Published : 06 Jan 2020 11:56 AM
Last Updated : 06 Jan 2020 11:56 AM

ஊழலுக்கு வித்திடுகிறதா உள்ளாட்சித் தேர்தல்?

நடந்து முடிந்திருக்கும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், இதுவரை உள்ளாட்சித் தேர்தல் பற்றி நிலவிவந்த பல நம்பிக்கைகளைப் பொய்யாக்கியிருக்கின்றன. முதலாவதாக, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்போதும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே இருக்கும் என்பது. இரண்டாவதாக, ஒப்பீட்டளவில் நகர்ப்புறங்களில் திமுகவுக்கும் ஊரகப்பகுதிகளில் அதிமுகவுக்கும் ஆதரவு அதிகம் என்பது. நகராட்சித் தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டதற்கு இந்த நம்பிக்கைதான் காரணம் என்றும் பேசப்பட்டது. கடைசியில், இந்த இரண்டு நம்பிக்கைகளும் தவிடுபொடியாகியிருக்கின்றன.

வெளிவந்திருக்கும் முடிவுகளின்படி, திமுக 243 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களையும் 2,100 ஒன்றிய ஊராட்சி உறுப்பினர்களையும் வென்றிருக்கிறது. அதிமுக 214 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 1,781 ஒன்றிய ஊராட்சி உறுப்பினர்களோடு பின்தங்கியே இருக்கிறது. மாவட்ட ஊராட்சிக்கும் ஒன்றிய ஊராட்சிக்கும் இனி உறுப்பினர்களைக் கொண்டு மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

திமுக ஏறக்குறைய 13 மாவட்டங்களைக் கைப்பற்றுவது உறுதி என்று தெரிகிறது. மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சிக்குச் சமமான எண்ணிக்கையில் சமமான பலத்தில் திமுகவும் இருக்கிறது. திமுக கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற வட்டாரங்களில் அதே செல்வாக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அதிமுகவால் கொங்குப் பகுதிகளில் மட்டுமே அதிக வெற்றியைப் பெற முடிந்திருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கு

திமுகவும் அதிமுகவும் இந்த உள்ளாட்சித் தேர்தலைக் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்துதான் சந்தித்தன. இவ்விரு கட்சிகளுமே, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான இடங்களைப் பெருமளவில் தங்களுக்கே ஒதுக்கிக்கொண்டன. எனினும், இவ்விரு கட்சிகளோடு சேர்ந்து தேர்தலைச் சந்தித்த கூட்டணிக் கட்சிகள் ஒன்றிய ஊராட்சி உறுப்பினர் இடங்களையும் சொற்ப எண்ணிக்கையிலேயே வென்றிருக்கின்றன. காங்கிரஸின் செல்வாக்கு உள்ளூர் அளவில் குறைந்துகொண்டே வருகிறது. தேசிய அளவில் சாதகமான அரசியல் அலையடித்த சூழலில் மக்களவைத் தேர்தலில் ஓரிடத்தைக்கூட வெல்ல முடியாத பாஜக, உள்ளாட்சித் தேர்தலில் வேர்விடத் தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தின் ஆட்சியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதாகப் பெருமை பேசிக்கொள்ளும் பாமக கொஞ்சம் கூடுதலாகவே அவ்வாறு தன்னை மதிப்பிட்டுக்கொள்கிறது என்பதையும் இத்தேர்தல் முடிவு உணர்த்துகிறது. ஆளுங்கட்சியோடு கைகோத்துக் களம்கண்டாலும் பாமகவால் 132 ஒன்றிய ஊராட்சி உறுப்பினர் இடங்களை மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது. தேமுதிகவுக்கும் ஏறக்குறைய இதுதான் நிலை.

தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக போன்ற கட்சிகள் பெற்றிருக்கும் இடங்கள் உள்ளூர் அளவில் அக்கட்சிகள் முற்றிலும் செல்வாக்கு இழந்துவிட்ட நிலையையே காட்டுகின்றன. சீமானோ, இன்னும் அவர் உள்ளூர் மட்டங்களில் அறிமுகமாகவே இல்லை. இருந்தாலும், இந்தத் தேர்தலை அவர் எதிர்கொண்டு தோற்றிருக்கிறார். கிராம சபா கூட்டங்களை நடத்திய கமல்ஹாசன், உள்ளாட்சித் தேர்தலிலிருந்தே ஒதுங்கி நின்றுவிட்டார் என்பதைக் கணக்கில்கொண்டால், சீமானின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

கம்யூனிஸ்ட்டுகளின் நிலை

மக்களிடம் மிகவும் நெருக்கமான உறவில் இருப்பவர்கள், மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் என்று பெயரெடுத்த கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலையைத்தான் உருவாக்கியிருக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 62 ஒன்றிய ஊராட்சி உறுப்பினர்களை வென்றிருக்கிறது என்றால், மார்க்சிஸ்ட் கட்சி 33 ஒன்றிய உறுப்பினர்களை மட்டுமே வென்றிருக்கிறது.

பொதுவுடைமை இயக்கத்தின் கோட்டையாக வர்ணிக்கப்படும் நாகை மாவட்டத்திலேயே மார்க்சிஸ்ட் கட்சியினர் தாங்கள் போட்டியிட்ட பெருமளவிலான இடங்களில் வெற்றியைத் தவறவிட்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் மலர்ந்து மணம்வீசியதாகச் சொல்லப்படும் தஞ்சை, நாகை மாவட்டங்களில் பாஜகவும் தனது கணக்கைத் தொடங்கியிருக்கிறது.

கூட்டணிக்குத் தலைமைவகித்த திமுக, அதிமுக கட்சிகளைத் தவிர்த்து, மற்ற கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளாட்சி உறுப்பினர் பதவிகள் எதையும் கைப்பற்றவில்லை. சிறிய கட்சிகளுக்கு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போது மிகப் பெரிய வாக்காளர் எண்ணிக்கையைச் சந்திப்பது சவாலாக இருக்கலாம். ஆனால், உள்ளாட்சித் தேர்தலின் போக்கு வேறுவிதமானது. உள்ளூர்த் தலைவர்கள் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தாலே போதுமானது, அவர்களின் வெற்றி கட்சியின் வெற்றியாகவும் கணக்கில் கொள்ளப்படும். பிரதான கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு உள்ளூர்த் தலைவர்களுக்கான தட்டுப்பாடு வெளிப்படையாகவே தெரிகிறது.

தேர்தல் காலக் கூட்டணி ஒன்றே சட்டமன்றத்திலும் மக்களவையிலும் ஒருசில இடங்களைப் பெற்றுத்தந்துவிடும் என்று நினைப்பில் இருக்கிற சிறிய கட்சிகள், தங்களது உண்மையான வாக்குவங்கிகளை மேலும் சுருங்கச் செய்துகொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற மக்களவைக் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து பேரம் பேசுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் இழந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் இதைப் புரிந்துகொள்ளலாம்.

அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கும் திமுகவும் அதிமுகவும் அடுத்த சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணிக் கட்சிகளுக்கு இன்னும் குறைவான இடங்களையே ஒதுக்கிக்கொடுக்கும் என்று இப்போதே கணிப்புகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இது எல்லாம் ஒருபுறமிருக்கட்டும். நடந்து முடிந்த தேர்தல், உண்மையிலேயே உள்ளாட்சித் தேர்தலின் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறதா என்ற கேள்வியும்கூட இந்நேரத்தில் எழுகிறது.

தங்குதடையின்றிப் பணவெள்ளம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே பணவெள்ளம் தங்குதடையின்றிப் பாய்ந்திருக்கிறது. மதுவெள்ளமும் தன் பங்குக்கு நீராட்டியிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களில் இதுவரை இந்த அளவுக்குப் பணமும் மதுவும் விநியோகிக்கப்பட்டதில்லை. எப்போதும் ஒரு சிலர், உள்ளூரில் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்வதற்காக வாக்குக்குப் பணம் கொடுத்து வெற்றிபெற முயற்சிப்பார்கள்.

ஆனால், இந்த முறை வாக்குக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் விதிவிலக்கின்றி எல்லா இடங்களுக்கும் பரவியிருக்கிறது. கட்சி பேதமின்றி சகலருமே இதில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஊரகப் பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் தாங்களே தீர்மானித்துக்கொள்கிற வாய்ப்பை உள்ளாட்சி அமைப்புகள் வழங்குகின்றன. ஆனால், நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதில் பணம்தான் செல்வாக்கு செலுத்துகிறது என்றால் அதன் முடிவு என்னவாக இருக்கும்?

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குக் குறைந்தபட்சம் இருபது லட்சம் தொடங்கி ஐம்பது லட்சங்கள் வரையிலும் வேட்பாளர்கள் செலவுசெய்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு முதலீடு. ஐம்பது லட்சத்தைச் செலவழித்தால், ஐந்தாண்டுகளில் தவணை முறையில் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புதான் வாக்குகளை விலைக்கு வாங்க அவர்களைத் தூண்டுகிறது.

இனிமேல், தெருவிளக்கு வாங்குவது தொடங்கி குடிநீர் இணைப்புகளைச் சரிபார்ப்பது வரைக்கும் எழுதப்படும் கணக்குகள் சரியாகத்தான் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? ஏரி, குளங்கள் பராமரிப்பு; தேசிய அளவிலான சமூக நலத் திட்டங்கள் என எல்லாவற்றிலும் ஊழலுக்கான வாய்ப்புகளை உருவாக்கிவிட்டிருக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகள்தான் உண்மையான அதிகாரப் பரவலாக்கம்.

அந்த அதிகாரத்தைப் பணத்துக்கு விற்பதைத் தடுக்க வேண்டும் என்றால், சமூகத் தணிக்கையை இன்னும் தீவிரமாகக் கையிலெடுக்க வேண்டும். சமூக நலத் திட்டங்கள் ஒவ்வொன்றும் உரிய வகையில் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதைச் சரிபார்ப்பது மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளின் ஒவ்வொரு பணியும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்தாக வேண்டும்.

கிராம சபைக் கூட்டங்கள் குறித்த விழிப்புணர்வே இன்றைய உடனடித் தேவை.இனிமேல், தெருவிளக்கு வாங்குவது தொடங்கி குடிநீர் இணைப்புகளைச் சரிபார்ப்பது வரைக்கும் எழுதப்படும் கணக்குகள் சரியாகத்தான் இருக்கும் என்பது என்ன நிச்சயம்? ஏரி, குளங்கள் பராமரிப்பு; தேசிய அளவிலான சமூக நலத் திட்டங்கள் என எல்லாவற்றிலும் ஊழலுக்கான வாய்ப்புகளை உருவாக்கிவிட்டிருக்கிறோம்.

- செ.இளவேனில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x