Published : 30 Dec 2019 08:11 AM
Last Updated : 30 Dec 2019 08:11 AM

தருணங்கள் - 2019

நம்மிடமிருந்து நகர்ந்துகொண்டிருக்கும் 2019-ன் முக்கியத் தருணங்கள் இவை. உலகின் பெரும் வல்லரசான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் மீது கொண்டுவரப்பட்டிருக்கும் பதவிநீக்கத் தீர்மானம் ஒரு துருவம் என்றால், புதிய நம்பிக்கையோடு பார்க்கப்படும் உலகின் இளம் வயதுப் பிரதமரான பின்லாந்தின் சன்னா மரின் ஒரு துருவம். உலகம் இரண்டுக்கும் இடையே பயணிக்கிறது. வெனிசூலா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியும் பசி மரணங்களும் நம் காலத்தின் மானுடப் பேரவலம்; அமேசான் காடுகளைக் கருக்கும் தீ மனிதப் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைத்திடவில்லை; என்றாலும், உலகை ஆளும் கோமான்களை நோக்கிய கிரேட்டா தன்பர்க்கின் ‘என்ன துணிச்சல் உங்களுக்கு?’ என்ற கேள்வி, புதிய நம்பிக்கைகளுக்கு வித்திடுகிறது. 2019-க்கு விடைகொடுப்போம்!
சர்ச்சைகளின் அதிபர்

ஆண்டின் வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு காரணங்களுக்காக உலகால் பேசப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஹனோயில் கொரிய அதிபர் கிம்மைச் சந்தித்தார். ‘ஜி 20’ மாநாட்டில் அமெரிக்க நலனுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியமும் பிற நாடுகளும் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக யுத்தம் உலகின் பல நாடுகளில் பொருளாதாரச் சிக்கலை உண்டாக்கியது. எல்லாவற்றிலும் உச்சமாக அரசியல் எதிரியான ஜோ பிடேனின் மகன் ஹண்டர் பிடேன் மீது உக்ரைனில் உள்ள மோசடி வழக்கை விசாரிக்குமாறு அந்நாட்டு அதிபரை ட்ரம்ப் நிர்ப்பந்தப்படுத்தியது அவர் பதவிநீக்கத் தீர்மானத்தை எதிர்கொள்ள வழிவகுத்தது. மக்களவை அதற்கு ஆதரவாக வாக்களித்துவிட்ட நிலையில், மாநிலங்களவையில் முடிவு என்னவாகும் என்ற சூழலை எதிர்கொள்கிறார் ட்ரம்ப். தீர்மானத்தை ட்ரம்ப் தோற்கடிக்கலாம்; ஆனால், தார்மீகரீதியாகத் தோற்றுவிட்டார் என்கின்றனர் விமர்சகர்கள்.

வினையறுக்கும் பாகிஸ்தான்

அரைகுறை ஜனநாயகம், மத அடிப்படை தேசியம், பயங்கரவாத ஆதரவு ஆகிய வரலாற்றுத் தவறுகளின் நீட்சி பாகிஸ்தானை வாட்டுகிறது. நாட்டின் வருவாயில் பெரும் பகுதி கடன்களுக்கு வட்டி செலுத்தவும், ராணுவத்துக்குமே செல்வதால் பொருளாதார மீட்சிக்கு வழி தெரியவில்லை. ஏற்றுமதி சரிய, வேலைவாய்ப்பின்மை உயர, டாலருக்கு எதிரான பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பு 180 ரூபாயாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது. ராஜாங்கரீதியாகவும் செல்வாக்கு சரிகிறது. பத்தாண்டு காலம் நாட்டைக் கையில் வைத்திருந்த முன்னாள் சர்வாதிகாரி முஷாரபுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம். ராணுவத்துக்கும் ஆட்சிக்குமான உறவு துண்டிக்கப்பட்டு, இனியேனும் ஜனநாயகம் தழைக்குமா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

பெண் சக்தி

பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமையுடன் சன்னா மரின் (34) பதவியேற்றபோது இன்னொரு பெருமையும் அவருக்காகக் காத்திருந்தது; சமகால உலகின் இளவயது பிரதமர் என்பதுதான் அது. மொத்தமுள்ள 19 அமைச்சர்களில் பிரதமரையும் சேர்த்து 12 பேர் பெண்கள். ஏற்கெனவே பாலினச் சமத்துவத்தில் முன்னணியில் உள்ள பின்லாந்தை சன்னா மரின் முதலிடம் நோக்கி நகர்த்துவார் என்ற எதிர்பார்ப்பு பின்லாந்து மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. நடக்கட்டும்!

ஓங்கி ஒலிக்கும் சுயாட்சிக் குரல்

ஹாங்காங் இப்படிக் கிளர்ந்தெழும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்; கிட்டத்தட்ட இந்த வருடத்தின் பெரும் பகுதி போராட்டத்திலேயே கரைந்தது. சீன அரசின் மேலாதிக்க மனநிலைதான் முக்கியமான காரணம். ‘ஹாங்காங் கைதிகளை விசாரணைக்காக சீனாவுக்குக் கைமாற்றலாம்’ என்ற மசோதா மூலம் தொடங்கியது பிரச்சினை. லட்சக்கணக்கான மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அடிப்படையில், ஜனநாயகக் கலாச்சாரத்தில் பிணைந்த ஹாங்காங்கை சீனா படிப்படியாகத் தன்னுடைய அடக்குமுறைக் கலாச்சாரத்துக்குள் கொண்டுவந்துவிடுமோ என்ற மக்களின் அச்சம்தான் இந்தப் போராட்டங்களின் தாய் என்கிறார்கள் ஹாங்காங்கியர்கள். பேரரசை எதிர்கொள்ளும் துணிச்சலையும் வழியையும் ஒட்டுமொத்த சீனாவுக்கும் பரப்பிவிடுவார்களோ என்ற பதற்றத்தில் இருக்கிறது அரசு என்கிறார்கள் சீனர்கள். அதிகாரக்குவிப்பு சுயஅழிவுக்கான அழைப்பு என்கிறார்கள் அரசியல் வியூகர்கள்!

வளர்ச்சியின் பெயரால்…

உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளில் பரவிய பெருந்தீ சர்வதேசங்களையும் கதிகலக்கியது. தமிழ்நாட்டின் பரப்பைப் போல கிட்டத்தட்ட 42 மடங்கு அளவுக்கு, அமேசான் நதியின் படுகையில் 55,00,000 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருக்கும் இக்காடுகளின் அழிவு, இக்காடுகளில் 60% அளவைக் கொண்டிருக்கும் பிரேசில் ஆட்சியாளர்களை உலுக்கவில்லை என்பதுதான் சேதத்திலேயே பெரும் சேதம். “வளர்ச்சிக்குத்தான் முதலிடம்; அதற்காகத் தேவைப்படும் அளவுக்கு காட்டை நியாயமான அளவில் அழித்துக்கொள்ளலாம்” என்று பேசிய வலதுசாரி அதிபர் போல்சோனரோ, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக பிரேசில் மக்களைத் திருப்பிவிடவும் முற்பட்டார்.

பிரெக்ஸிட் தந்த பிரதமர்

முன்னாள் லண்டன் மேயர் என்ற அடையாளத்தோடு முடிந்திருக்க வேண்டிய போரிஸ் ஜான்சனுக்கு, பெரிய அரசியல் வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது பிரெக்ஸிட் விவகாரம். பிரதமர் தெரசா மேவால் இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடியாத சூழலில் அவர் பதவி விலக... பிரதமரானார் ஜான்சன். அவருடைய காய்நகர்த்தல்களுக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாத சூழலில் தேர்தலுக்கு வழிவகுத்தார். பிரெக்ஸிட் விவகாரத்தையே பிரதான விவாதமாகக் கொண்டு நடந்த தேர்தலில் அவருடைய மரபுத்துவக் கட்சி (கன்சர்வேடிவ்ஸ்) 365 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விரைவில் விலகுவோம்” என்ற ஜான்சனின் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிடைத்த வெற்றி இது என்றாலும், காரியங்கள் எல்லாம் சுமுகமாக முடிவது அவ்வளவு சுலபம் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக ஜான்சன் முன்வைக்கும் திட்டம் பிரிட்டனையே பிளந்துவிடும் அபாயம் மிக்கவை என்ற பேச்சும் அடிபடுகிறது. எனினும், காமன்வெல்த் மறுவுருவாக்கத்தில் ஜான்சன் முக்கியப் பங்கு வகிப்பார்.

கருந்துளையின் முதல் படம்

இதுவரை அறிவியலாளர்களின் ஊகத்திலும் கணினிக் கணக்குகளிலும் அறிவியல் எழுத்தாளர்களின் கற்பனையிலும் மட்டுமே திரிந்துகொண்டிருந்த கருந்துளை முதன்முறையாகப் படமெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை எடுத்தது ‘நிகழ்வெல்லை தொலைநோக்கி’ (Event Horizon Telescope) என்ற வலைப்பின்னலைச் சேர்ந்ததும் அண்டார்க்ட்டிகா, சிலி, ஸ்பெயின் போன்ற எட்டு இடங்களில் உள்ளதுமான மின்காந்தவியல் தொலைநோக்கிகளாகும். உலகெங்குமுள்ள 200 அறிவியலாளர்கள் இந்தத் திட்டத்துக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். பூமியிலிருந்து 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது மெஸ்ஸியே உடுமண்டலம். இதன் மையத்தில் உள்ள மிகப் பெரிய கருந்துளைதான் தற்போது படமெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கருந்துளை நமது சூரியனைப் போல 650 கோடி மடங்கு நிறை கொண்டதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

கலகக்காரக் கோமாளி

இந்த வருடத்தின் படங்களிலேயே சிறந்தது என்று சொல்ல ‘ஜோக்கர்’ தாங்குமா என்று தெரியவில்லை; ஆனால், படம் என்பதைத் தாண்டி நம் காலத்தின் சமூக மனநிலையை எங்கோ ஓரிடத்தில் அது பிடித்துவைத்திருந்ததுதான் அவ்வளவு பெரிய விமர்சனங்களுக்குக் காரணமானது இரு தரப்பிலும். புகழ்பெற்ற காமிக்ஸ் பாத்திரமான ஜோக்கரின் பரிமாணங்களை வேறொரு கோணத்தில் இந்தப் படத்தின் வழி அணுக முற்பட்டார் இயக்குநர் டோட் ஃபிலிப்ஸ். நாயகன் ஃபீனிக்ஸ் ஜோக்கராக வாழ்ந்தே காட்டினார். கலகக்காரக் கோமாளி 1.063 பில்லியன் டாலர் வசூல் வேட்டை நடத்தினான்.

வெனிசூலா பெருந்துயரம்

சம காலத்தின் பேரவலங்களில் ஒன்று என வெனிசூலா துயரத்தைச் சொல்லலாம். அதிபர் மதுராவால் அமெரிக்காவின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியவில்லை. பிடிவாதமான அவருடைய நிலைப்பாடுகள் நாட்டின் 90% மக்களை வறுமை நோக்கித் தள்ளியிருக்கிறது. பெரும்பாலான துறைகளை அரசுமயமாக்கும் அவருடைய முயற்சியானது உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் பெருக்கவில்லை. ஆனால், அமெரிக்கப் பொருளாதாரத் தடையின் விளைவாக வீழ்ச்சி வேகம் பெற்றது. அரசியல் அராஜகம், படுகொலைகள், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை காரணமாக இந்த ஒரு வருடத்தில் மட்டும் 53 லட்சம் பேர் அகதிகளாக நாட்டிலிருந்து வெளியேறினர்.

சூப்பர் டூப்பர் கம்ப்யூட்டர்

அதிவேக சூப்பர் டூப்பர் கம்ப்யூட்டரான ‘குவாண்டம் கம்ப்யூட்டர்’ உருவாக்கத்தில் ஏனைய நிறுவனங்களை முந்திக்கொண்டது கூகுள் நிறுவனம். ரைட் சகோதரர்கள் ஆகாய விமானத்தைக் கண்டறிந்ததற்கு இணையானதாகக் கருதப்படும் இந்தக் கணினியானது, பாரம்பரியக் கணினிகள் 10,000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும் முடிக்கத் திணறும் ஒரு கணக்கின் விடையை 3 நிமிடங்கள் - 20 விநாடிகளில் கண்டுபிடித்துவிடும் என்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டுகள் தயாரிப்பில் இது மிகப் பெரிய அளவில் பயன்படவிருக்கிறது.

துர்கனவுக்கு மரணம்

அமெரிக்க ராணுவப் படையின் முற்றுகையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் - பாக்தாதியின் முடிவு எழுதப்பட்டது. இராக்கில் ஒரு பழங்குடி சமூகத்தில் 1971-ல் பிறந்த அபு பக்கர் 2003-ல் அமெரிக்கப் படைகள் இராக்கை ஆக்கிரமித்தபோது மசூதியில் மத குருவாக இருந்தவர்; பின்னர் ஒரு குழுவில் சேர்ந்து, 2004-ல் அமெரிக்கப் படைகளால் கைதுசெய்யப்பட்டு காவல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர். அங்கு கிடைத்த பல தீவிரவாதிகளின் அறிமுகத்தின் விளைவாக இன்றைய ‘ஐஎஸ்’ அமைப்பின் தலைமை நோக்கி வந்தவர். பின்லேடனுக்குப் பிறகு பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகப் பார்க்கப்பட்ட இவருடைய வாழ்க்கை, பயங்கரவாதத்தின் தோற்றுவாயையும் முடிவையும் சுட்டும் மேலும் ஒரு குறியீடானது.

மக்களின் இறையாண்மையைச் சொல்லும் மஞ்சள் படை

பிரான்ஸ் ஆட்சியாளர்களை இந்த ஆண்டு தூங்கவிடாமல் செயல்பட வைத்தது மக்களின் தன்னெழுச்சியான மஞ்சள் படை ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும். மக்கள் வாங்கும் அன்றாடப் பண்டங்கள், எரிபொருள் விலையேற்றத்தைச் சுட்டிக்காட்டி எரிக்திரௌத், பிரிசில்லா லுடோஸ்கி என்போர் சமூக வலைதளங்களில் கவலையைப் பகிர்ந்துகொண்டனர். ‘ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்!’ என்று ஆரம்பித்த மக்களின் ஆதரவு, 30 லட்சம் பேர் வீதியில் இறங்க வழிவகுத்தது. பிரான்ஸின் வாடகை டாக்சி ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் எப்போதும் வைத்திருக்கும் மஞ்சள் நிறப் பட்டைதான் இவர்களை இணைக்கும் அடையாளம். அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும்; குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று தொடங்கி பொருளாதாரச் சமநீதி வழங்கப்பட வேண்டும், அரசின் எந்த சட்டத்தை ரத்துசெய்வதாக இருந்தாலும் திருத்துவதாக இருந்தாலும் மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்திய பிறகே இறுதிசெய்ய வேண்டும் என்று முடிந்த 42 கோரிக்கைகளுக்காக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர் மக்கள். சமூக ஊடகங்களின் முக்கியத்துவத்தை ஆட்சியாளர்களுக்குப் புரியவைப்பதாக மேலெழுந்தவாரியில் இந்தப் போராட்டங்கள் பேசப்பட்டாலும், ஆட்சியாளர்கள் தங்களை எப்படி ஆள வேண்டும் என்பதை மக்கள் சொல்லும் வெளிப்பாடாகவும் இது அமைந்தது.

நாளைய நம்பிக்கை

கோலியாத்துகளை எதிர்கொள்ளும் தாவீதாக 16 வயது கிரேட்டா தன்பர்க்கை சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் காண்பதில் எந்தத் தவறும் இல்லை; ஸ்வீடனைச் சேர்ந்த இந்த 16 வயது மாணவி தன் தார்மீகத்தால் உலகின் தலைவர்களை உலுக்குபவராக உருவெடுத்திருக்கிறார். நியூயார்க்கில் நடந்த ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாட்டில், “மக்களெல்லாம் துயருறுகிறார்கள். மக்கள் செத்து மடிகிறார்கள். ஒட்டுமொத்த உயிர்ச்சூழலும் சிதைந்தழிகிறது. பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆயினும் நீங்கள் பேசுவதெல்லாம் பணத்தைப் பற்றியும் நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்த கதைகளைப் பற்றியும்தான். எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு!” என்று உலகத் தலைவர்களை நோக்கி எழுப்பிய குரல் உலகெங்கும் உள்ள மக்களால் உச்சி முகரப்பட்டது. பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை வலியுறுத்தி ஸ்வீடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திலிருந்து வேர்விட்ட கிரேட்டாவாவைப் பின்பற்றி இந்த ஆண்டு பல நாடுகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘டைம்’ இதழ் கிரேட்டா படத்தை அட்டையில் வெளியிட்டு அவருக்குச் சூட்டிய புகழாரம்: ‘அடுத்த தலைமுறைக்கான தலைவர்!’

தொகுப்பு: சாரி, ஆசை, சிவசு, புவி, த.ராஜன் வடிவமைப்பு: சோ.சண்முகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x