Published : 27 Dec 2019 08:25 AM
Last Updated : 27 Dec 2019 08:25 AM

சௌந்தர்யக் கூச்சம்

ஷஹிதா

சௌந்தர்யக் கூச்சம் என்றொரு சொற்பிரயோகம். உங்களுக்கு எப்படியோ தெரியாது. எனக்கு இது சமீபத்தில்தான் அறிமுகம். அதிலும் கவிஞர் சுகுமாரனின் கட்டுரைகளில் மட்டும்தான் மீண்டும் மீளவும் இந்த வார்த்தையைப் பாவித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்போதெல்லாம் சௌந்தர்யம் என்ற வார்த்தையைக் கேட்கிறேனோ அப்போதெல்லாம் கூடவே பிசினாக அப்பிக்கொண்டே வருகிறது நாத்தியின் நினைவு.

என்னுடைய நான்கு நாத்திகளுள் கடைக்குட்டி இவள். மிகப் புது வார்த்தைகள், உணவுகள், மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவள். மருத்துவம் படித்துக்கொண்டிருந்த என் தம்பிக்கு மணம் பேசிவிட, அதற்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியை அவள் எட்டிவிடுவதற்காகக் கீழக்கரைக்கு அனுப்பி வைத்திருந்த இரண்டு வருடங்களில் சமையல், குரான் கல்வி, அவ்வூரின் பேச்சுவழக்கு எல்லாவற்றையும் கற்றுவந்தாள். ‘நோன்பு நோற்கிறாயா’ என்று எழுத்திலும், ‘நோன்பு வைக்கிறாயா’ என்று பேச்சிலும் இங்கு புழங்கும்போது அவள் மட்டும் ‘நோன்பு பிடி’ப்பாள். “நோன்பு என்னடி கோழியா பிடிக்கிறதுக்கு?” என்றால், “ஐயையோ அல்லாவே! நோன்பாய் இருக்கிறோம் என்கிற எண்ணத்தைப் பசியில் அலையும் ஹவா நஃப்ஸை நோக்கி ஓடவிடாமல் அல்லாஹ்வின் பாதையில் பிடித்து வைப்பது” என்று விளக்குவாள்.

ஐயையோ அல்லாவே

தொதல் என்றொரு பண்டம். கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அரிசியும் தேங்காயும் கூட்டிச் செய்யப்படும் ஒரு அல்வா. தேங்காயெண்ணெய் மணத்துடன் வாயில் இட்ட மறுகணம் தொண்டையோடு உறவாட வழுக்கிச்செல்லும் அதனுடன் போட்டிபோட அசோகாவாவது, இருட்டுக்கடையாவது... எங்கள் தாளிச்சோற்றிடம் மண்டியிடும் ஃப்ரைட்ரைஸின் கதிதான்! சூடாக வறுத்த பொரிகடலையில் நல்லெண்ணெயும் நாட்டுச்சீனியும் சேர்த்து உண்பதற்கு, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்த வெண்டைக்காய்க் குழம்புக்கு வறுத்த பருப்புத் துவையல்தான் உலகின் மிகச் சிறந்த காம்பினேஷன் என்பதையெல்லாம் கற்றுக்கொடுத்தாள் அவள். என்ன சுகக்கேட்டுக்கு எந்த ஐன் ஓதுவது, லைலத்துல் கத்ரின் இரவுக்கான தொழுகை அட்டவணை என்று அத்தைக்கேகூடத் தெரியாத அத்தனையும் அவள் அறிந்திருந்தாள்.

கொஞ்சம்போல பருத்த உடல்வாகு காரணமாக அவளுக்கு வந்த வரனெல்லாம் தட்டிக்கொண்டேபோனது. மணமாகி சூலாகி நிற்கும் அவள் தோழியருக்கு நெய்யில் பொரித்துச் செய்த குலாப்ஜாமூனை ஹவா நஃப்ஸில் பறக்கும் எங்கள் உயிரெல்லாம் சொட்டச்சொட்ட, அதற்காகவே கழுவித் துடைத்து மினுக்கி வைத்திருக்கும் கண்ணாடி சீசாவில் அடுக்கி, ஒரு சூஃபியைப் போன்ற கர்மசிரத்தையுடன் அடைத்து அனுப்பித்தருவாள்.

வீட்டின் கூடம் தாண்டி வெளியில் எட்டிப்பார்க்கும் அனுமதியற்ற எங்கள் பெண்கள் கூட்டத்துக்கே ஆன சங்கேதப் பேச்சுக்களுக்கு அவள் தேர்வுசெய்த வார்த்தைகளானது ஹாஸ்யமும், வாழ்வின் மீதான அடங்காக் காதலும் நிரம்பிய குழூஉக்குறிகள். அதிர்ச்சி, ஆச்சரியம், மகிழ்ச்சி, துயரம் என சகல உணர்வுகளின் வெளிப்பாட்டின்போதும் அவளுக்கே உரிய ஒரு மிழற்றுக்குரலில் “ஐயையோ அல்லாவே” என்பாள். “அல்லாவையும் சொல்லி, சைத்தானுக்கும் ஏன் குட்டி வாங்கு சொல்லுதே” என்று அத்தையும் மாமுவும் எத்தனை கடிந்தாலும் அந்த ‘ஐயையோ அல்லாவே’யை அவள் கைவிடவே இல்லை.

ஒவ்வொரு முறை ‘ஐயையோ’ சொல்லும்போதும் சின்னஞ்சிறிய அந்த சீன விழிகள் விரிந்து விகசிக்க, வலது கரத்தால் நெற்றியில் வந்து விழும் கூந்தல் கற்றையை ஒதுக்கி, தலையை ஒருபுறமாய்ச் சாய்த்து ஒரு பாவனை செய்வாள். பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாவனை மாறி இயல்புக்குத் திரும்பும் அந்த முகம், அதைக் குறிப்பாகக் கவனித்து அதன் அழகு பற்றி நான் சிலாகிக்கும் தருணங்களில் அவளில் ததும்பும் அந்தக் கூச்சமும் பிரியமும்... ஆ, அந்தக் கனிவை வார்த்தைகளில் எப்படிச் சொல்வது! பெண் பார்க்க வந்த ஒரு குடும்பத்தின் மருமகள், “பிள்ளை பெற்ற பெண்போல இருக்கிறாள்” என்று பேசியது தெரிந்தபோதும், ‘ஐயையோ அல்லாவே’தான்! எப்போதும்போல அல்லாமல் விரிந்த அந்த விழிகளில் விகசிப்பில்லை என்பது தவிர.

கால்வயசில் போன கழுதை

மிக எளிய அறுவை சிகிச்சை ஒன்று தோல்வியடைந்ததன் பக்கவிளைவாக மஞ்சள்காமாலை கண்டு மறைந்தாள் அவள். தன் ஐயையோ அல்லாவேயையும், நினைவுகளின் சுமையையும் உண்பண்டங்களின் ருசியில் ரசனையேறியிருந்த என்னில் இருத்திவிட்டுப் போய்விட்டாள். இந்தச் சிறிய உலகின் பெருந்தருணங்களை அனுபவிக்க இல்லாமல் ஒரு மஞ்சள்காமாலையிடம் போராடத் திராணியற்று கால்வயசில் போன கழுதை.

மரணத்தின் விளிம்பு வரை தன் கணவரின் உடனே சென்று மனவுறுதியுடன் அவரை மீட்டுக்கொண்டுவந்த என் தோழி ஒருவரைப் பற்றி இனி. இங்கு மிக அதிகமாக வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர். இனத்தைப் பற்றிப் பேசக் காரணம், அவர்களில் ஆண்களைப் பார்க்கிலும் பெண்கள் அதிக சாமர்த்தியசாலிகளாகவும் மனத்திண்மை மிக்கவர்களாகவும் இருப்பதை இத்தனை வருடங்களில் நான் கவனித்ததைச் சொல்லத்தான்.

அவர்களின் மூத்த மகன் பள்ளி இறுதி படிக்கும் சமயத்தில்தான், அவருக்கு இந்தக் கொடிய நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. நல்ல இளமையும், குறையில்லாத வாழ்க்கையுமாகக் காண்பவர் கண்களுக்குக் குளிர்ச்சியூட்டிய தம்பதிக்கு இந்நிலை. சேதி தெரிந்த மற்றவர்களே சகித்துக்கொள்ள இயலாமல் குலைந்துபோன நேரத்தில், மிகக் குறுகிய காலத்துக்குள் சமநிலைக்குத் திரும்பினாள் தோழி. நிலைமையைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தாள். எங்கள் சிறிய ஊரில், மிக இறுக்கமான அந்தச் சமூகத்தினரிடத்தில் சேதி பரவாமல் சாமர்த்தியமாகக் காத்தாள்.

சிகிச்சை காலத்திலும் பணிக்குச் சென்றுவந்தார் நோயாளி. அடிக்கடி விடுப்பு எடுக்க முடியாத அரசு உயர் அதிகாரி அவர். அதற்கான உறுதியையும் திறனையும் மனைவியின் மனத்திண்மையிலிருந்தும் கவனிப்பிலிருந்தும் பெற்றார். கேசம் உதிர்ந்து, முகம் சாம்பல் பூத்துப்போனபோதிலும் உடல் எடை குறையவிடாமல் அவரை அவ்வளவு கருத்தாய் போஷித்தாள் என் தோழி. துணையின் உடல்நலத்தைச் சீர்செய்துவிட வேண்டும் என்ற ஒரே ஓர்மையில் இருந்த அவளுக்கு உடல் சீர் கெடத் தொடங்கியது. மாதவிலக்கு இன்ன கிழமை, இன்ன நாள் என்றில்லாமல் தாறுமாறாகப் பெருக, கர்ப்பப்பையை நீக்குவது ஒன்றே வழி என்ற மருத்துவர்களிடம் அவகாசம் கேட்டு, கணவருக்கு ஆரம்பித்த சிகிச்சை பூரணமாக நிறைவேறும் வரை, வெறும் 4 கவுன்ட் ஹீமோக்ளோபின் மட்டுமே இருந்த நிலையிலும் திடமாக நடமாடினாள்.

ராதாவும் சிவாஜியும்

கணவர் தேறிய பிறகு இவளுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை அரங்கிலிருந்து அழைத்துவரப்பட்டவளைப் பார்த்துக்கொள்ள நான் இருந்த தெம்பில் அலுவலகம் சென்றார் அவளுடைய கணவர். மயக்கம் தெளிந்து சிறிது காபி அருந்தக் கொடுக்கச்சொல்லி செவிலியர் கூற, நான் எவ்வளவோ அழைத்தும் எழுப்பியும் கண்களைத் திறக்காதவள், பணி முடிந்து அவள் கணவர் அறைக்குள் வந்த நொடி கண் விழித்தாள். பெயரைச் சொல்லி அழைத்து, எழுப்பி அமர வைத்து, அவர் கொடுத்த அரை கப் காபியைப் பருகிவிட்டு மீண்டும் படுக்கையில் சரிந்தவளைப் பார்த்து, துப்புரவு செய்துகொண்டிருந்த பெண்மணியும் நானும் அசந்துபோனோம்.

மருந்தோ உணவோ... அப்பா எது கொடுத்தாலும் உடனே சாப்பிடுவதாகவும், தான் வெகு நேரமாகப் பழச்சாற்றுடன் அம்மாவிடம் மல்லுக்கட்டுவதாகவும் குறைபட்டுக்கொண்டான் தோழியின் மகன். “டேய்... நீ சர்ஜரி அன்னிக்கு இல்லாமப் போனியே. சரியான சீன் தெரியுமா? உங்கப்பா முதல் மரியாதை ராதாவாட்டம் ஆபீஸிலிருந்து வந்து ரூம் டோர் நாபில கைய வச்சதுதான்.. சிவாஜி மாதிரி கண்ணு படபடக்க உங்கம்மா மயக்கம் தெளிஞ்சி முழிச்சாங்க” என்றேன். மகனோடு சேர்ந்து தாயும் சிரித்தது அவ்வளவு நிறைவு. உதடுகளை விட்டுக் கொஞ்சம்போல வெளியில் நகர்ந்து, கூட்டத்திலிருந்து மெதுவாய் எட்டிப்பார்க்கும் ஒரு புறாவைப் போன்ற அந்தத் தெற்றுப்பல் அத்தனை அழகு. மனமொத்த தம்பதியரின் நினைவடுக்குகளில் புதைந்துகிடந்து அத்தருணத்தில் சடாரென்று வெளிப்பட்டுவிட்ட பிரியத்திலும் நோயிலிருந்து மீளும் ஆசுவாசத்திலும் கனிந்த அந்த முகம். ஆ! அதில் ததும்பியது அந்த சௌந்தர்யக் கூச்சம்.

- ஷஹிதா, ‘அன்புள்ள ஏவாளுக்கு’ நாவலின் மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: shahikavi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x