Published : 01 Jan 2020 10:59 AM
Last Updated : 01 Jan 2020 10:59 AM

முகங்கள் 2019

2019-ன் முகங்கள் இவை. இந்தப் பட்டியல், சாதனையாளர்கள் அல்லது வெற்றியாளர்கள் என்பன போன்ற பட்டியல் அல்ல; கடந்த ஆண்டில் தாக்கங்களை உருவாக்கியவர்களின், அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியல். தமிழர் கண்களினூடே நாம் இந்தியாவைப் பார்க்கிறோம். தேசிய அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தமிழக முகங்களையும், தமிழக அளவில் தாக்கங்களை உண்டாக்கிய தேசிய முகங்களையுமே நாம் பட்டியலிட்டிருக்கிறோம்.

நரேந்திர மோடி, அமித் ஷா- இரு பெரும் சக்திகள்

இவர்கள்: இந்திய வரலாற்றை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் உருவாக்கிய பேரலை இந்த ஆண்டின் மக்களவைத் தேர்தலில் நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு 303 தொகுதிகளையும், 37.6% வாக்குகளையும் அள்ளிக்கொடுத்தது.
இவர்கள்: நாட்டின் பெரிய கட்சியான பாஜகவை முழுக்க தம் வசம் கொண்டுவந்திருப்பதோடு, இம்முறை அமைச்சரவையிலும் கை கோத்திருக்கிறார்கள். பிரதமர், உள்துறை அமைச்சர் என்ற இரு பெரும் பதவிகள், கட்சியிலும் வலுவான செல்வாக்கு இரண்டையும் சேர்த்து, இந்தியாவின் மிக சக்தி வாய்ந்த இருவர் என்ற இடத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்: இந்த ஆட்சியின் முதல் ஆறு மாதங்களில் மூன்று பெரும் முடிவுகளை முன்னெடுத்தார்கள். ஜம்மு-காஷ்மீர் மீதான நடவடிக்கை, முத்தலாக் நடைமுறையைத் தடைசெய்யும் சட்டம், குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம். அடுத்தடுத்து இவர்கள் எடுக்கும் பல நடவடிக்கைகள் ‘ஒரே நாடு – ஒரே முறைமை’ எனும் ஒற்றைமயமாக்கலை நோக்கி நாட்டை நகர்த்துகின்றன. ஜனநாயகரீதியாகப் பெரும் எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் சந்திக்கிறார்கள்.

இவர்கள்: தங்கள் கட்சியின் போக்கைத் தீர்மானிப்பதோடு எதிர்க்கட்சிகளின் போக்கையும் தீர்மானிக்கிறார்கள். நாட்டின் எவ்வளவு பெரிய பிரச்சினை ஒன்றிலிருந்தும் எல்லோர் கவனத்தையும் இவர்களால் வேறொரு பக்கம் திருப்ப முடிகிறது. உள்நாட்டில் தங்களுடைய சர்ச்சைக்குரிய முடிவுகளுக்கான நியாயத்தை உருவாக்குவதோடு, சர்வதேச அளவிலும் பெரிய எதிர்ப்புகள் உருவாகாத வண்ணம் ராஜாங்க உறவைப் பராமரிக்கிறார்கள்.

ரஞ்சன் கோகோய்-சர்ச்சைகளின் நீதிபதி

இவர்: இந்திய உச்ச நீதிமன்றம் பெரும் சர்ச்சைகளை எதிர்கொண்ட காலம் ஒன்றின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றார். முன்னதாக, சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே முதல் முறையாக, “நீதித் துறையில் அரசின் தலையீடு இருக்கிறது” என்று குற்றஞ்சாட்டிய நீதிபதிகளில் ஒருவர் இவர். ஆனால், இவருடைய காலகட்டம் அதிகம் சர்ச்சைக்குள்ளான காலகட்டங்களில் ஒன்றாகவே கழிந்தது.

இவர்: உச்ச நீதிமன்றப் பெண் ஊழியர் ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானார். பெரும் சர்ச்சையை உண்டாக்கிய அந்தப் புகார் கையாளப்பட்ட விதமும் விவாதமானது.

இவர்: தனது பதவிக்காலத்தின் இறுதியில் கால வரம்பு நிர்ணயித்து, மூன்று முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட காரணமாக இருந்தார். மிக நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு ராமர் கோயில் தரப்புக்கு சாதகமாக அமைந்தது. சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்லலாம் என்ற முந்தைய தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு மேல் விசாரணைக்குச் சென்றது. முந்தைய மோடி அரசு எதிர்கொண்ட ரஃபேல் விமான பேர ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, ‘ஊழல் புகாருக்கு முகாந்திரம் இல்லை’ என்று தள்ளுபடிசெய்யப்பட்டது.

இவர்: ஜம்மு-காஷ்மீர் மீதான மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மனுக்களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் ஒத்திப்போட்டது கடும் விமர்சனங்களுக்குள்ளானது.

அபிஜித் பானர்ஜி- நோபல் இந்தியன்

இவர்: பொருளாதாரத்துக்கான நோபல் விருதை மனைவி எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரெமர் இருவருடன் சேர்ந்து பெற்றார். உலக வறுமையைப் போக்கும் வழிமுறையைச் சோதனை அடிப்படையில் உருவாக்கி, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அமல்படுத்திவருவதற்காக இவ்விருது.

இவர்: வளர்ச்சிப் பொருளாதாரத் துறையில் நோபல் வாங்கியவர்களில் பத்தாவது நபர். தனது மனைவியுடன் இணைந்து எழுதிய ‘குட்
எகனாமிக்ஸ் ஃபார் ஹார்ட் டைம்ஸ்’ புத்தகம் சர்வதேசக் கவனம் பெற்றது. வறுமை ஒழிப்புக்கான இவருடைய யோசனைகளைப் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

கமல்ஹாசன்- தமிழ் சினிமாவின் பெருமிதம்

இவர்: இந்த ஆண்டு தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடியபோது, இந்தியத் திரையுலகில் இவருடைய திரைப் பயணத்தின் வயது 60 ஆகியிருந்தது. இந்தியத் திரை வானின் மகத்தான நட்சத்திரத்தைத் திரைக் கலைஞர்கள், ரசிகர்களோடு சேர்ந்து ஒட்டுமொத்த தமிழகமும் வாழ்த்தியது.

இவர்: சினிமாவைத் தன் உயிராக்கிக்கொண்டவர். வணிகரீதியாகவும் வெற்றிக் கலைஞர் என்றாலும், சினிமாவை வெறும் வியாபாரமாகக் கருதாதவர்; காலத்தே முந்தி செய்த இவருடைய பல முயற்சிகள் தோற்றாலும், அசராதவர். நடிப்பு, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் எனத் திரைத்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தன் முத்திரையைப் பதித்தவர்; தமிழ் சினிமாவின் வளர்ச்சியோடும் வரலாற்றோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டவர்.

இவர்: சினிமாவில் மட்டுமல்ல; பொதுவெளியிலும் கருத்து சொல்வதில் துணிச்சல்காரர். காந்தியையும் பெரியாரையும் இணைத்துப் பேசுபவர். பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து அன்றைய பிரதமர் நரசிம்ம ராவிடமே பேசியதில் தொடங்கி தமிழ் அடையாளத்துக்காக தேசிய ஊடகங்களில் வாதாடியது வரை பல சந்தர்ப்பங்களில் துணிச்சலான கருத்துகளுக்காக நினைவுகூரப்படுபவர்.

இவர்: சொன்னபடி சொன்ன நேரத்தில் அரசியலில் இறங்கினார்.

ஜெகன் மோகன் ரெட்டி- இளம் சூறாவளி

இவர்: ஆந்திராவின் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பின் ஆந்திர காங்கிரஸில் அடுத்த தலைவராக உருவெடுத்தார்; அன்றைய காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்களில் 157-ல் 150 பேர் இவரை ஆதரித்தும், உள்ளூர் எண்ணத்தைக் கட்சியின் தேசியத் தலைமை புறக்கணித்தபோது கட்சியிலிருந்து விலகினார்; பத்தே ஆண்டுகளில் மாநிலத்தில் காங்கிரஸை ஒன்றுமில்லாமல் ஆக்கியதோடு மாநிலத் தலைவர்கள்தான் ஒரு தேசியக் கட்சிக்கான உறுதியான அஸ்திவாரம் என்று டெல்லிவாலாக்களுக்கு நிரூபித்திருக்கிறார்.

இவர்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய வேகத்தில், தலைநகரத்திலிருந்து அறிக்கை அரசியல் செய்யாமல், மாநிலம் முழுக்கப் பயணித்தார். ஆந்திரத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளில் 151-ஐ சொந்தமாக்கினார்.

இவர்: ஆட்சியில் பழிவாங்கும் சில நடவடிக்கைகள், சர்ச்சைக்குரிய சில சட்டங்கள் போன்ற சறுக்கல்கள் இருந்தாலும், அதிகாரப்பரவலாக்கலில் காட்டும் ஆர்வம் எல்லா மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. ஐந்து துணை முதல்வர்கள், மூன்று தலைநகரங்கள், கிராமங்கள்தோறும் கிராமத் தலைமைச் செயலகம் ஆகிய திட்டங்கள் கவனம் ஈர்க்கின்றன.

காஷ்மீரிகள்- இருண்ட நாட்கள்

இவர்கள்: கடந்த ஆண்டில் மூன்று பேரிடிகளை எதிர்கொண்டார்கள். சுதந்திர இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கும் நரம்பாகவும், பிற்பாடு அந்தச் சிறப்புரிமை தொடர்வதற்கான அரசமைப்பு ஏற்பாடாகவும் விளங்கிய சட்டப் பிரிவு 370 ரத்தை எதிர்கொண்டார்கள். காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்தார்கள். காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதன் விளைவாக லடாக்கை இழந்தார்கள்.

இவர்கள்: ஆகஸ்ட் 5 அன்று இழந்த இயல்பு வாழ்க்கை இன்னும் அங்கு முழுமையாகத் திரும்பவில்லை. முக்கியமான அரசியல் தலைவர்கள் சிறையில் / வீட்டுக் காவலில் இருக்கிறார்கள். ஊடகங்கள் கடும் அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இணையப் பயன்பாடு கட்டுப்படுத்தப்படுவதோடு, கடும் கண்காணிப்பும் நிலவுகிறது. தொடரும் இயல்புநிலைப் பாதிப்பால் கிட்டத்தட்ட ரூ.20 ஆயிரம் கோடி வணிகத்தில் இழப்பு ஏற்பட்டது. லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

லிடியன் நாதஸ்வரம்- இசை மகன்

இவர்: சென்னையைச் சேர்ந்த இளம் பியானோ கலைஞர். அமெரிக்கத் தொலைக்காட்சி நடத்திய போட்டியில் வென்று 10 லட்சம் டாலர் தொகையை பரிசாகப் பெற்றார். இருநூறு நாடுகளிலிருந்து திறமைசாலிகள் பங்கேற்ற நிகழ்ச்சி அது. சூட்டோடுசூடாக மலையாளத் திரைப்படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பையும் ஏற்றார்.

இவர்: தனது 2 வயதில் இசைக்கத் தொடங்கினார். எல்லா பாடங்களும் வீட்டில்தான். 10-வது வயதில் லண்டன் ட்ரினிட்டி கல்லூரியின் எட்டாவது கிரேடில் முதலிடம் பெற்றார்.

நிர்மலா சீதாராமன்- பெண் சக்தி

இவர்: சுதந்திர இந்தியாவின் முதல் முழுநேரப் பெண் நிதியமைச்சர் என்ற பெருமைக்குரியவர்; ஆர்.கே.சண்முகம் செட்டியார்,
டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம், ப.சிதம்பரம் வரிசையில் தமிழகத்தின் அடுத்த பிரதிநிதி.
இவர்: அடிப்படையில் பொருளியல் பட்டதாரி. மோடியின் முந்தைய ஆட்சியில் அமலாக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் இரண்டின் தொடர் விளைவாக நாடு தீவிரமான ஒரு பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும்போது நிதித் துறையின் சுக்கானைப் பிடித்து நிலைமையைச் சமாளிக்க முற்படுகிறார். இரட்டை இலக்கத்துக்குச் சென்றிருக்கும் உணவுப் பணவீக்கம், நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டிவிட்டிருக்கும் நிதிப் பற்றாக்குறை, பொதுத் துறை வங்கிகளைத் தள்ளாடவைக்கும் வாராக் கடன்கள், நுகர்வுக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் உற்பத்தி, ஆவியாகிக்கொண்டிருக்கும் வேலைவாய்ப்புகள் என்று நாட்டின் அமைச்சரவையிலேயே அதிகமான சவால்களை எதிர்கொள்கிறார்.

இவர்: தன்னுடைய அமைச்சகப் பணிகளைத் தாண்டி நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அரசு மீதும் கட்சி மீதும் வீசப்படும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் முக்கியமான கேடயங்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

மு.க.ஸ்டாலின்- தனித்துவமான மாநிலக் குரல்

இவர்: திமுக மிக சவாலான காலகட்டம் ஒன்றை எதிர்கொள்ளும் சூழலில் அதன் தலைவராக இருக்கிறார். எட்டாண்டு காலம் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தில் இல்லாததோடு, அடுத்தடுத்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள், ஒரு மக்களவைத் தேர்தல் தோல்வியைச் சந்தித்திருந்த கட்சிக்கு இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தார். தமிழகம் - புதுவையின் 40 தொகுதிகளில் 39 இடங்களை வென்றது திமுக கூட்டணி. மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியானது திமுக.

இவர்: காங்கிரஸே தன்னுடைய கூட்டணியின் பிரதம வேட்பாளராக அறிவிக்க தயங்கிய சூழலில் ராகுல் காந்தியை இவர் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்; ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையக் குரல் கொடுத்தார்; உரிய கவனம் அளிக்கப்படாத அந்த வியூகம் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தேர்தல் முடிவுகள் கூறின.

இவர்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் வரிசையில் சித்தாந்த அடிப்படையில் பாஜகவால் உக்கிரமாகப் பார்க்கப்படும் சூழலில் உள்ளதை உணர்ந்திருந்தும் தன்னுடைய எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார். முந்தைய ஆட்சியின் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு முடிவு தொடங்கி இந்த ஆட்சியின் காஷ்மீர் மீதான நடவடிக்கை முடிவு வரை பல விவகாரங்களில் இவருடைய கட்சியின் குரல் எதிர்த்து ஒலித்தது. மாநில உரிமைகளுக்காக இவர் தொடர்ந்து கொடுத்துவரும் குரல், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் தமிழகத்தின் மதிப்பையும் உயர்த்துகிறது.

கோபக்கார மாணவர்கள்- தார்மீக எழுச்சி

இவர்கள்: மத்திய அரசு குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவந்தபோது, சமத்துவத்துக்காக தார்மீக உந்துசக்தியால் ஒன்றுதிரண்டார்கள். அரசியல் கட்சிகளே அறிக்கை அரசியலோடு நின்ற சூழலில், ஒட்டுமொத்த குடிமைச் சமூகத்தையும் போராட்டத்தை நோக்கித் தள்ளினார்கள்.

இவர்கள்: போராட்டத்தின்போது வன்முறையில் இறங்கியதைத் தவிர்த்திருக்கலாம் என்றார்கள் ஒரு பிரிவினர்; காவல் துறையினரும் ஆட்சியாளர்களும் மாணவர்களைக் கனிவோடு அணுகவில்லையே என்றார்கள் இன்னொரு பிரிவினர்; இரு பக்கமும் அது நடந்திருக்கலாம் என்றார்கள் நடுநிலையாளர்கள். எப்படியும் நாட்டின் பெரும் பகுதியில் சாத்வீக வழியையே மாணவர்கள் தேர்தெடுத்தனர். காவலர்களுக்குப் புன்னகையோடு ரோஜாப்பூ அளிக்கும் கல்லூரி மாணவியின் படம் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்தது.

இவர்கள்: போராட்டத்தினால் ஒன்றிணைந்து எழுப்பிய ஒருமித்த குரல் மத்திய அரசின் முடிவை அசைத்துப்பார்த்தது. இன்னமும் தன் நிலைப்பாட்டில் அரசு உறுதி காட்டுகிறது என்றாலும், “மக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்” என்ற அரசின் அறிவிப்பை இவர்களது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ராகுல் காந்தி- திசை அறியா மாலுமி

இவர்: நீண்ட பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சியை அதன் மிக பலவீனமான, இடர்கள் நிறைந்த காலகட்டத்தில் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் சுமக்கிறார். கட்சித் தலைவராக இவர் முன்வரிசையில் நின்று சந்தித்த தேர்தலில் கடுமையாக உழைத்தார்; ஆனால், வியூகங்களில் சொதப்பினார். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் பெரும் தோல்வி கட்சியினர் யாராலும் யூகிக்க முடியாததாக இருந்தது. நேரு குடும்பத்தின் கோட்டை என்று சொல்லப்படும் தன்னுடைய அமேதி தொகுதியையே தேர்தலில் ராகுல் பறிகொடுத்தது கட்சி எவ்வளவு பெரிய சிக்கலில் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவதானது.

இவர்: தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு கட்சியை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்காமல் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்தது காங்கிரஸ் மீது விழுந்த அடுத்த பேரிடியானது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் தலைமை இல்லா கட்சியாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தள்ளாடியதும், மீண்டும் வேறு வழியின்றி முன்னாள் தலைவரும் ராகுலின் தாயாருமான சோனியாவையே தலைவராக தேர்ந்தெடுத்ததும் அரசியல் அவலமானது.

இவர்: எல்லா பலவீனங்களைத் தாண்டியும் மோடி – ஷா கூட்டணியை எதிர்கொள்ளும் அசாத்திய துணிச்சல்காரராகப் பார்க்கப்படுகிறார்.

அஸிம் பிரேம்ஜி- வணிகத் துறையில் ஒரு ரத்தினம்

இவர்: இந்தியாவின் மிகப் பெரும் ஐடி நிறுவனங்களுள் ஒன்றான ‘விப்ரோ’வின் தலைவராகவும், இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர்களுள் ஒருவராகவும் அறியப்பட்டவர் என்றாலும், தயாள குணத்தாலேயே தன்னை நினைவுகூரப்படும்படி வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொண்டவர். வணிகக் கலாச்சாரத்துக்கான இலக்கணமாக வாழ்ந்தார்.

இவர்: 2013-ல் தனது சொத்தில் பாதியை சமூகத்துக்குக் கொடுப்பதாக உறுதியளித்ததோடு அந்த வருடம் ரூ.8,000 கோடியைத் தந்தார். அடுத்த வருடம் ரூ.12,316 கோடி. 2015-ல் கொடுத்தது ரூ.27,514 கோடி. கடந்த மார்ச் மாதம் அவரது விப்ரோ பங்கிலிருந்து 34% - அதாவது ரூ.52 ஆயிரம் கோடியைக் கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக, இதுவரை அவர் சமூகத்துக்காகப் பங்களித்தது ரூ.1.4 லட்சம் கோடி.

ப்ரியங்கா சோப்ரா- சர்வதேச மின்னல்

இவர்: அதிகம் பேரால் கூகுளில் தேடப்பட்ட பிரபலங்களுள் ஒருவர்; கடந்த ஆண்டில் அவருடைய வெளியீடு ஒன்றும் இல்லை என்றாலும், சர்வதேச அளவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இவர்: முன்னாள் உலக அழகி, நடிகை, தயாரிப்பாளர், முதலீட்டாளர் என்று பல முகங்களைக் கொண்டிருக்கிறார். யூனிசெஃபின் நல்லெண்ணத் தூதுவர் அடையாளத்தோடு ஜோர்டானில் இருக்கும் அகதிகளைச் சந்தித்தார்; அவர்களுடைய மறுவாழ்வுக்காகக் குரல் கொடுத்தார்.

இவர்: திருமணத்துக்குப் பின் வெளியிடும் படங்களும், காணொலிகளும் இந்தியப் பெண்களின் மண வாழ்க்கைக்கு உற்சாக அர்த்தம் கொடுக்கிறது. பெண் வாழ்க்கையின் சுதந்திரத்தை, கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x