகையில் அடிப்படையான குறைந்தபட்ச நிலைகளைக் கடந்துவிட்டதா என்பதைப் பற்றியது அல்ல. மாறாக, 1947-ல் நாடு தீர்மானித்துக்கொண்ட நமது விடுதலைப் போராட்டக் கருத்துகளுக்கும் இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் விழுமியங்களுக்கும் கொள்கைகளுக்கும் தகுதியானதா என்பதைப் பற்றியது என்று அவர்கள் நமக்குச் சொல்கிறார்கள்.

ஏன் கூறு 14 பேசப்படுகிறது?

ஆர்ப்பாட்டங்களின்போது அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14-ஐப் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதைக் கேட்கிறோம். சட்டரீதியாக, சட்டக்கூறு 14-ஐப் பற்றிய விவாதங்கள், குடியுரிமைச் சட்டத் திருத்தம் ‘நியாயமான வகைப்பாட்டை’ அளித்திருக்கிறதா என்பதைப் பற்றியதாக மாறிவிடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தின் சட்டவியல் பார்வையின்படி ‘நியாயமான’ என்பதற்கான புரிதலும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்திருக்கிறது. எனவே, நியாயமான வகைப்பாடு என்ற சோதனையில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் எவ்வாறு தோல்வியைத் தழுவுகிறது என்று பலத்த விவாதங்கள் நடக்கின்றன.

எனினும், 14-வது சட்டக்கூறு வழக்கமான சட்ட விதிகளைக் காட்டிலும், சட்டத்தின் முன்பாக அனைவரும் சமம் என்று கம்பீரமாகவே உறுதியளிக்கிறது. அது, உச்ச நீதிமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. 1952 வாக்கில், 14-வது சட்டக்கூறு பற்றிய வாதங்களின்போது “இறையாண்மையுள்ள ஜனநாயகக் குடியரசு நாட்டின் கூட்டுமனத்தின்படி... நமக்கு நாமே பிரகடனப்படுத்திக்கொண்டுள்ளபடி சரியானதும் முறையானதுமான ஜனநாயகத்தில், உறுதியான மனமும் மனச்சாய்வற்ற பார்வையும் கொண்டவர்களால் கணிசமான அளவில் அவ்வாறு சமமாக நடந்துகொள்ள முடியுமா?” என்று கேட்டார் நீதிபதி விவியன் போஸ்.

பல ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி போஸ் எண்ணியதுபோலவே, சமத்துவம் குறித்த விவாதங்கள் நம்முடைய ஜனநாயகத்தின் இயல்பைப் பற்றிய ஆழமான கேள்வியை, அதாவது மனிதர்கள் அனைவரும் நீதியாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியைத் தவிர்க்க இயலாது. இந்த விவாதங்கள் நீதிமன்றங்களில் தீர்வுகாண முடியாதது; குடிமக்களுக்கு இடையிலான நெடிய பொது விவாதங்களின் வாயிலாக மட்டுமே இயலும். அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்கான பணிகள் தொடங்கியபோது ஜவாஹர்லால் நேரு சொன்னதுபோல, ‘வார்த்தைகள் மாயத்தன்மை கொண்டவை...

ஆனாலும், வார்த்தைகளின் மாயத்தன்மையாலும்கூடச் சில நேரங்களில் மனித ஆன்மாவின் மாயத்தன்மையை வெளிப்படுத்த முடியாது’. குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைப் பற்றிய உரையாடல்கள், அரசமைப்புச் சட்டத்தின் வாசகங்களுக்கும் அப்பால் நம்மை இட்டுச்செல்கிறது - நீதிமுறைப் பொருள்விளக்கங்கள் அளிக்கப்பட்ட சில பத்தாண்டுகளுக்குப் பிறகான காலகட்டத்துக்கு வரலாற்றுப் பெருந்தொகுப்பு நம்மைக் கொண்டுசெல்கிறது - அரசமைப்புச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டிருக்கும் ‘மனித ஆன்மாவின் மாயத்தன்மை’யையும் கேள்வியெழுப்புகிறது.

நீதிமன்றத்துக்கு அப்பால்

இந்த நோக்கில், அரசமைப்புச் சட்டம் ஒவ்வொருவருடனும் தொடர்புடையது; நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களும் மீட்டுருவாக்கும் நடவடிக்கைகள் என்று சரியாகவே பொருள் புரிந்துகொள்ளப்படும். பிரபலமான ஒரு வரலாற்றுக் கதையை நினைவில்கொள்வோம்: 1830-ல் அமெரிக்காவில் இருந்த அடிமை முறைக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் குறிப்பிடத்தக்க ஒன்றை உரிமைகோரினார்கள்.

அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தால் அடிமை முறை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அது அடக்குமுறை அதிகாரங்களுக்கு எதிரான புரட்சிகர இயக்கத்தின்போது பிறப்பெடுத்ததாகவும் அவர்கள் வாதிட்டார்கள். அவர்களின் இந்த உரிமைகோரலானது, அதற்கு மிகவும் விரோதமான வகையில் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடிக்கு ஆளாகி, அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் அடிமை முறை சேர்க்கப்பட்டது.

எனினும், அமெரிக்காவைச் சேர்ந்த அடிமை முறைக்கு எதிரானவர்கள் அனைவருக்குமான விழுமியங்களுக்கான ஆபத்தை வலியுறுத்தி, மக்களிடம் விவாதங்களை உருவாக்கினார்கள் என்பது அரசமைப்புச் சட்டத்தின் தனி அழகாகும். நீதித் துறையால் மீண்டும் அவர்களது கோரிக்கைகள் மறுக்கப்பட்டு, அடிமை முறை நிலைநிறுத்தப்பட்டது. அவர்களது மனிதநேயம், சமத்துவப் பார்வைகள் மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகே முறையாக அரசமைப்புச் சட்டமாக இயற்றப்பட்டது.

ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்குப் பிறகு, அடிமை முறைக்கு எதிரானவர்களின் கருத்தே சரியானது என்று வரலாறு தனது உறுதியான தீர்ப்பை அளித்தது. உச்ச நீதிமன்றம் தவறிழைத்துவிட்டது. நம் நாட்டிலேயே, புதுமைப்பாலினர் குறித்த அப்படியொரு ஊக்கமளிக்கும் உதாரணம் உண்டு. கௌஷல் தீர்ப்புக்குப் பிறகான போராட்டங்களும் செயல்பாடுகளுமே இந்திய உச்ச நீதிமன்றம் அதன் தவறைத் திருத்திக்கொள்ளவும் கடைசியில் தன்பாலின உறவு குற்றமில்லை என்று 2018-ல் தீர்ப்பளிக்கவும் காரணமாக அமைந்தது.

இந்தக் கதைகள் நமக்குச் சொல்வது என்னவென்றால், அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்று வெவ்வேறு அமைப்புகள், வெவ்வேறு பார்வைகளைக் கொடுக்கலாம். ஆனால், அரசமைப்பின் உண்மை அல்லது அறிவின் மீது எந்தவொரு நிறுவனமும் தனியதிகாரத்தைச் செலுத்த முடியாது. இது ஒன்றே நிறுவனங்களுக்கு வெளியே அரசமைப்புச் சட்டவாதம் நிலைத்திருக்கவும் உயிர்த்திருக்கவும் செழித்திருக்கவும் முக்கியக் காரணம். குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள், அரசமைப்புச் சட்டத்தைப் பற்றியும் அரசமைப்புச் சட்ட விழுமியங்கள் பற்றியும் வளர்ச்சியும் மாற்றமும் கொண்ட உரையாடல்களை எடுத்துக்காட்டுகிறது. நமக்கான இந்த உரையாடல்களைத் தற்போது மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

இந்தப் போராட்டங்களுக்கான எதிர்வினைகள் பல்வேறு வடிவங்களை எடுத்துவருகின்றன. அதில் ஒன்று, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தையும், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பது. மற்றொரு விதமான எதிர்வினை, குடியுரிமைச் சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்டப்படி செல்லுமா என்பதை உச்ச நீதிமன்றத்திடம் கொண்டுசெல்ல வேண்டும், போராடுவதில் எந்த அறிவுமில்லை என்பது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஏதோ ஒருவகையில் முடிவுசெய்யலாம்.

ஆனால் இந்த வாதம், அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட வரலாற்றின் உச்சத்தைப் புரிந்துகொள்ளாததோடு, அரசமைப்புச் சட்டத்தின் இயல்புகளையும்கூடப் புரிந்துகொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்தின் முன்னால் இருக்கும் கேள்வி மிகவும் எளியது: குடியுரிமைச் சட்டத் திருத்தம், ஒரு இயற்றப்பட்ட சட்டம் செல்லுபடியாவதற்கான குறைந்தபட்ச ஆரம்பத் தேவைகளைக் கொண்டிருக்கிறதா?

இந்தக் கேள்விக்கு உச்ச நீதிமன்றம் மிக எளிமையான ஒரு பதிலைத்தான் அளிக்கும்: ‘ஆம்’ அல்லது ‘இல்லை’. எந்தப் பதில் வந்தாலும், அது கடந்த சில வாரங்களாக நாம் மேற்கொண்டுவரும் உரையாடல்களின் எல்லைகள், வாய்ப்புகள், அதன் மிக வெளிப்படையான பன்முகத்தன்மைகள் ஆகியவற்றின் தொடக்கமாகக்கூட இருக்காது. இந்த வழக்கை விசாரித்து முடிவுசெய்யும்போது நீதிமன்றம் என்ன செய்தாலும் அது சட்டமாக அறிவிக்கப்பட்டுவிடும். அந்த அறிவிப்பு, குடியுரிமைச் சட்டம் தடுக்கப்படுமா அல்லது தொடருமா என்று சட்டபூர்வமான ஒன்றாக இருக்கும்: அது தடுத்தாலும் தொடரச்செய்தாலும் அரசமைப்புச் சட்டம் இருந்துகொண்டேதான் இருக்கும். அது, எல்லோருக்குமான அரசமைப்புச் சட்டம்.

- கௌதம் பாட்டியா, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் | தமிழில்: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x