Published : 03 Jan 2020 08:07 AM
Last Updated : 03 Jan 2020 08:07 AM

மகுடம் சூடிய ஹம்பி: வெற்றிகள் தொடரட்டும்!

கடந்த சனிக்கிழமை இரவு மாஸ்கோவில் நடந்த ‘ரேபிட்’ சதுரங்கப் போட்டியில் சீனியர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் கோனேரு ஹம்பி. அவருடைய திறமை, கவனம், உழைப்பு ஆகியவற்றால் இப்பட்டத்தை வெல்வார் என்று முன்பே எதிர்பார்க்கப்பட்டவர். பெண்களுக்கான ‘ரேபிட்’ சாம்பியன் போட்டியில் அவர் பெற்றிருக்கும் வெற்றி, சதுரங்கத்தில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்தியா எட்டியிருக்கும் மிக முக்கியமான சாதனையாகும். ஆடவர், மகளிர் இரு பிரிவுகளிலும் உலக ‘ரேபிட்’ சாம்பியன்களைக் கொண்டிருக்கும் மிகச் சில நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் சேர்ந்திருக்கிறது.

உலக சதுரங்க சாம்பியன் போட்டிகளை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளோடு ஒப்பிட்டால், ‘ரேபிட்’ உலக சாம்பியன் போட்டியை சர்வதேச ஒருநாள் ஆட்டங்களோடும் டி-20 ஆட்டங்களோடும் ஒப்பிடலாம். உலக சாம்பியன் போட்டிகளில் ஒவ்வொரு நகர்த்தலுக்கு முன்பும் வீரர்கள் போதுமான நேரம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், தவறுதல்களுக்கான வாய்ப்பைக் குறைக்க முடியும். ‘ரேபிட்’ போட்டிகள் அப்படியல்ல. எனினும், ஹம்பி விரைவான உத்திகளைக் கையாண்டு பழகியதால், இப்பட்டத்தைப் பெறுவது அவருக்கு எளிதாகிவிட்டது. சீனாவின் லீ டிங்ஜியுடனான டை-பிரேக் ஆட்டத்தின் பதற்றத்தை வெற்றிகரமாகக் கையாண்டு சாம்பியன் பட்டத்தை அவர் கைப்பற்றியுள்ளார்.

முன்னதாக, ரஷ்யாவிலும் மொனாகோவிலும் நடைபெற்ற பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் சதுரங்கப் போட்டிகளில் ஹம்பி தனது திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அடுத்த உலக சாம்பியன் போட்டி களின் ஒரு பகுதியாக, அவர் தற்போது கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் முன்னணியில் இருக்கிறார். இந்நிலையில் மாஸ்கோவில் நடந்த உலக ‘ரேபிட்’ போட்டிகளில் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது முக்கியமானது. எனினும், உலக சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முற்றிலும் தகுதியும் திறமையும் மிக்க வீரர் அவர்.

கோனேரு ஹம்பி 1997-ல் பத்து வயதுக்குக் கீழ் உள்ள பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதிலிருந்து விஸ்வநாதனுக்குப் பிறகு இந்தியாவின் சதுரங்க முகமாகத் தன்னை நிரூபிக்கத் தொடங்கினார். 20 வயதுக்குக் கீழ் உள்ள ஜூனியர் பிரிவில் 14-ம் வயதிலேயே பெற்றார். 12 வயதுக்குக் கீழ் உள்ள வீரர்களுக்கான ஆசிய சிறுவர் சாம்பியன் போட்டியில் பெண்களும் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். அந்தப் போட்டியில் எலோ அளவுகோலின்படி 2,600 புள்ளிகளைத் தாண்டிய இரண்டாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

எப்படியோ, உலக சாம்பியன் பட்டம் மட்டுமே அவரது பிடியிலிருந்து நழுவிக்கொண்டிருக்கிறது. உலக சாம்பியன் போட்டிகளில் அவர் ஒரு முறை விளையாடியிருக்கிறார்; அரையிறுதிப் போட்டிகளில் மூன்று முறை பங்கேற்றிருக்கிறார். 2011-ல் உலக சாம்பியன் பட்டத்தை கோ யீபானிடம் பறிகொடுத்தாலும், ஹம்பி அதைப் பெறுவார் என்று நம்பிக்கை கொள்வதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன. உலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை பி.வி.சிந்து வென்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவின் விளையாட்டுத் துறை கொண்டாடி மகிழ்வதற்கு மற்றுமொரு தருணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x