Published : 06 Jan 2020 11:46 AM
Last Updated : 06 Jan 2020 11:46 AM

ஜார்க்கண்ட்: புதிய அரசு...பெரும் சவால்கள்!

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டதால், அவரது பதவியேற்பு விழா கவனத்துக்குரிய நிகழ்வாகவும் மாறியது. ரகுவர்தாஸ் தலைமையிலான பாஜகவுக்கு எதிராகத் தெளிவாக திட்டமிட்டுக் களமிறங்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி 81 சட்டமன்ற இடங்களில் 47 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

ஊரக, பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் பாஜகவின் ஆட்சி தொடர்வதை விரும்பவில்லை. பாஜக ஆட்சியில் குத்தகை, நில உரிமைச் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்ததை அவர்கள் விரும்பவில்லை. அது பழங்குடியினரிடத்தில் இடப்பெயர்வு அச்சத்தை உருவாக்கியது. இச்சட்டங்களுக்கு எதிராக 2017-ல் நடத்தப்பட்ட போராட்டங்களில் தொடர்புடையவர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு தனது முதல் முடிவாக எடுத்துள்ளது. முந்தைய ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஹேமந்த் சோரனும் அவரது அமைச்சரவையும் மிகப் பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். சமூகப் பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் வறுமையாலும் வேலைவாய்ப்பின்மையாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பட்டினிச் சாவுகளின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்துள்ளது. உணவு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே அதற்கு முக்கியமான காரணமாகும்.

பொது விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்தி ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக ஆதார் பயோமெட்ரிக் மூலமாகத் தவறான பயனாளிகளைக் களையும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முந்தைய ஆட்சியில் சமூக நலத் திட்டங்களின் தோல்விக்கு முக்கியக் காரணமானது.

ஊரக மற்றும் பழங்குடியினர் நலன் சார்ந்த ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறையும் கவனமும் செலுத்தாமல் ஜார்க்கண்டால் தனது மேம்பாட்டு இலக்குகளை அடைய முடியாது. தற்போது பதவியேற்றுள்ள கூட்டணி அரசு ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களின் சமூக நலத்திட்டங்களை முன்னுதாரணமாகக் கொண்டு மேம்பாடுகளை எட்ட வேண்டும். ஜார்க்கண்ட் எதிர்நோக்கியுள்ள மற்றுமொரு முக்கியப் பிரச்சினை, மாநிலத்தின் மொத்த உற்பத்தி விகிதம் குறைவாக இருப்பதும், அரசு கடன் விகிதம் அதிகமாக இருப்பதும் ஆகும்.

இயற்கையிலேயே கனிம வளம் மிகுந்த மாநிலமாக இருந்தாலும், கடந்த காலங்களில் அவற்றை முறையாகப் பயன்படுத்தி மேம்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளைக் காட்டிலும் ஊழலுக்கான வாய்ப்புகளாக்கிக்கொண்டதே அதிகம். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி, ஜார்க்கண்ட் மாநிலம் தனியாக உருவாக வேண்டும் என்ற இயக்கம் எந்த நோக்கத்தில் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை மனதில் கொள்ள வேண்டும். இயற்கை வளங்களின் சாபங்களான ஊழல் வாய்ப்புகளுக்கு இடங்கொடாமல் அவை மக்களுக்கே பயன்படும் வகையில் நீடித்த, நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கு உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x