Published : 02 Jan 2020 08:00 AM
Last Updated : 02 Jan 2020 08:00 AM

360: இனி பெண்களும் இரவு நேரப் பணிக்குச் செல்லலாம்...

இனி பெண்களும் இரவு நேரப் பணிக்குச் செல்லலாம்...

பெண்கள் இரவு நேரப் பணிகளுக்குச் செல்வதற்கு வாய்ப்பாக ‘கர்நாடக கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் திருத்தச் சட்டத்துக்கு' ஒப்புதல் அளித்திருக்கிறது, கர்நாடக அமைச்சரவை. அடுத்த கூட்டத் தொடரில் இச்சட்டத் திருத்தம் விவாதிக்கப்படவிருக்கிறது. இதுவரையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டுமே இரவில் பெண்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுவந்தது. இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால் உணவகங்கள், திரையரங்குகள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் பெண்கள் இரவுப் பணியில் பங்குபெறலாம். ஆனால், அதற்குப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். பெண் ஊழியரிடமிருந்து எழுத்துபூர்வமான சம்மதம் பெற வேண்டும். அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து பணிசெய்யும் இடத்துக்கு வரவும் திரும்பிச் செல்லவும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள் அளிக்கப்பட வேண்டும். சுழற்சி முறையில்தான் பெண்களுக்கு இரவுப் பணியை ஒதுக்க வேண்டும். அதற்குத் தேவையான அளவில் பாதுகாப்பு ஊழியர்களையும் நியமிக்க வேண்டும். இலவச குழந்தைக் காப்பகங்கள் இருக்க வேண்டியது மிக அவசியம்.

இந்த ஆண்டின் முதல் விருந்தினர்

இந்தியாவுக்கு 2020-ல் வருகை தரவிருக்கும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருப்பவர் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன். பிரதமர் மோடியையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திக்கவிருக்கும் ஸ்காட் மாரிசன், புவியரசியல் தொடர்பான ரைஸினா பேச்சுவார்த்தையில் உரையாற்றுகிறார். தவிர, மும்பை மற்றும் பெங்களூரு மாநகர நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். ஆஸ்திரேலியப் பிரதமரை அடுத்து இந்தியா வரும் இரண்டாவது விருந்தினர், பிரேசில் பிரதமரான ஜெய்ர் போல்சோனரோ. குடியரசு விழாக் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினரும் அவர்தான்.

மூன்று ஆண்டுகளில் நடக்கலாம்!

பூமியில் நடந்தே செல்லக்கூடிய நீண்ட பாதை ஒன்றை கூகுள் மேப்ஸ் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ள அகுல்ஹாஸ் முனையில் தொடங்கி, வடகிழக்கில் ரஷ்யாவில் உள்ள மகதான் நகரம் வரையிலான பாதைதான் அது. இதன் நீளம் 14,334 மைல். இந்தத் தொலைவுக்குள் நதிகள் ஓடினாலும் அவற்றைப் படகுகளில் கடக்க வேண்டியதில்லை. பாலங்கள் வழியாக நடந்தே கடக்கலாம். சொல்வதற்குச் சுலபமாக இருந்தாலும் இந்தத் தொலைவை நடந்தே கடப்பது மிகவும் கடினம். ஏனெனில், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், இயற்கை இன்னல்கள், போரால் சின்னாபின்னமாகியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் போன்ற காரணங்கள் இந்தப் பாதையை நடந்து கடப்பதைக் கடினமாக்குகின்றன. குறிப்பாக, சஹாரா பாலைவனத்தின் வெப்பம் ஒரு துருவம் என்றால், அதற்கு நேரெதிராக இருக்கிறது ரஷ்யாவில் நிலவும் அதிகக் குளிர். இதையெல்லாம் தாக்குப்பிடிக்கும் ஆடைகள், பிற சாதனங்களைச் சுமந்து செல்ல வேண்டும். ஓய்வெடுக்காமல் நடந்தால், இந்தத் தொலைவைச் சுமார் 200 நாட்களில் கடந்துவிடலாம். ஓய்வெடுத்து மிதமான வேகத்தில் நடந்தால் மூன்று ஆண்டுகள் ஆகும். என்ன, நடந்து பார்க்கலாமா?!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x