Published : 27 Dec 2019 07:03 AM
Last Updated : 27 Dec 2019 07:03 AM

இந்தியா வேகமாக வளர வேண்டும் என்றால் மாநிலங்கள் வேகமாக வளர வேண்டும்- விவேக் தேவ்ராய் பேட்டி

பூஜா மெஹ்ரா

விவேக் தேவ்ராய், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர். அரசு செலவுகளில் சிக்கனப் போக்கும், உயர் வருவாய்ப் பிரிவுகளில் இருக்கும் சில பிரிவினர் தாங்கள் அனுபவிக்கும் வரி விலக்குகளைத் தியாகம் செய்ய ஒப்புக்கொண்டால் வருமான வரிவிகிதம் 15% ஆகக் குறைக்கப்படும் என்பதை இந்த நேர்காணலில் கோடிட்டுக் காட்டுகிறார்.

பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதா? அல்லது பொருளாதார நிபுணர்கள் சொல்வதுபோல வளர்ச்சிநிலைத் தேக்கத்தில் உள்ளதா?

மூளையைக் குழப்பும் விளக்கங்களுக்குள் செல்ல வேண்டியதில்லை. ஏனெனில், 5% அல்லது அதற்கு நெருக்கத்தில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு இருக்கப்போகிறது. அடுத்த ஆண்டு 6% இருக்கும். வளர்ச்சி வீதம், நிதி திரட்டல் செயல்முறை, வரி வருவாய் இன்னும் பிறவற்றை அதிகரிப்பதில் இதற்கான விளைவுகள் இருக்கும்.

மந்தநிலைக்கான காரணங்கள் தொடர்பாக ஒத்த கருத்தோ தெளிவோ அரசுக்கு வெளியேயும் உள்ளேயும் இல்லையே?

அமைப்புரீதியானது காலச்சுற்றில் ஏற்படும் நிகழ்வு, தேவை விநியோகம் சார்ந்த காரணங்கள் என்று எதிரெதிர் நிலைகளில் இந்தப் பிரச்சினைகளை வைத்துப் பார்க்க முடியாது. கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம். தொடர்ந்து வந்த நான்கு வருடங்களில் ஜிடிபி 9% இருந்தது. அந்த நான்கு வருடங்களிலும் ஏற்றுமதிக்கும் ஜிடிபிக்குமான விகிதம் 20%. ஏற்றுமதிகள் டாலர் அடிப்படையில் 15% வளர்ந்தது. சில சமயங்களில் 19% வரை சென்றது. 20% வரை போன சமயங்களும் உண்டு. குறைந்தபட்சம் ஜிடிபியில் 3% வளர்ச்சிக்குக் காரணம் ஏற்றுமதிதான். 9%-லிருந்து அந்த ஏற்றுமதி சார்ந்த 3%-ஐ எடுத்துவிட்டால் 6% ஆக இருக்கிறது. ஏற்றுமதி சரியாக இல்லையானால் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6% இருக்கும்.

தொழிற்சாலைகளின் உற்பத்தி, எதிர்மறை வளர்ச்சிக்குள் வீழ்ந்துள்ளது இல்லையா?

எதிரெதிர் புள்ளிகளில் இந்த விஷயங்களைப் பார்க்க முடியாது. ஒரு போக்கைப் பார்ப்பதற்கோ, அது சார்ந்த பொதுத் தீர்மானத்துக்கு வருவதற்கோ, காலாண்டு அளவிலான புள்ளிவிவரங்களைவிட ஆண்டு முழுவதும் இருந்த புள்ளிவிவரங்களையே பார்ப்பேன். காலாண்டுப் புள்ளிவிவரங்கள் திடமான கருத்தைச் சொல்வதற்கு உகந்தவை அல்ல. காலாண்டுக் கணக்குகளின்படி மதிப்பிட்டால், அரசு செலவுகளிலிருந்துதான் பெரும் பகுதி வளர்ச்சி இருந்திருக்கிறது. ஆனால், அரசு செலவுக்கு வரைமுறைகள் உண்டு. நிதிப் பொறுப்பு, நிதிநிலை மேலாண்மைச் சட்டத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதைப் பற்றிக்கூட நான் பேசவில்லை; தற்போதைய சூழ்நிலைகளில் அது எப்போதும் சாத்தியமானதுதான். ஆனால், அதற்கும் வரைமுறைகள் உள்ளன. அரசு செலவுகளில் பெரும் பகுதி ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டது தொடர்பானது. சம்பளங்கள், ஓய்வூதியங்கள், வட்டித் தொகை வழங்கல், மத்திய அரசு அளவில் நிதியளிக்கப்படும் திட்டங்கள், சட்டரீதியாகக் கட்டாயமாக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவை அவை. அரசு செலவுகள் என்பவை மத்திய அரசினுடையதை மட்டும் குறிக்கவில்லை.

மத்திய அரசின் செலவுகளைவிட மாநில அரசுகளின் செலவுகள் இரண்டு மடங்கு இல்லையா?

ஆம், மிகச் சரி. அதனால், மாநில அரசுகள் செய்யும் செலவுகளில் நாம் கூடுதலாக அக்கறைகொள்ள வேண்டும்.

மத்திய அரசிடமிருந்து நிதி ஊக்குவிப்புகளை எதிர்பார்க்க முடியாதில்லையா?

ஊக்குவிப்பு என்று எதைக் கருதுகிறோம் என்பதைப் பொருத்தது அது. செலவுகளைக் குறைக்காவிட்டால், ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைந்துள்ள நிலையில் பற்றாக்குறை அதிகமாகும். வரிவிதிப்பு சார்ந்து பார்த்தால், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் எந்தெந்தப் பொருட்களைக் கொண்டுவரலாம் என்பது ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்க வேண்டிய முடிவாகும். நேரடி வரி விகிதங்களுக்கான மறுபரிசீலனை இருக்கலாம் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். ஏனெனில், நிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைந்துள்ளன. நடுத்தர, சிறிய, குறுந்தொழில் துறையினர் கார்ப்பரேட் வரி கட்டுவதில்லை. அவர்கள் தனிநபர் வருமான வரி செலுத்துகின்றனர். இருப்பினும், கார்ப்பரேட் வரி விகிதங்களைப் போல, தனிநபர் வரி விகிதங்களில் குறைப்போ விலக்கோ செய்ய முடியாது. நிதிச் சலுகையை விரும்பும் ஒவ்வொருவரும் தனது துறைக்கு ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிவிதிப்பில் தள்ளுபடியைக் கேட்பார்கள். அதை நிறைவேற்றினால், அமைப்பைத் தூய்மைப்படுத்தவே முடியாது. அது இப்போது அவசியமானது. வரி விகிதங்களைக் குறைப்பது மட்டுமே புத்திசாலித்தனமான நிதிச் சலுகையாக இருக்க முடியும். நேரடி வரிகள் அவற்றின் தன்மையிலேயே வளர்ச்சி அம்சத்தை வைத்திருக்கிறது. அதனால், எல்லோருக்கும் 15% வரி விதிக்க முடியாது. அதைப் போலவே, 15% வரி விதிப்போடு சலுகைகளையும் சேர்த்துப் பெற முடியாது. விலக்குகள் அளிப்பதை நிறுத்தினால்தான் அமைப்பைச் சுத்திகரிக்க முடியும்.

வீட்டுக் கடன், வைப்பு நிதி முதலீடுகள், வரி சேமிக்கும் வைப்பு நிதி போன்றவற்றுக்கான விலக்குகள் நீக்கப்படுமா?

நீங்கள் ஒரு தரப்புக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடங்கினால் இன்னொரு தரப்புக்கும் வேண்டும் என விவாதம் எழும். இதிலிருந்து மீள்வதுதான் ஒரே வழி. விலக்குகளால் பயன்பெறப்போகிறீர்களா அல்லது குறைந்த வரி விகிதத்தால் பயன்பெறப்போகிறீர்களா? இதுதான் தேர்வாக இருத்தல் வேண்டும்.

நேரடி வரி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் நுகர்வை அதிகப்படுத்தி, அதேநேரத்தில் மறைமுக வரியான ஜிஎஸ்டி வரிவிகிதங்களை அதிகப்படுத்துவது முரண்பாடு இல்லையா?

ஜிஎஸ்டி வரிவிதிப்பு எளிமையாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ஜிஎஸ்டி கவுன்சிலால் எத்தனை வரி விகிதங்களில் முடிவெடுக்க முடியும். மூன்று விகிதங்களில் முடிவெடுக்கலாம் என்றால் 6, 8 மற்றும் 12% என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்று சொல்லலாம். தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்ரமணியன் இருந்தபோது, அரசுக்கு வரும் வருவாய் குறையாதவண்ணம் ஜிஎஸ்டி விகிதம் சராசரியாக 16% இருக்குமாறு ஒரு முறைப்பாட்டைச் செய்தார். இன்று சராசரி ஜிஎஸ்டி விகிதம் 11.6%-ஆக உள்ளது. ஏனெனில், பெரும்பாலான பொருட்களுக்கு வரி பூஜ்யம். ஜிஎஸ்டியை எளிய வரியாக்க, அதிகபட்ச விகிதமான 28%-ஐ 18% ஆக்க வேண்டும். அதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், பூஜ்ய நிலையில் இருக்கும் பொருட்களுக்கான வரியும் அதிலிருந்து உயர வேண்டும். ஆனால், அதை யாரும் விரும்பவில்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக எனக்குத் தெரியவில்லை. சில பொருட்களுக்கான 12% ஜிஎஸ்டி வரி விகிதம் 18%-க்கு உயர்த்தப்படும் என்று செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. 5% ஜிஎஸ்டி விகிதத்தில் உள்ள சில பொருட்கள் 12% விகிதத்துக்குள் செல்லும் என்றும் செய்திகள் வருகின்றன. வளர்ச்சி மந்தநிலையின் மத்தியில் உள்ள நிலையில், அது மோசமான யோசனையாக இருக்கும்.

நீங்கள் பரிந்துரைப்பது என்ன?

ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகார வரம்பில் வருவது அது. இழப்பீடு உத்தரவாதத்தால் ஊக்கத்துக்கு எதிரான சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது. நாம் அதில் சிக்கிக்கொண்டோம். என்னைப் பரிந்துரைப்பதற்குச் சொன்னால் பொருளாதார வியலாளராகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு, ஒற்றை வரி விகிதத்தை சிபாரிசு செய்வேன். ஏழைகள் வாங்குவதற்கான பொருட்கள் தொடர்பில் உங்களுக்குக் கரிசனம் இருக்கு மானால், மறைமுக வரிக் கொள்கை வழியாக அதைச் செய்யவே கூடாது. ஆனால், உலகில் எந்த நாட்டிலும் மறைமுக வரி விகிதம் ஒற்றையாக இல்லவே இல்லை. மூன்று நிலைகளில் அதைச் செயல்படுத்தலாம். பொது வரி விகிதம், ஆடம்பரப் பொருட்களுக்கான உயர் வரிவிகிதம், அத்தியாவசியப் பொருட்களுக்கான குறைந்த வரி விகிதம் ஆகிய நிலைகளில் செயல்பட வேண்டும்.

பொருளாதார நிபுணர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் பொறுப்பாகவும் நிதானத்தோடும் தங்கள் கவலைகளை வெளிப்படுத்திவருகிறார்கள். 1991 முதல் 2011 வரையிலான நேர்மறையான உணர்வுநிலை திரும்ப வர வேண்டுமென்று கூறுகிறார்கள்?

பரந்துபட்ட யதார்த்தத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, எதிர்மறையான உணர்வுகளால் யாரும் நிலைகுலையத் தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து. 5 அல்லது 6 சதவீதம் ஜிடிபி வளர்ச்சி விகிதம் இருந்தும் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்பது மட்டுமே கவலைக்குரியது. இன்னும் இரண்டு காலாண்டுகள் பொறுப்போம், அதற்குப் பிறகு நிச்சயம் நிலைமை சீராகும்.

© தி இந்து, தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x